Thursday, December 7, 2017

டிசம்பர் 8 மின் தடை

By DIN | Published on : 07th December 2017 04:42 AM

நாளைய மின்தடை: அம்பத்தூர், அயனம்பாக்கம்
பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (டிச. 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பத்தூர், அயனம்பாக்கம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 


அம்பத்தூர் பகுதிக்குட்பட்ட அலையன்ஸ் திட்டம், அன்னை நகர், வாகை நகர், சிவகாமி நகர், டி.வி.எஸ் நகர், கண்டிகை, லேக் வியூ தோட்டம், பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, வச்சலா நகர், மேட்டு தெரு, காவியா நகர், சாரதா நகர், எல்லையம்மன் நகர், கோபாலகிருஷ்ணன் நகர், என்.ஏ.எஸ் தோட்டம், சிவலிங்கபுரம், சக்தி நகர், சீதா அம்மன் நகர், புத்தகரம், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இராது.


அயனம்பாக்கம் பகுதிக்குட்பட்ட சென்னை புது நகர், புதுசெஞ்சுரி நகர், செட்டி தெரு, கோலடி பிரதான சாலை, கொன்ராஜ் குப்பம், பி.கே.எம். தெரு, ஏட்டீஸ்வரன் தெரு, பாடசாலை, விஜயா நகர், ஈடென் அவென்யூ, சிவபாதம் தெரு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் றுத்தப்படும்.


வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

By DIN | Published on : 07th December 2017 01:23 AM |

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) , வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) ஆகியவற்றில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல, நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


அதன்படி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 6 சதவீதமாக நீடிக்கிறது. இதேபோல, வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதமும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 5.75 சதவீதமாக நீடிக்கிறது. நிகழாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாகவும் பணவீக்கம் 4.7 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.


இதுதொடர்பாக உர்ஜித் படேல் கூறுகையில், 'நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான அனைத்து அம்சங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. எதிர்வரும் நாள்களில் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனிக்கும்' என்றார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி வகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற கூட்டங்களில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


இதேபோல, வர்த்தகர்களுக்கு, டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கான கட்டணங்களை குறைக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வர்த்தகர்கள், டெபிட்- கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாட்ஸ்-அப் குரூப் அட்மினாக இருந்தால் இந்த சித்து வேலைகள் தெரிந்திருக்க வேண்டுமே?

By DIN | Published on : 05th December 2017 05:46 PM




பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூகத் தளமான வாட்ஸ்-அப் பல புதிய வசதிகளைக் கொண்டு வரும் வகையில் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

வாட்ஸ்-அப் கொண்டு வரவிருக்கும் புதிய வசதிகள் மூலம், வாட்ஸ்-அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கப் போகிறது.

அதாவது, ஒரு குரூப்பில் இருக்கும் ஒரு அல்லது ஒரு சில நபர்கள், அந்த குரூப்பில் எந்த தகவலையோ, புகைப்படத்தையோ, விடியோ அல்லது ஜிஃப் பைல்களையோ பகிர்ந்து கொள்ள முடியாத வகையில் தடை செய்ய இயலும். அப்படி ஒருவர் அல்லது பலர் தடை செய்யப்பட்டால், அவர்கள் அந்த குரூப்பில் வரும் தகவல்களைப் படிக்க மட்டும் முடியும். எந்த விஷயத்தையும் பதிவு செய்யவோ பதிலளிக்கவோ முடியாது.

இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், பல குரூப் அட்மின்கள் நிம்மதியாக உறங்கலாம்.

இது வரப்போகும் விஷயம். குரூப் அட்மின்களுக்காக ஏற்கனவே இருக்கும் சில யுக்திகள் என்னவென்று பார்க்கலாம்:
நீங்கள் அனுப்பிய செய்தியை குரூப்பில் யாரெல்லாம் படிக்கிறார்கள், யாரெல்லாம் படிக்காமல் புறந்தள்ளுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?

வழி இருக்கிறது. அதாவது ஒரு குரூப்பில் நீங்கள் பதிவிட்ட செய்தியை தேர்வு செய்து தொடர்ந்து பிடித்திருங்கள். அப்போது மேலே 'i' என்ற ஆங்கில வார்த்தையுடன் வருவதுதான் இன்போ என்பதன் சுருக்கம்.. அதனை செலக்ட் செய்து பார்த்தால், அதில் நீங்கள் அனுப்பிய தகவலை படித்தவர்கள் யார், இதுவரை படிக்காதவர்கள் யார் என்று தனித்தனியாக பட்டியல் வரும்.

