Monday, December 11, 2017

மனித உரிமைகள் அறியாத 86 சதவீத மூத்த குடிமக்கள்

Added : டிச 11, 2017 05:10 



 புதுடில்லி: நாட்டில் 86 சதவீத மூத்த குடிமக்கள் தங்களின் மனித உரிமைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஏஜ்வெல் பவுண்டேசன் அமைப்பின் சேர்மன் ஹிமன்ஷூ ராத் கூறியதாவது: 60-70 வயதிற்குள்ளவர்கள் மனித உரிமைகளைபாதுகாப்பதில் மிகவும் தீவிரமானவர்கள். ஆனால் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி , தலைமுறை இடை வெளி ஆகியவற்றால் இதனை அறியாமல் உள்ளனர்.

துஷ்பிரயோகம் அதிகரிப்பு

மூத்த குடிமக்களில் 86 சதவீதத்தினர் மனித உரிமைகள் பற்றி தெரியாமல் இருக்கின்றனர். 68.8 சதவீதம் பேர் மட்டுமே தேவையான மருந்துகள், சுகாதார பராமரிப்பு பற்றி தெரிந்து வைத்துள்ளனர். 23 சதவீதத்தினர் மனிதாபிமானமற்ற முறையில்வாழந்து கொண்டிருக்கின்றனர். 13 சதவீதம் பேர் தங்கள் வயதில் சரியான உணவை பெறாமல் உள்ளனர். மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்களின் மீதான துஷ்பிரயோகம், தவறான சிகிச்சை அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் பாடமுறை

இதனை தவிர்க்க வயதான ஒரு நபரின் உரிமை, குடும்ப உறுப்பினர்களின் தார்மீக பொறுப்பு மற்றும் அடிப்படை மனிதஉரிமையாக கருதப்பட வேண்டும். பள்ளிகளில் முதியோர் உரிமையை கற்று தருவதன் மூலம் பொறுப்புணர்வை உருவாக்க வேண்டும் என கூறினார்.
மதுசூதனனுக்கு கவுண்டமணி; தினகரனுக்கு செந்தில் பிரசாரம்

Added : டிச 11, 2017 00:06 | கருத்துகள் (9)


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, காமெடி நடிகர் கவுண்டமணி, டிச., 14ல், பிரசாரம் மேற்கொள்கிறார். நடிகர் கவுண்டமணி, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த அவர், இதுவரையில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்ததில்லை. முதன் முறையாக, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த, பழனிசாமி முதல்வராகி உள்ளார். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, டிச., 14ல், கவுண்டமணி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த, காமெடி நடிகர் செந்தில், அதே சமுதாயத்தை சேர்ந்த தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய உள்ளார்.
கவுண்டமணியும், செந்திலும், திரையுலகில் ஒன்றாக இணைந்து, நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர்கள். தற்போது, அரசியல் உலகில் இருவரும், எதிரும் புதிருமாக, பிரசாரம் செய்வது, தேர்தல் களத்தை கலகலப்பாக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்

Added : டிச 10, 2017 20:39

புதுடில்லி: 1,300 எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு நாடு முழுவதும் 23 ஆயிரம் கிளைகள் உள்ளன. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள 1,300 வங்கிக் கிளைகளின் பெயர்களும், ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகளும் மாற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியுடன் ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகளின் விவரங்கள் எஸ்.பி.ஐ. இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

Sunday, December 10, 2017

எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?- நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம்

Published : 09 Dec 2017 09:30 IST

கரு.முத்து



நவீன யுகத்தின் வளர்ச்சியில் பாரம்பரியமான நமது தொழில்களில் பலவும் மெலிந்து, நலிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில். இப்போது, லாடம் கட்டுவது என்பது பெரும்பாலும் போலீஸ் ட்ரீட்மென்ட் பாஷையாக மட்டுமே இருக்கிறது!

மனிதனுக்காக மாடாய் உழைப்பவை காளை மாடுகள். கால்களைக் கட்டிப்போட்டு காளை மாடுகளுக்கு லாடம் கட்டுவதைப் பார்க்கும்போது அவைகளை ஏதோ சித்திரவதைக்கு உள்ளாக்குவது போல் தெரியும். ஆனால், மாட்டுக்கு லாடம் கட்டுவது ஜீவகாருண்யத்தை போற்றும் செயல் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.

