Friday, September 29, 2017


கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்
பதிவு செய்த நாள்29செப்
2017
01:43




இன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும், மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை செய்பவள் தேவியே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே!

அம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியிலும் வரும் நவராத்திரியில், அவளை வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது.

அலங்காரம்

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக, சித்திதாத்ரியாக வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவற்றை தரித்த கோலத்தில், அம்பிகையை பூஜிக்க வேண்டும். சிவசக்தி வடிவமாகிய காமேஸ்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றம். அன்ன வாகனத்தில் இருப்பவள்; வாக்கிற்கு அதிபதியானவள்; ஞான சொரூபமானவள். கல்விச்செல்வம் பெற, அன்னையின் அருள் அவசியம்.

கடைசி நாளான இன்று, எட்டு சித்திகளையும் உள்ளடக்கி, சித்திதாத்ரி விளங்குகிறாள் எனக் கூறப்படுகிறது. தாமரை மீது வசிக்கும் இவளை, சாதுக்கள், யோகிகள், சித்தர்கள் வணங்குகின்றனர்.

அலங்கார காரணம்

சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சக்தியையும் தருபவள் என்று பொருள். இவளை வழிபாடு செய்த சிவன், அனைத்து சித்திகளையும் பெற்று, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என, தேவி புராணம் கூறுகிறது
அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால், வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். இவற்றைப் பயிற்றுவிக்கும் குருவுக்கும் மரியாதை செய்வர். ஆகவே, ஆயுத பூஜை
தினம் என்று, இதற்குப் பெயர் வந்தது.

அதனால் தான் தாமரை மலரில் அமர்ந்து, இடது இரண்டு கரங்களில், கதை, சக்கரமும், வலது இரண்டு கரங்களில், தாமரை, சங்கு ஏந்தியவளாகவும் காட்சி தருகிறாள்.

வழிபாடு

படிக்கும் புத்தகங்களை அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்துப் பூஜிப்பது வழக்கம். இன்று வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும், சந்தனம், குங்குமம் இடுவது வழக்கம்.

கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, அவசியம், சரஸ்வதி பூஜை செய்ய வேண்டும். வண்டி வாகனங்களைத் துடைத்து பொட்டு வைத்து பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவது வழக்கமாக உள்ளது.

கோலம்

பச்சைக் கற்பூரம் கொண்டு, ஆயுத கோலம் போடுவது சிறப்பு.

மலர்கள்

மல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை, அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.

பாசிப் பயறு சுண்டல், கல்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு, உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறி வகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம்.

இந்தளவிற்கு விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்த்தித்து, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைப் பூஜிக்கலாம்.பூஜை முடிவில், யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தருவது நல்லது. பக்தி ஒன்றே,அம்பிகையிடம் நாம் வேண்டுவது; ஆடம்பர அலங்கார செலவினங்களை அல்ல.

மகாகவி பாரதியார், நவராத்திரி பாடல்கள் மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார்.

அதில் நமக்கான ஒரு செய்தியாக...'இந்த நவராத்திரி பூஜைகளின் நோக்கம், உலக நன்மை மட்டுமே. நவராத்திரி காலத்தில் யோக மாயை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு துஷ்டரை அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைக்கிறது.

'அந்த சக்தியால் தான் உலகம் வாழ்கிறது. நாம் வளமான இன்பமான வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் அந்த பராசக்தியை வேண்டுகிறோம்' என்று அருமையாக பாடி விட்டுச் சென்றுள்ளார்.

'நவராத்திரி நாயகியரை வணங்கிப் போற்றி, நாளும் நாளும் உயர்வோர், நன்மையைப் பெறுவரே' என்ற ஞானசம்பந்தர் சொற்படி, நவராத்திரி விரதங்கள், பூஜைகள் கடைபிடித்து, நல்பலன்களை பெறுவோம்.சண்டி தேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை முடித்த பின், பூசணிக்காயினுள் குங்குமம் வைத்து, வாசலில் உடைக்க வேண்டும்.
அதை அப்படியே, நடு சாலையில் விட்டு விடாமல், சிறிது நேரத்திற்குப் பின், சுத்தம் செய்து விடுவது நல்லது.

வரம் தரும் நவராத்திரி

சரஸ்வதி பூஜை வழிபாடு

வீட்டிலுள்ள நிலை, கதவு,ஜன்னல் எல்லாவற்றையும் துாய்மை செய்து அவற்றிற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜையிட்டு பட்டுத்துணி விரித்து, புத்தகம், பேனா, பணப்பெட்டி முதலியவற்றை வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன் மீது வீட்டில் உபயோகிக்கும் அரிவாள்மனை, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கழுவி வைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக் கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே கழுவி வைத்து அலங்கரிக்கலாம்.

மாடு, கன்றுகளை தொழுவத்தில் குளிப்பாட்டி சந்தனம், குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களை அவ்வாறே துாய்மை செய்து அலங்கரிக்கவும்.