உங்களால் அட்மினாக இருக்க முடியவில்லை பதவி மாற்றம் செய்யலாம்
அதாவது, நீங்கள் உருவாக்கிய குரூப்பின் அட்மினாக தொடர்ந்து இருக்க விரும்பவில்லை, குரூப்பை டெலிட் செய்யவும் முடியாது. எனவே, உங்கள் குரூப்பில் இருக்கும் மறறொருவரை அட்மினாக மாற்றிவிடலாம்.

உங்கள் குரூப்பில் இருக்கும் நபர்களின் லிஸ்ட் பகுதிக்குச் சென்று, அதில் நீங்கள் யாரை அட்மினாக நியமிக்க விரும்புகிறீர்களோ, அவரது பெயரை தேர்வு செய்து, 'மேக் குரூப் அட்மின்' என்பதை க்ளிக் செய்தால் குரூப் அட்மினாக மாற்றிவிடலாம்.

குரூப்பில் பதிவிடும் தகவலை டெலீட் செய்ய
தனிப்பட்ட வாட்ஸ்-அப் சாட்டிலும் சரி குரூப் சாட்டிலும் சரி, நீங்கள் பதிவிடும் தகவல்களை நீங்கள் விரும்பாவிட்டால் அதனை டெலீட் செய்து விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்களைக் கூட ஒரே நேரத்தில் டெலீட் செய்யலாம். அதற்கு அந்த தகவலை தேர்வு செய்து மேலே இருக்கும் டெலீட் ஐகானை அழுத்தினால் போதும், அது அனைவரது வாட்ஸ்-அப் சாட்டில் இருந்தும் அழிந்து போகும்.

வாட்ஸ் - அப் குரூப்பை நிரந்தரமாக டெலீட் செய்வது சற்று டிரிக்ஸான காரியம்தான்.

நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ்-அப் குரூப்பை நிரந்தரமாக டெலீட் செய்ய வேண்டும் என்றால், அந்த குரூப்பின் அட்மினான நீங்கள் எக்ஸிட்டிங் எ குரூப் என்பதை தேர்வு செய்தால் போதும் அது டெலிட் ஆகிவிடும் என்று நினைத்திருந்தீர்களானால் அது தவறு. அதற்கு பதிலாக, இதுபோன்ற குரூப்களில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் வெளியேற்றிவிட்டு பிறகுதான் நீங்கள் அந்த குரூப்பில் இருந்து எக்ஸிட் ஆக வேண்டும்.

வாட்ஸ்-அப் குரூப்பை மியூட்டில் போட முடியுமா?
நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ்-அப் குரூப்பை 8 மணி நேரம் அல்லது 1 வாரம் அல்லது 1 ஆண்டுகள் கூட சைலெண்டில் போட முடியும். குரூப் சைலென்ஸிங் செய்வது என்பது, இந்த குரூப்பில் தகவல்கள் வரும் போது உங்களுக்கு அதற்கான அறிவிப்புகள் வருவதைத் தவிர்க்கும். அதே சமயம், அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவாகும் தகவல்களை நீங்கள் வேண்டும் போது படித்தும் கொள்ளலாம்.

வாட்ஸ்-அப் சாட் தகவல்களை நட்சத்திரக் குறியிட்டு பாதுகாக்கலாம். எப்போது அந்த தகவல்கள் தேவைப்படுமோ அப்போது அதனை எளிதாக தேடி எடுக்க இது வசதியாக இருக்கும்.

இதனைச் செய்ய, ஒரு தகவலை தேர்வு செய்துவிட்டு, மேலே தான்றும் ஸ்டார் ஐகானைத் தேர்வு செய்தால், அந்த தகவல் ஸ்டான் ஸ்டார் தகவலாக சேமிக்கப்படும்.

காலண்டரில் இருந்து தேதிகளை இணைக்கலாம்
அலுவலக குரூப்பிலோ அல்லது நண்பர்கள் குரூப்பிலோ முக்கியமான சந்திப்பு அல்லது கூட்டம் பற்றி விவாதித்திருக்கலாம். இந்த கூட்டங்கள் பற்றிய தேதிகளை எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியாது. எனவே, வாட்ஸ் அப் குரூப்பிலேயே அவ்வப்போது காலண்டரில் இருந்து தேதிகளை சேர்க்கும் வாய்ப்பும் உள்ளது.

