Saturday, July 7, 2018


இவருக்கு 80 வயதாகிவிட்டதா? வியக்கும் ரசிகர்கள்! பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய பிரபல நகைச்சுவை நடிகர்!

By சினேகா | Published on : 06th July 2018 12:32 PM |

தம்ப்ப்ப்ப்றீறீ...பாப்பா......பப்..பப்.., புர்..ர்..! என்பதை எல்லாம் இவர் சொல்வதைப் போல வேறு யாராலும் சொல்ல முடியாது. சிலர் நடிக்க ஆரம்பித்தால் தான் சிரிப்பு வரும், ஆனால் இவர் திரையில் தோன்றினாலே அடுத்து இவர் என்ன சேஷ்டை செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்களுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அந்த அளவுக்கு உடல்மொழியிலும், குரலிலும் தனித்துவம் காண்பித்து அசத்தியவர். மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுக்கே சவால் விடும் குரல் இவருடையது. அவர்தான் பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் 1965-ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானவர். வக்கீல் படிப்பு படித்தும் மூர்த்திக்கு நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்படவே, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் திரையுலகம் பல காமெடியன்களைக் கண்டிருந்தாலும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் சில காமெடிகள் மறக்க முடியாதவை. சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர வேடத்திலும், சில படங்களில் வில்லனாகவும் கூட நடித்துள்ளார் மூர்த்தி. முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வில்லத்தனமும், சீவலப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.



50 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நடிகை மணிமாலாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 80 வயது பூர்த்தியானது. எளிமையாக தனது பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அவரது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பெரிய திரை மற்றும் சின்னத் திரையில் நடித்து வந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, தமிழ் படம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பலருடன் ‘இட்லி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்

By சென்னை, | Published on : 05th July 2018 01:03 AM |



எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் இதுவரை நிரம்பியுள்ள இடங்களில் 62 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) வரை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,421 இடங்கள் நிரம்பின.

62 சதவீத இடங்கள்: இவற்றில் 892 இடங்களை மாநிலப் பாடத் திட்ட மாணவர்களும், 460 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், பிற பாடத்திட்ட மாணவர்கள் 69 இடங்களையும் பெற்றுள்ளனர். அந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களில் 62.77 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களும், 32.37 சதவீத இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், 4.9 சதவீத இடங்களைப் பிற பாடத்திட்ட மாணவர்களும் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலை வெளியிடுகையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கலந்தாய்வில் 70 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 30 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிரம்பிய இடங்கள்: புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 490 எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 28 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 869 இடங்கள் நிரம்பின.

காலியிடங்கள் எத்தனை?: கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 628, தனியார் கல்லூரிகளில் 537 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 55, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 24 இடங்கள் என மொத்தம் 1,244 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. அதே போன்று அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 54, தனியார் கல்லூரிகளில் 963 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,017 பிடிஎஸ் காலியிடங்கள் உள்ளன.

இன்றைய கலந்தாய்வு: பொதுப்பிரிவினருக்கு தொடர்ந்து வியாழக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை எண் 2381-இலிருந்து 4312 வரை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தர வரிசைப் பட்டியலில் 8 மாணவர்கள்: தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால் வெளிமாநிலத்தில் பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்விலும் வெளிமாநிலத்தவர் என்று குறிப்பிட்டு தேர்வெழுதிய மாணவரில் ஒருவர், தனக்கு தமிழக மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க இடமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

வழக்கின் முடிவில் குறிப்பிட்ட மாணவரைக் கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த மாணவரின் பெயர் தமிழக இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இணைக்கப்பட்டது. அதன் காரணமாக அதே நிலையில் உள்ள பிற மாநிலத்திலிருந்து விண்ணப்பித்த தமிழகத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட 90 மாணவர்களின் பெயர்களை மருத்துவக் கல்வி இயக்ககமே புதிதாக தரவரிசைப் பட்டியலில் இணைத்தது. இதனைத் தொடர்ந்து அரசு இடங்களுக்கு விண்ணப்பித்த 8 மாணவர்களின் பெயரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த ஒரு மாணவரின் பெயரும் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் புதன்கிழமை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு


By DIN | Published on : 07th July 2018 04:32 AM |

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது.

பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும்.

புதிய ஊதிய விகிதத்தின்படி, கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் முதல் நிலை (நிலை-10) உதவிப் பேராசிரியருக்கு ரூ.57,700, இரண்டாம் நிலை (நிலை-11) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 68,900 என்ற அளவிலும், மூன்றாம் நிலை (நிலை-12) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 79,800 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இணைப் பேராசிரியருக்கு ரூ. 1,13,400 என்ற அளவில் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பேராசிரியருக்கான ஊதியத்தைப் பொருத்தவரை முதல் நிலை (நிலை-14) பேராசிரியருக்கு ரூ. 1,44,200 என்ற அளவிலும், இரண்டாம் நிலை (நிலை-15) பேராசிரியருக்கு ரூ. 1,82,200 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வருக்கு...புதிய ஊதிய விகிதத்தின்படி, இளநிலை பட்டப் படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரி முதல்வருக்கு ரூ.1,31,400 மாத ஊதியத்துடன் சிறப்பு மாதப் படி ரூ. 2000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கு மாத ஊதியம் ரூ. 1,44,200 என்ற அளவிலும், சிறப்பு மாதப் படி ரூ. 3000 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தருக்கு ரூ. 2.1 லட்சம்: பல்கலைக்கழக துணைவேந்தருக்கான மாத ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மாத சிறப்புப் படியாக ரூ. 5,000 வழங்கப்படும்.

ஓய்வு பெறும் வயதில் மாற்றமில்லை: பேராசிரியர்கள் ஓய்வுபெறும் வயதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே உள்ளதுபோல கல்லூரி ஆசிரியர்களுக்கு 58 வயதும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 60 வயதும் ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதுக்குப் பின்னர் மறுபணியமர்வு வழங்கப்படமாட்டாது.


நவஜோதிர்லிங்க யாத்திரைக்காக சிறப்பு சுற்றுலா ரயில்

By DIN | Published on : 04th July 2018 10:48 AM |



கோப்புப்படம்

ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்காக, நவஜோதிர்லிங்க யாத்திரைக்காக குளிர் சாதன வசதி கொண்ட சிறப்பு சுற்றுலா ரயிலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் தனி யாத்திரை ரயில் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில், நவ ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக ஜூலை 31-ஆம் தேதி குளிர்சாதன வசதிகொண்ட தனி யாத்திரை சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு, திருச்சி, சென்னை, எழும்பூர் வழியாக செல்கிறது. ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வர், மகாகாலேஸ்வர், குஜராத்தில் உள்ள சோம்நாத், மகாராஷ்டிராவில் உள்ள பீம்சங்கர், திரையம்பகேஸ்வர், குருஸ்ணேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி வைத்யநாத் ஆகிய ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று, ஜோதி வடிவான இறைவனைத் தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

இந்த தனி முழு ஏசி யாத்திரை ரயிலில் டீலக்ஸ், ஸ்டேண்டர்டு, கம்பர்ட் என மூன்று விதமான வகுப்புகள் உள்ளன. மூன்று நபர் பகிர்மான அடிப்படையில் ஒரு நபருக்கு டீலக்ஸ் ரூ.60,900, கம்பர்ட் ரூ.42,150, ஸ்டேண்டர்டு ரூ.38,900 என்ற கட்டண விகிதத்திலும் மற்றும் ஒருவர், இருவர் பகிர்மான அடிப்படையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர்கள் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

இந்த யாத்திரை தொடர்பான விவரங்களுக்கு 98409 02919, 98409 02916, 90031 40681 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டும், www.irctctourism.com என்ற இணையதளத்தில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

முதியோர் பாதுகாப்பு மசோதா!