லாடம் இல்லாவிட்டால் அபராதம்

கல்லிலும், முள்ளிலும் பாரம் ஏற்றிய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு அதன் கால்கள் தேய்ந்துவிடாமலும் கால்களில் ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டுவிடமாலும் இருக்க இரும்பால் தயாரிக்கப்பட்ட லாடம் பொருத்தப்படுகிறது. புரியும்படியாக சொல்வதானால், மாடுகளுக்கு நம்மைப் போல செருப்பு, ஷூ அணிந்து நடக்கத் தெரியாது. அதற்காக அவற்றின் கால்களில் நிரந்தரமாக ஒரு காலணியை பொருத்திவிடுவதையே லாடம் கட்டுதல் என்கிறோம்.

மாட்டு வண்டிகள் பிரதான போக்குவரத்து வாகனமாக இருந்த அந்தக் காலத்தில், போலீஸார் அவ்வப்போது மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகளை சோதிப் பார்கள். அப்போது, மாடுகளின் கால்களில் லாடம் இல்லை என்று சொன்னால் அபராதம் விதித்து விடுவார்கள். இதுபோல், மாடுகளை விரட்ட வண்டிக்காரர் கையில் தார்க்குச்சி வைத்திருந்தாலும் தண்டம் கட்டியாக வேண்டும்.

வாரம் ஒரு கிராமத்தில்..

இப்படியொரு சிஸ்டம் இருந்ததால் அப்போதெல்லாம் லாடம் கட்டிகளுக்கு ஏக கிராக்கியாக இருக்கும். கருக்கலில் வீட்டுக்கே போய் ஆளைப் பிடித்தால் தான் உண்டு. அப்போது, லாடம் கட்டும் தொழிலைச் செய்பவர்கள் வாரம் ஒரு கிராமத்தில் கேம்ப் அடிப்பார்கள். அன்று முழுவதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அத்தனை காளைகளுக்கும் லாடம் கட்டிவிட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்கள். இதனால், லாடம் கட்டும் இடமே திருவிழாக் கூட்டமாய் இருக்கும்.

அந்தளவுக்கு அன்றைக்கு கிராமங்களில் வீட்டுக்கு வீடு மாடுகளும் மாட்டு வண்டிகளும் இருந்தன. ஆனால், இப்போது..? டாடா ஏஸ் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வருகை மாட்டு வண்டிகளை ஓரங்கட்டி விட்டன. இதனால் காளைமாடுகளின் தேவையும் வெகுவாகக் குறைந்து போனது. அதனால், கிராமங்களில் லாடம் கட்டுவதையும், லாடம் கட்டிகளையும் பார்ப்பது இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது.

செம்பனார்கோவில் ராஜேந்திரன்

நமது பகுதியில் (போலீஸைத் தவிர!) லாடம் கட்டத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் சிக்கினார். கடந்த 25 ஆண்டுகளாக மாடுகளுக்கு லாடம் கட்டும் ராஜேந்திரனுக்கு இப்போது 50 வயதாகிறது. லாடம் கட்டிய வருமானத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் நல்லபடியாக கரைசேர்த்திருக்கிறார் ராஜேந்திரன்.

பெரிதாக வருமானம் இல்லாவிட்டாலும் இன்னமும் இந்தத் தொழில்தான் ராஜேந்திரனுக்கு கஞ்சி ஊற்றுகிறது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சுப்பிரமணியன் வீட்டுக் காளைகளுக்கு லாடம் கட்ட சாக்கு மூட்டையும் கையுமாய் போய்க் கொண்டி ருந்தவரை பின் தொடர்ந்தேன். போன வேகத்தில் மூட்டையைப் பிரித்து ஆபரேஷனில் இறங்கிவிட்டார்.

அவர் கொண்டு வந்திருந்த சாக்கு மூட்டையில் ஏராளமான லாடங்கள், அதை மாட்டின் காலடிக் குளம்பில் அடிப்பதற்கான் ஆணிகள், கனமான இரும்பு, சுத்தி உள்ளிட்ட சாதனங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் தனியாக பிரித்து வைத்தார். அடுத்ததாக, மாட்டை லாவகமாக மடக்கி கீழே படுக்க வைத்து, கால்களை நன்றாகப் பிணைத்துக் கட்டினார்.