தேடும் வாய்ப்பு உண்டு
அதாவது, உங்களது சாட் மெசேஜ்களில் இருக்கும் தகவல்களை தேடும் வசதி உள்ளது. உங்களுக்குத் தேவையான தகவலைப் பெற நீங்கள் சாட் மெசேஜ் முழுவைதையும் மேலே கீழே இறக்க வேண்டியதில்லை. சாட்டில் இருக்கும் ஒரு வார்த்தையை சர்ச் செய்து அந்த தகவலைப் பெறலாம்.

உங்களால் மட்டுமே முடியும் என்று நினைக்க வேண்டாம்
குரூப்பின் ஐகான் மற்றும் சப்ஜெக்டை அட்மின் மட்டுமல்ல, மற்ற உறுப்பினர்களும் மாற்ற முடியும்.

அதற்கு செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த குரூப்புக்குச் சென்று, சப்ஜெக்ட்டை தேர்வு செய்து - பிறகு தற்போதிருக்கும் ஐகானை தேர்வு செய்து, அதனை எடிட் செய்ய வேண்டும். அப்போது அங்கே புகைப்படத்தை எங்கிருந்து தேர்வு செய்து எடுக்கப் போகிறீர்கள் என்பது கேட்கும். அங்கிருந்த புகைப்படத்தை எடுத்து வைக்கலாம்.
அரசு மருத்துவமனையில் வேலை இல்லை : நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்

Added : டிச 07, 2017 04:03

மதுரை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட 16 கல்லுாரிகளில் நர்சிங் உதவியாளர் பட்டய படிப்புக்கான வகுப்புகள் நடக்கிறது. ஆண்டுதோறும் 1000 பேர் டிப்ளமோ முடித்து செல்கின்றனர். இவர்கள் ஒரு ஆண்டு படிப்பின் போதே, அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்களுக்கு உதவியாளராக கூடுதல் பயிற்சியும் எடுக்கின்றனர்.

இப்படிப்பு முடித்தவுடன் அரசு மருத்துவமனையில் வேலைஉறுதி என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதை நம்பி டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு முடித்தவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


முதல்வராக இருந்த கருணாநிதி, 350 பேருக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் உதவியாளர் பணி வழங்கினார். அதற்கு பின் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. இந்த பணி கிடைத்தால் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். தமிழக அளவில் 4 ஆயிரம் பேர் வரை பாதித்துள்ளோம் என நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் புலம்புகின்றனர்.
'உங்களை யார் ரயிலில் வர சொன்னது?' : பயணியரை கடுப்படித்த டி.ஆர்.எம்.,

Added : டிச 07, 2017 01:17



தஞ்சாவூர்: 'ரயில் தினமும் காலதாமதமாக வருகிறது' என, புகார் கூறிய பயணியரிடம், 'உங்களை யார் ரயிலுக்கு வரச் சொன்னது' என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, பொறுப்பற்ற முறையில் பேசினார்.

திருச்சியில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை பயணியர் ரயில், தஞ்சாவூருக்கு காலை, 8:20க்கும், கும்பகோணத்துக்கு, 9:30க்கும், மயிலாடுதுறைக்கு, 10:00 மணிக்கும் செல்ல வேண்டும்.

அவதி : பூதலுார் பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள், தினமும் இந்த ரயிலில் வருகின்றனர். சில மாதங்களாக இந்த ரயில், தஞ்சாவூருக்கு காலை, 9:00 மணிக்கு வருவதால், மாணவர்கள், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு, உழவன் விரைவு ரயில், பராமரிப்புக்காக இந்த நேரத்தில் இயக்கப்படுவதால், மயிலாடுதுறை பயணியர் ரயிலை, சோழகம்பட்டியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் அனைத்து தரப்பினரும், இந்த ரயில் தினமும் தாமதம் ஆவதால், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு, திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி நேற்று காலை ஆய்வுக்கு வந்தார்.

அவரிடம், ரயில் பயணியர், 'மயிலாடுதுறை ரயில் தாமதமாக வருவதால் ஏற்படும் அவஸ்தைகளை குறிப்பிட்டு, அதை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்' என்றனர்.