By ஆசிரியர் | Published on : 04th July 2018 01:31 AM

 உலகிலேயே அகவை அறுபதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்தியா. ஒருபுறம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே மற்றொருபுறம் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2050-இல் இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 20% முதியோர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் உருவாக்குவதற்கான முனைப்பில் நாம் ஈடுபட்டாக வேண்டும்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு முதியோருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல மருத்துவமனைகள், முதியோர் சிறப்பு மருத்துவத் தேவைகள் என்று முதியோர் நலன் பேணலை மேலை நாடுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதுபோன்ற திட்டமிட்ட முதியோர் நலன் பேணலுக்கான வளர்ச்சியில் இந்தியா இதுவரை முனைப்பும் காட்டவில்லை; முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

இந்தியாவில், அறுபது வயதுக்கும் மேலான முதியோர்களில் ஏறத்தாழ 7% தனியாக வாழ்கிறார்கள். தங்கள் இணையருடன் வாழ்பவர்கள் 11%. குடும்பங்களுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 35%. இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் தங்களது பெற்றோர்களுக்காக கவலைப்பட போதுமான நேரமோ, அக்கறையோ இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வேதனை. அதிலும் குறிப்பாக, வேற்று இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிள்ளைகள் வேலை தேடி இடம் பெயர்ந்து விடுவதால் மூத்த குடிமக்களில் பலரும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக கொண்டுவர இருக்கும் சட்டத்திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு பாகங்களில் முதியோர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகள் அதைத் தடுக்கவும் முதியோர்களை புறக்கணிப்பது, கைவிடுவது போன்ற செயல்களை எதிர்கொள்ளவும் சட்டம் இயற்றி வருகின்றன. இந்தியாவில் 2007-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தை இயற்றி இருந்தாலும், அதில் காணப்பட்ட பல்வேறு குறைகளால் அந்தச் சட்டம் நடைமுறையில் பலன் அளிக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது நரேந்திர மோடி அரசின் சமூக நீதி அமைச்சகம் மூத்த குடிமக்கள் மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர இருக்கிறது.
இந்தத் திருத்த மசோதா, வரும் மழைக்காலத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவிலுள்ள 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 32 சதவீத மூத்த குடிமக்கள் தங்களது பிள்ளைகளால் அவமரியாதைக்கும், கைவிடப்படலுக்கும் ஆளாகிறார்கள். 56 சதவீத நிகழ்வுகளில் மகன்களும், 23 சதவீத நிகழ்வுகளில் மருமகள்களும் அதற்குக் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவமரியாதைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகியிருக்கும் மூத்த குடிமக்களில் 80%-கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப கெளரவத்திற்காக அதை வெளியில் தெரிவிக்காமல் சகித்துக்கொள்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத் திருத்த மசோதா 2018-இன்படி, இந்தியாவிலுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். போதுமான உணவு, இருப்பிடம், உடை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை தங்களது பிள்ளைகளிடமிருந்து கிடைக்காமல் போனால் மூத்த குடிமக்கள் அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். அவர்களது குறைகளும் பிரச்னைகளும் ஆணையத்தால் 90 நாள்களில் தீர்வு காணப்பட வேண்டும்.

தங்களது சொந்த சேமிப்பிலும் வருமானத்திலும் பூர்விக சொத்திலும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத மூத்த குடிமக்கள் இந்த ஆணையத்தை அணுகலாம். ஆணையம் அவர்களது பிள்ளைகள் அல்லது சட்டப்படியான வாரிசுகள் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வழங்க உத்தரவிட முடியும்.

தங்களது பெற்றோரை புறக்கணிக்கும் வாரிசுகளுக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. புதிய திருத்த மசோதா ஏற்கெனவே உள்ள சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முதியோர்களின் பாதுகாப்புக்காகவும் தேவைக்காகவும் மருத்துவமனைகளையும், முதியோர் இல்லங்களையும் நிறுவ வழிகோலுகிறது. அதேபோல மூத்த குடிமக்களின் முழு அனுமதியில்லாமல் அவர்களின் பாதுகாப்பாளர்கள் அவர்களது சொத்துகளை விற்பது தடை செய்யப்படுகிறது. மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை, தூரத்து உறவினர்களின் மீதும் இந்தத் திருத்த மசோதா சுமத்துகிறது.
இந்தத் திருத்த மசோதாவின்படி, மூத்த குடிமக்களுக்கான எல்லா வசதிகளும் கொண்ட பாதுகாப்பு மையங்களை நிறுவும் கடமையை மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த திருத்த மசோதா ஏற்படுத்துகிறது. அதேபோல தன்னார்வ அமைப்புகள், மூத்த குடிமக்களுக்கான மையங்களையும், முதியோர் இல்லங்களையும், மருத்துவ வசதி மையங்களையும் ஏற்படுத்துவதற்கு அரசு ஊக்கமும் உதவியும் தருவதை இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுத்தப்பட்டால் மூத்த குடிமக்களின் கெளரவமும் நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்படும்.
திருமலையில் மீண்டும் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம்!