ஜோடிக்கு 600 ரூபாய் கூலி

பிறகு, நடந்து தேய்ந்து பிசிறுதட்டிப் போயிருந்த கால் குளம்புகளை சீராக வெட்டி சரிசெய்தார். குளம்பு மட்டமானதும் அதற்கு பொருத்தமான லாடத்தை தேர்வுசெய்து அதை ஆணி கொண்டு காளையின் காலில் பொருத்தினார். இப்படி ஒரு மாட்டுக்கு லாடம் அடித்து முடிக்க அரை மணி நேரம் பிடித்தது. இப்படியே இன்னொரு மாட்டுக்கும் லாடம் கட்டி விட்டு, 600 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு மூட்டையைக் கட்டினார் ராஜேந்திரன்.

அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “ஒரு நாளைக்கு ஒரு ஜோடியும் கிடைக்கும், இரண்டு ஜோடியும் கிடைக்கும். பல நாள் வேலையே இருக்காது. இதவிட்டா நமக்கு வேற வேலையும் தெரியாது. இந்த தொழில்ல நிரந்தர வருமானம் கிடையாது. மாட்டுக்காரங்க எப்பயாவது போன் அடிச்சுக் கூப்பிடுவாங்க. நானும் போய் லாடம் கட்டிட்டு வருவேன். இந்தத் தொழிலைப் பார்க்க இந்தப் பகுதியில எனக்குத் தெரிஞ்சு வேற ஆளுங்க யாரும் இல்லை. அதனால, நானே இந்தத் தொழிலை விடணும்னு நினைச்சாலும் மாடு வெச்சிருக்கிற சம்சாரிக விடமாட்டேங்கிறாங்க. நானும் இல்லைன்னா மாடுங்க பாவம்தான்” என்று மாடுகளுக்காக உண்மையாக பரிதாபப்பட்டார் ராஜேந்திரன்.

ஆறு மாசத்துக்கு மேல தாங்காது

தொடர்ந்து பேசிய அவர், “எல்லா மாடுகளுக்கும் ஈஸியா லாடம் கட்டிட முடியாது. அதுகட்ட உதை வாங்குறது, முட்டு வாங்குறதுன்னு ஆரம்பத்துல, நான் படாத அவஸ்தையெல்லாம் பட்டிருக்கேன். இப்ப புது மாடுக இல்லை. எல்லாமே நமக்குப் பழக்கப்பட்ட மாடுங்கிறதால சொன்னபடி கேட்கும்; நமக்கும் பெருசா கஷ்டம் இல்லை” என்றார்.

“முன்பெல்லாம் காளைகளுக்கு லாடம் கட்டுனா ஒரு வருசத்துக்குத் தாங்கும். ஆனா இப்ப, ஏகத்துக்கும் தார் ரோடா இருக்கதால ஆறு மாசத்துக்குள்ள லாடம் தேஞ்சு போய் கீழ விழுந்துருது” என்று சொன்ன வண்டிக்கார சுப்பிரமணியன், “லாடம் தேஞ்சு போயிட்டா ராஜேந்திரன் வந்து மறுபடியும் புதுசா லாடம் கட்டுற வரைக்கும் மாட்டை வண்டியில பூட்ட மாட்டேன். அது ஒரு மாசம் ஆனாலும் சரித்தான்” என்றபடி தனது காளை மாட்டை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். அதுவும், அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியது.

திருப்பதியில் இலவச தரிசன முறையில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Published : 09 Dec 2017 07:31 IST

என். மகேஷ்குமார் திருமலை



திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசன (சர்வ தரிசனம்) முறையில் தரிசனம் செய்ய சில மாற்றங்களை வரும் 18ம் தேதி முதல் சோதனை முறையில் அமல்படுத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஏழுமலையானை இலவச தரிசனம் (சர்வ தரிசனம்) மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் முக்கிய நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

டைம் ஸ்லாட் முறை

பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வரும் 18ம் தேதி முதல் ‘டைம் ஸ்லாட்’ முறை சோதனை முறையில் அமல் படுத்தப்பட உள்ளது.