பூஜை பொருட்கள்

குங்குமம், சந்தனம், விபூதி, உதிரிப்பூக்கள், பூச்சரங்கள், மாலைகள், பொரிகடலை, சர்க்கரை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, சூடம், பத்தி, சாம்பிராணி, குத்துவிளக்குகள், கைமணி தீர்த்த பாத்திரம் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும்.
விளக்கேற்றிய பின் மணியடித்து பூஜையைத் துவக்கவும்.

மஞ்சள் பொடி அல்லது பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல்லால், 'ஓம் கணபதயே நமஹ' என்று அர்ச்சனை செய்து துாபம் காட்டி பழம், வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும். குழந்தைகளுக்கு படிப்பு, தொழில், வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்கிறோம் என விநாயகரிடம் வழிபட வேண்டும்.

புத்தகங்களை பூக்களால், 'ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவ்யை நமஹ' என்று அர்ச்சிக்கவும். பேனா, பென்சில்களில், 'ஓம் லேகினீ சக்தயே நமஹ' என்றும், அரிவாள், அரிவாள்மனை, கத்திஇவற்றை,
'ஓம் கட்கினீ சக்தயே நமஹ' என்றும்,மண்வெட்டியில்,'ஓம் குந்தாளி சக்தயே நமஹ' என்றும், ஏர்கலப்பையில், 'ஓம் ஹலாயுத சக்தயே நமஹ' என்றும், பசுமாட்டை, 'ஓம் கோமாதா தேவ்யை நமஹ' என்றும், காளையை, 'ஓம் ரிஷபதேவாய நமஹ' என்றும், இரு சச்கர, நான்கு சக்கர மற்றும் மாட்டுவண்டிகளை,'ஓம் த்வரிதா சக்தயே நமஹ' ஓம் சகட தேவதாயை நமஹ என்றும் வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எங்கும்,'ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ' என்றும்,
இயந்திரங்கள், மோட்டார்கள் எல்லாவற்றிலும்,'ஓம் ஸ்ரீதுர்க்காதேவ்யை நமஹ' என்றும் அர்ச்சனை செய்து மணியடித்தவாறு சாம்பிராணி துாபம் எல்லாவற்றிற்கும் காட்டவும்.

ஒரு பாத்திரத்தில் நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு, பூஜை நடத்திய இடங்களுக்கு மணியடித்தபடியே சென்று, நீரால் மூன்று முறை சுற்றி நிவேதனம் செய்து வழிபடவும். தேங்காய் உடைத்த பின், சூடம் ஏற்றி மணியடித்தபடி புத்தகம் முதல் எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும். பிறகு, குடும்பத்தினர் கையில் உதிரிப்பூக்கள் கொடுத்து சரஸ்வதி பாதத்தில் துாவச் சொல்லி வழிபடவும். விபூதி, குங்குமம், பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லாருக்கும் வழங்கிய பின் ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

மயிலாடுதுறை

பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து
உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே!
தஞ்சை - திருச்சி சோதனை ஓட்டம் : 30ல் ரயில்கள் நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்29செப்
2017
01:03

விருத்தாசலம்: தஞ்சை - திருச்சி இருவழி பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதால், 30ம் தேதி, ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர் - திருச்சி இடையே, இருவழி ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன. பொன்மலை - சோழகம்பட்டி இடையிலான, 20 கி.மீ., பாதையில், 30ம் தேதி, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் நடக்கிறது.
இதனால், அன்று ஒரு நாள் மட்டும், திருச்சி மார்க்கத்தில் வந்து செல்லும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, திருச்சி - சென்னை சிறப்பு ரயில், 30ம் தேதி, மாலை, 3:35 மணிக்கு பதிலாக, 2:00 மணி நேரம் தாமதமாக, 5:35 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து, விருத்தாசலம், சேலம், கரூர் மார்க்கமாக திருச்சி செல்லும். இதேபோல், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், 29ம் தேதி, திருச்சியில் இருந்து, கரூர், சேலம், விருத்தாசலம் வழியாக சென்னை செல்லும்.
மேலும், அன்று, கடலுார் - திருச்சி பாசஞ்சர் ரயில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்; திருச்சி - கடலுார் பாசஞ்சர் ரயில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
திரிலம் ரயில் நிலையத்தில் காதலருக்கு தடை!
பதிவு செய்த நாள்29செப்
2017
00:50

திரிசூலம் ரயில் நிலையத்தில், காதலர்களுக்கு தடை போடப்பட்டு உள்ளது.
சென்னை, திரிசூலம் ரயில் நிலையத்தில், காதலர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதும், மாலை நேரத்தில், எதிரில் உள்ள ஆபத்தான காட்டு பகுதிக்குள் சென்றனர்.

இது குறித்து, நமது நாளிதழில், 'திரிசூலம் ரயில் நிலையம் காதலர் பூங்காவானது' என, செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நிலையத்தில், ரயில் பயணத்திற்கு தொடர்பின்றி அமர்ந்திருக்கும் நபர்கள் வெளியேற்ற படுகின்றனர்.

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறியதாவது: ரயில் டிக்கெட் வைத்திருப்பதால், அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. சிலர், எதிரில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டுபகுதியில், ஏதும் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மின் கட்டணம் செலுத்த கிடைக்குமா அவகாசம்?
பதிவு செய்த நாள்29செப்
2017
00:31


தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோரிடம் எழுந்துள்ளது.