அலட்சியம் : இதைக்கேட்ட கோட்ட மேலாளர், 'ரயில் காலதாமதமாக வந்தால், பஸ்சில் போக வேண்டியது தானே, உங்களை யார் ரயிலுக்கு வரச்சொன்னது' என, அலட்சியமாக பதில் கூறினார். இதனால், புகார் கூறிய அனைத்து பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திருச்சி கோட்ட மேலாளரின் இந்த செயல் குறித்து, தெற்கு ரயில்வே மேலாளருக்கு பயணியர் புகார் அனுப்பி உள்ளனர்.
ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் ஆர்.கே. நகருக்கு படையெடுப்பு

Added : டிச 07, 2017 01:27

ஆம்பூர்: ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடப்பதால், ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் பலர், அங்கு சென்றுள்ளனர். இதனால், உள்ளூரில் மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்க தலைவர் அப்துல் ரகீம், செயலர் பீர்முகமது ஆகியோர் கூறியதாவது: ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்கத்தில், 234 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 132 மாஸ்டர்கள், ஆர்.கே., நகர் இடைத்தேர்தலுக்கு, பல்வேறு கட்சிகள் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆம்பூரில், இவர்களுக்கு தினமும், 500 முதல், 1,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படும். ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு செல்லும் இவர்களுக்கு, தினமும், 1,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படுகிறது. இதுதவிர, தங்குமிடம், வாகன போக்குவரத்து, சாப்பாடு வசதி செய்து கொடுத்துள்ளனர். ஏராளமான பிரியாணி மாஸ்டர்கள் சென்று விட்டதால், உள்ளூரில் பிரியாணி மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெல்லையிலும் கவர்னர் ஆய்வு : 'பார்மாலிட்டி' ஆனது பட்டமளிப்பு விழா

Added : டிச 07, 2017 00:02

திருநெல்வேலி: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு வந்த கவர்னர் புரோஹித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததோடு, பஸ் நிலையத்தில் துாய்மை பணியிலும் ஈடுபட்டார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் புரோஹித் பங்கேற்று, 752 மாணவ - மாணவியருக்கு, பட்டங்களை நேரடியாக வழங்கினார். முன்னதாக, பல்கலை வளாகத்தில், 1 மெகாவாட் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, கவர்னர் அடிக்கல் நாட்டினார்.
விழா முடிந்து, 2:00 மணிக்கு புறப்பட்ட கவர்னர் புரோஹித், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு, மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் நடந்த துப்புரவு பணிகளை பார்வையிட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு, நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பஸ் நிலையம் பளிச் என இருந்தது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கவர்னரும், கைகளில் ரப்பர் உறைகளை மாட்டி, சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டார். பின், அவரே குப்பையை கையால் எடுத்து போட்டார். கலெக்டர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட அதிகாரிகளும் குப்பை அள்ளினர்.

அங்கிருந்த மாநகராட்சி கமிஷனர் நாராயணன் நாயரிடம், 'குப்பையை போட மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு தனித்தனியாக கூடைகள் வைத்துக் கொள்ள கூடாதா... ஒரு அதிகாரிக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் எப்படி சாதாரண மக்களுக்கு தெரிவிப்பீர்கள்...' என, கவர்னர் கேள்வி எழுப்பினார். பின், துாய்மை பாரத இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். பஸ் ஸ்டாண்டில் நின்ற ஒரு மாணவியிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து, சத்தமாக படிக்க சொன்னார். தொடர்ந்து, தெற்கு பஜார் பகுதியில், துாய்மைப் பணி விழிப்புணர்வு மேற்கொண்டார். பின், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சுற்றுலா மாளிகையில், 2:00 மணியில் இருந்து, பல்வேறு துறை அதிகாரிகள், பைல்களுடன் காத்திருத்தனர். இதில், சுகாதாரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட முக்கிய துறை அதிகாரிகளுடன், கவர்னர் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
மாலையில் மக்கள் பிரதி நிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், எளிய மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். இரவு, கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.


அ.தி.மு.க.,வினர் ஓட்டம் : வழக்கமாக பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், அமைச்சர்கள் பங்கேற்பதால், முதல் வரிசையை, அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்து கொள்வர். ஆனால், நேற்று ராஜ்யசபா, எம்.பி., விஜிலா தவிர அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் ஒருவர் கூட, பல்கலை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.

NEWS TODAY 26.01.2026