18ம் தேதி முதல் அமல்

அதன்படி, சர்வ தரிசன முறையில் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் டோக்கன் முறை அமல் படுத்தப்படும். இதற்காக திருமலையில் 14 இடங்களில், 117 டோக்கன் விநியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதில் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவர்கள் திவ்ய தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் சர்வ தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவர். 7 நாட்கள் வரை இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும். பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இது நிரந்தரமாக்கவோ அல்லது நிறுத்துவதோ முடிவு செய்யப்படும்” என்றார்.
ஆளுமை மேம்பாடு: தன் மதிப்பை மேம்படுத்துவது எப்படி?

Published : 05 Dec 2017 11:42 IST
Updated : 05 Dec 2017 11:42 IST

முகமது ஹுசைன்
 


நம்மைப் பற்றியும் நம் திறமை பற்றியும் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதுதான் தன் மதிப்பீடு (Self evaluation). இதற்கு முக்கியமானது நம்மைப் பற்றி நமக்கிருக்கும் அபிப்பிராயம். நம்மைப் பற்றிய நம் மதிப்பீடு நம் சுற்றத்தின் அபிப்பிராயத்தைச் சார்ந்தோ சொத்து மதிப்பைச் சார்ந்தோ கல்வித் திறனைச் சார்ந்தோ இருக்கக் கூடாது.

அது நம் உள்மனதைச் சார்ந்த நம் குணத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். இந்தத் தன்மதிப்பு உயர்வானதாகவோ குறைவானதாகவோ இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலேயோ இருக்கலாம். ஆனால், அது எந்த நிலையில் இருந்தாலும் நம் வாழ்வில் அது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.

நம்முடைய தன்மதிப்பு குறைவானதாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். தனிமை, பிறரால் கட்டுப்படுத்தப்படுதல், படிப்பில் குறைந்த மதிப்பெண் பெறுதல், ஒதுக்கப்படுதல், நிந்திக்கப்படுதல், வேலைவாய்ப்பின்மை ஆகியவை தன்மதிப்புக் குறைபாட்டுக்குப் பொதுவான காரணிகளாக இருக்கலாம்.

சில நேரத்தில், அதற்கான காரணத்தை அறிவது கடினமாகவும் இருக்கலாம். ஆனால், நமக்கு அதற்கான காரணங்கள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்தத் தன்மதிப்பை மேம்படுத்துவதற்குப் பல எளிய வழிமுறைகள் உள்ளன.

விழிப்புடன் இருத்தல்

எதை மாற்ற வேண்டும் என்பதைக் கண்டு உணராதவரை நம்மால் அதை மாற்ற முடியாது. நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணங்களை வெறுமனே உணர்வதே நமக்குப் போதுமானது. அந்த உணர்வால் நாம் அந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகிச் செல்ல ஆரம்பிப்போம். நம்மை அந்த எண்ணங்களுடன் அடையாளப்படுத்துவதையும் குறைத்துக்கொள்வோம். இந்தப் புரிதல் இல்லையென்றால், அந்த எதிர்மறை எண்ணங்கள் விரிக்கும் வலையில் சிக்கி நம் தன் மதிப்பைத் தாழ்த்திக்கொள்வோம்.

நமக்குத் தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் நாம் நம்பத் தேவை இல்லை. ஏனென்றால், எண்ணங்கள் என்பவை வெறும் எண்ணங்கள், அவ்வளவுதான். நம்மை நாமே கடுமையாக விமர்சிப்பது தெரிய வந்தவுடன் என்ன நடக்கிறது என்பதை கவனமாக, மிகுந்த ஆர்வத்துடன் குறித்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அதற்குப் பின்னர், இவை எல்லாம் வெறும் எண்ணங்கள்தான். இவை எதுவும் உண்மை அல்ல என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

கதையை மாற்றுதல்

நம் அனைவருக்குமே நம்மைப் பற்றி ஒரு கதை இருக்கும். அந்தக் கதைதான் நமது சுய கண்ணோட்டத்தை வடிவமைக்கும். அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் சுய பிம்பம் உருவாகும். எனவே, இந்தக் கதையை நாம் மாற்ற விரும்பினால் முதலில் அது எங்கிருந்து வந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இந்தக் கருத்துகளை நாம் எங்கே பெற்றோம் என்பதையும் யாருடைய கருத்து நமக்குரியது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