வீடுகளில், மின் வாரிய ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்
.
இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின், அபராதத் தொகையுடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் இணைப்பு வழங்கப்படும். ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று முதல், வரும் திங்கள் வரை, தொடர்ந்து அரசு விடுமுறை.

மின் நுகர்வோர் கூறியதாவது: இணையதளம், மொபைல், 'ஆப்' வசதிகளை, மின் வாரியம் ஏற்படுத்தி இருந்தாலும், பலரும், மின் கட்டண மையங்களில் தான், கட்டணத்தை செலுத்துகின்றனர். இது, அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள், விடுமுறையாக இருந்தால், அதற்கு அடுத்து வரும், முதல் வேலை நாளில், அபராதம் வசூலிப்பதில்லை. தற்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என, தொடர்ந்து விடுமுறை. இந்த நாட்களில், கட்டணம் செலுத்த கடைசி நாள் உள்ள நுகர்வோர், செவ்வாய் கிழமை கட்டணம் செலுத்தினால், அபராதத்தை தவிர்ப்பர். 

தொடர் விடுமுறையால், பலர், ஊர்களுக்கு சென்றுள்ளனர். மாத இறுதியில் பண்டிகைகளும் வந்ததால், செலவு அதிகம் இருக்கும். அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'ஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

பதிவு செய்த நாள்29செப்
2017
00:06

கல்லுாரிகளில், 'ஆன் - லைன்' படிப்பு துவங்க, அனுமதி பெறுவதற்கான காலக்கெடு, அக்., ௩௧ வரை நீடிக்கப்பட்டு உள்ளது. சிறந்த வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்களால் நடத்தப்படும், 'ஸ்வயம்' என்ற, ஆன் - லைன் படிப்பு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு, 'ஸ்வயம் ஆன் - லைன்' படிப்பை நடத்த, கல்லுாரி, பல்கலைகளின் பேராசிரியர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. இதையடுத்து, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, கல்லுாரிகள், பல்கலைகளில், 'ஆன் - லைன்' படிப்பை கட்டாயமாக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு அனுமதி பெறுவதற்கு, செப்., ௨௫க்குள் விண்ணப்பிக்க, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. 

தற்போது, அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும் மாணவர்களை சேர்க்கும் வகையில், அனுமதி பெறுவதற்கான அவகாசத்தை, அக்., 31 வரை நீடித்து, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

- நமது நிருபர் -
சிறப்பு பஸ்கள் இயக்குவதில் தொழில் நகரங்கள் புறக்கணிப்பு
பதிவு செய்த நாள்
செப் 29,2017 02:02



சேலம்: சரஸ்வதி பூஜை, தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவதில், தொழில் நகரங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது, தென் மாவட்ட மக்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

தற்போது, வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களும், சென்னையில் இருந்து இயக்குவதற்காக, திருப்பி விடப்பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து, சேலம் மார்க்கமாக, தென் மாவட்டங்களுக்கு, 42 விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 22 பஸ்களின் முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சென்னைக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. மீதமுள்ள, 26 பஸ்களின் முன்பதிவு அனைத்தும், செப்., 27 துவங்கி, அக்., 2 வரை முடிந்துவிட்டன. நேற்று முன்தினம், தென் மாவட்டங்களுக்கு சென்ற முன்பதிவு செய்யாத பயணியர், வேறு வழியின்றி, நின்று கொண்டும், பஸ்சின் உள்ளே உள்ள வழித்தடத்தில் உட்கார்ந்தும் சென்றனர். இதே நிலை, தீபாவளி பண்டிகையின் போதும் தொடரும் என்பதால், தென் மாவட்ட பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வி.வி.ஐ.பி.,க்கள் கவனம் திரும்புமா? :

திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில், மளிகை கடை உட்பட பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பண்டிகை நேரத்தில் கூட, நிம்மதியாக சொந்த ஊர் சென்று வர முடியவில்லை. தமிழகத்தின் தற்போதைய, வி.வி.ஐ.பி.,க்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோர், சிறப்பு பஸ்கள்இயக்குவதில், தொழில் நகரங்களுக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமலையில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் முடி காணிக்கை
பதிவு செய்த நாள்29செப்
2017
00:21




திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், ஒரே நாளில், இரண்டு லட்சம் பேர், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். திருமலையில், நேற்று முன்தினம் நடந்த கருடசேவையை காண, திரளான பக்தர்கள் கூடினர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் உள்ள, தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்கள், 24 மணிநேரமும் திறந்திருந்தன. இங்கு, 250 பெண்கள் உட்பட, 1,400 நாவிதர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருடசேவை அன்று மட்டும், 2.30 லட்சம் பக்தர்கள், தங்கள் தலை முடியை, ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திஉள்ளனர். தேவஸ்தான வரலாற்றில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர், ஒரே நாளில், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியதாக, இதுவரை பதிவுகள் இல்லை.

NEWS TODAY 31.01.2026