Published on : 06th July 2018 05:53 PM




திருப்பதி: திருமலையில் மீண்டும் இம்மாதம் மூத்த குடிமக்கள் மற்றும் 0-5 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. ஆனால் மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் இந்த இரு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், மீண்டும் இம்மாதம் முதல் அந்த தரிசனத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் போ் என இருநாட்களில் 8 ஆயிரம் போ் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.

மேலும் அதேபோல் இம்மாதம் 11-ம் தேதி மற்றும் 25-ம் தேதி என இருநாட்களில் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீட் தேர்வு முடிவில் அவசரம் ஏன் : சி.பி.எஸ்.இ.,க்கு கோர்ட் கேள்வி

Added : ஜூலை 07, 2018 01:59

மதுரை: 'நீட் தேர்வு குறித்து வழக்கு தாக்கலானதும் ஒருநாள் முன்கூட்டியே அவசரமாக முடிவை வெளியிட்டது ஏன்? பீஹாரில் 'நீட்' தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எப்படி' என உயர்நீதி மன்ற மதுரை கிளை நேற்று கேள்வி எழுப்பியது.மார்க்சிஸ்ட் எம்.பி.,-டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மே 6 ல் நீட் தேர்வு நடந்தது. 180 வினாக்கள் இடம்பெற்றன. 49 வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண் வீதம் 49 க்கு கருணை மதிப்பெண்ணாக 196 வழங்க வேண்டும். முடியாதபட்சத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார்.ஜூலை 2 ல் நீதிபதிகள்,'அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக பொருள்கொள்ளும் வகையில் தமிழ் வார்த்தைகளை கண்டறிய சி.பி.எஸ்.இ.,முயற்சி மேற்கொண்டதா?,' என்பன உட்பட 4 கேள்விகளை சி.பி.எஸ்.இ.,க்கு எழுப்பினர்.நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு நேற்று விசாரித்தது.மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர்: மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பற்றி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ் வினா குழப்பமாக இருந்தால், அதற்கு எதிரே உள்ள ஆங்கில வினாவிற்கு விடையளிப்பதுதான் சரியானது என 'நீட்'டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தெளிவுபடுத்தப்பட்டது. 'நீட்''கீ'பதில்கள் வெளியானபோது, எந்த ஒரு மாணவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.சி.பி.எஸ்.இ.,வழக்கறிஞர்: இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி வினாக்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. மொழிமாற்றத்திற்கு மாநில அரசு நிபுணர்கள் பட்டியல் அளித்தது. அவர்கள் பரிந்துரைப்படி மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும் இந்நீதிமன்றத்தை நாடவில்லை. அனைத்து மாணவர்களும் சரியாக தேர்வு எழுதியுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் கூறியதாவது: மொழிமாற்றத்திற்கு மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய முடியாத மற்றும் அதற்கு சமமான வார்த்தைகள் உள்ளதா என்பதற்குரிய பட்டியலை மாநில அரசிடம் சி.பி.எஸ்.இ.,கோரியிருக்கலாமே? வினாக்கள் தெளிவின்றி இருப்பதற்கும், முழு தவறுக்கும் வேறுபாடு உள்ளது.இங்கு வழக்கு தாக்கலானதும் ஒருநாள் முன்கூட்டியே அவசரமாக 'நீட்' தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? வினாக்களில் குழப்பமின்றி, அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். பீஹாரில் 'நீட்' தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எப்படி. இங்கு ஏழை மாணவர்கள் பால் பாக்கெட், நாளிதழ் போடுதல் போன்ற பணிகளை செய்து சிரமப்பட்டு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ., தகுந்த முடிவை எடுத்திருக்கலாம். பள்ளியில் படிக்காமல் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு எழுத வாய்ப்பு மறுப்பது சரியல்ல. இவ்விவகாரத்தை சி.பி.எஸ்.இ., ஜனநாயகப்பூர்வமாக கையாண்டிருக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.

NEWS TODAY 26.01.2026