சில வேளைகளில், நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மைக் ‘குண்டாக இருக்கிறாய்’ என்றோ சோம்பேறி என்றோ சொல்லிக்கொண்டே இருக்கலாம். இதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், சில நாட்களில் அவர்களின் அந்தக் கருத்து நம்முடையதாகவும் மாறிவிடும். ஆனால், இந்தக் கருத்துகள் நாம் பிறரிடம் இருந்து கற்றவை என்ற புரிதல் இருந்தால், அதை நம்மிடம் இருந்து அகற்றுவது எளிது. எதை நம்ப வேண்டும், எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தினமும் நமக்கு நாமே சொல்லிக்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல்

இக்கரைக்கு அக்கரை எப்போதும் பச்சையாகத்தான் தோன்றும் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் கண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகத் தெரியும் மனிதர் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது. எனவே, உண்மை நிலை எது என்று தெரியாத ஒன்றுடன் நம்மை ஒப்பிடுவது மடமையான செயல். ஒப்பிடுதல் எப்போதும் நமக்கு எதிர்மறையான எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கும். அது நம்மை பயம், பதற்றம், மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லும். இதனால் நம் வேலை, உறவுகள், உடல்நலம் போன்றவை வெகுவாகப் பாதிக்கப்படும்.

திறமையை ஒருமுகப்படுத்துதல்

“எல்லோருமே மேதைதான். ஆனால், மரம் ஏறும் திறனைக் கொண்டு ஒரு மீனை மதிப்பிட்டால், அந்த மீன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு முட்டாள்” என்று நம்பியே வாழ்ந்து மடியும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது இங்கு பொருந்தும். ஆம், நம் அனைவருக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமை இருக்கிறது. அந்தத் திறமை எது என்பதைக் கண்டறிவதில்தான் நம் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. நம் வாழ்வில் ஒரு சூழ்நிலையில் நம்மைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணியிருப்போம். அது எது என்பதைக் கண்டறிந்து, அப்போது நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். அது நம் தனித்துவமான திறமையை நமக்கு அடையாளம் காட்டும். நம்மிடம் இருக்கும் இந்தத் திறமையைக் கண்டுபிடிப்பதற்கு நம் நண்பர்களின் உதவியையும் நாடலாம்.

உடற்பயிற்சி

உயர்வான தன் மதிப்புக்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பைப் பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்கின்றன. உடற்பயிற்சி உடலையும் மனதையும் வலிமையாக்குகிறது. தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது அந்த நாளை ஒழுங்குபடுத்துவதுடன் நம்மையும் பேணுகிறது. உடற்பயிற்சியால் நாம் சத்தான உணவையும் போதுமான தூக்கத்தையும் பெறுகிறோம். இதனால் ஏற்படும் நேர்மறையான எண்ணங்கள் நமக்கு நம்மைப் பற்றி ஒரு உயர்வான எண்ணத்தை உருவாக்குகின்றன.

மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்வுக்குத் தேவையான திறமைகளுடன்தான் நாம் அனைவரும் பிறக்கிறோம். நம் அனைவருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. தன்மதிப்பு அற்ற மனிதனோ குறைகள் இல்லாத மனிதனோ இவ்வுலகில் இல்லை. எனவே, நம்மை நம் குறைகளுடன் நேசித்துப் பழக வேண்டும். இந்தப் நேசிப்பு தோல்வி பயத்தை நம்மிடம் இருந்து அகற்றி வெற்றியைச் சுவைக்க வழிவகுக்கும்.
நல்லா வெச்சிருக்கிற சாமிக்கு நம்மால முடிஞ்சத செய்வோம்'

Published : 09 Dec 2017 09:32 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



சிலையை சுத்தம் செய்தபோது..



நாகமுத்து


பெரும்பாலும் நம்மவர்கள் நல்ல உத்தியோகம் பார்த்து பணம் சம்பாதிக்க கடவுளை வேண்டுவார்கள். பிறகு, சேர்த்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்பார்கள். ஆனால், “சம்பாதிச்சது போதும்; நம்மள நல்லா வெச்சிருக்கிற சாமிக்காக நம்மால முடிஞ்ச சேவையை செய்வோமே” என்கிறார் எஸ்.நாகமுத்து.

10 ஆண்டுகளுக்கும் மேலாக..

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழக்கமாக போகிறவர்கள் நாகமுத்துவை நிச்சயம் பார்த்தி ருக்கலாம். அம்மன் சந்நிதியில் உள்ள சிலை களை தனி ஆளாக சுத்தம் செய்து கொண்டிருப்பார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவையை எவ்வித ஊதியமும் பெறாமல் செய்து கொண்டிருக்கிறார் நாகமுத்து.

மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கு இப்போது வயது 71. டி.வி.எஸ் கம்பெனியில் மெக்கானிக்காக பணியில் இருந்தவர். 2003-ல் ஓய்வுபெற்றதும் மீனாட்சியம்மனுக்கு சேவை செய்ய வந்துவிட்டார். இங்குள்ள அம்மன் சந்நிதியில் அமைந்துள்ள உலோகச் சிலைகள் நித்தமும் தங்கம் போல் ஜொலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாகமுத்து. ஸ்டூலில் அமர்ந்து கொண்டு தினமும் அந்த சிலைகளை ஆயில் போட்டு பாலீஷ் செய்கிறார். இதேபோல் சண்டிகேஷ்வரர் சந்நிதியைச் சுற்றி பக்தர்கள் கொட்டி வைக்கும் திருநீற்றையும் அவ்வப்போது சுத்தம் செய்கிறார். இந்தப் பணிகளைச் செய்வதற்காக தினமும் காலை 10 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகிவிடும் நாகமுத்து, மாலை 5 மணிக்குத்தான் கோயிலை விட்டு வருகிறார்.

“பகலெல்லாம் மீனாட்சியம்மன் கோயிலே சரணம் என கிடக்கும் நான், பணியில் இருந்த காலத்தில் இந்தக் கோயிலுக்குள் ஒருமுறைகூட வந்ததில்லை தெரியுமா?” என்று சொல்லும் நாகமுத்து, “அந்தக் காலத்துல சித்திரைத் திருவிழாவுக்கு மீனாட்சி யம்மன் கோயிலில் அலங்கார வேலைகள் செய்யுறதுக்காக எங்க ஊருப்பக்கம் இருந்து ஆட்கள் வரு வாங்க. அப்ப, எங்கப்பாவோட நானும் வருவேன். அப்பக்கூட நான் கோயிலுக்குள்ள வரமாட்டேன்.

பிடித்தமான வேலை

என்னமோ தெரியல, ரிட்டையர் ஆனதும் மீனாட்சி மீது என்னையும் அறியாத ஒரு பக்தி. கோயிலுக்கு சுவாமி சிலைகளை சுத்தம் செய்யப் போறேன்னு பொண்டாட்டி, புள்ளை கிட்ட சொன்னேன். அவங்களும், ‘உங்களுக்குப் பிரியமானத செய்யுங்க’ன்னு என்.ஓ.சி. குடுத்துட்டாங்க. நானும் இந்த வேலையை நிம்மதியா செஞ்சுட்டு இருக்கேன்” என்கிறார் நாகமுத்து.

இன்னும் பேசிய அவர், “மீனாட்சியம்மன் கோயிலை இந்தியாவின் முதன்மையான தூய்மை கொண்ட வழிபாட்டுத்தலமாக அறிவிச்சாங்க. அதுக்காக கோயில் ஊழியர்களைப் பாராட்டுனப்ப, என்னையும் அழைத் துப் பொன்னாடை போர்த்தினாங்க. அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம். மேலமாசி வீதியில் இருக்குற டாக்டர் ஒருத்தர் இந்த சிலைகளைத் துடைக்க பனியன் வேஸ்ட் துணிகளை வாங்கிக் குடுக்கிறார். பாலீஷ் ஆயிலை நானே வீட்டுல தயார் செஞ்சு எடுத்துட்டு வந்துருவேன். கோயிலுக்குள்ள நான் வந்து போறதுக்கு தனியா எனக்கு பாஸ் குடுத்துருக்காங்க.

இன்னும் எதுக்கு சம்பாதிக்கணும்?

சொந்த வீடு இருக்கு. என்னோட மகன் கைநிறைய சம்பாதிக்கிறதால சாப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லை. அப்புறம் இன்னும் எதுக்காக சம்பாதிக்கணும்? அதுக்குப் பதிலா, நம்மள இந்தளவுக்கு சந்தோஷமா வெச்சிருக்கிற சாமிக்கு நம்மால முடிஞ்ச வரைக்கும் சேவை செய்வோமே” என்று சொன் னார்.


வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழத் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான் இந்த நாகமுத்து.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

NEWS TODAY 26.01.2026