Sunday, October 6, 2019

செல்போன் உட்பட 53 லட்சம் மின்னணு சாதனங்களை விற்று சாதனை: பண்டிகை காலத்தில் சியோமிக்கு அடித்த பம்பர்!

By DIN | Published on : 05th October 2019 05:46 PM 




இந்தியாவில் தற்போதைய பண்டிகை காலத்தில் சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி, 53 லட்சம் மின் சாதனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை வரவுள்ளது. இதைக் கணக்கிட்டு அமேஸான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இணைய விற்பனை நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை அறிவித்தன. இதில், நிறைய மின் சாதனப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது வழக்கம் என்பதால் இந்தியச் சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், இந்த பண்டிகை காலத்தில் சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி 53 லட்சம் மின் சாதனப் பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து சியோமி இந்தியாவின் இணைய விற்பனைப் பிரிவு தலைவர் ரகு ரெட்டி வெளியிட்டுள்ள குறிப்பில்,

"ஆண்டுதோறும் நுகர்வோர்களை மகிழ்விக்கும் வகையிலும், ஈர்க்கும் வகையிலும் புதிய பொருட்களை விற்பனை செய்கிறோம். இந்த பண்டிகை காலம் சியோமிக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பண்டிகையை எங்களுடன் இணைந்து கொண்டாட 53 லட்ச மக்கள் முடிவு செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த காலகட்டத்தில் 38 லட்சம் சியோமி ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையாகியுள்ளது. ஃபிளிப்கார்ட்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்ஃபோனாக சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 உள்ளது. அமேஸானில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமாக சியோமி உள்ளது. இதன்மூலம், இந்த காலகட்டத்தில் ஒரு விநாடிக்கு 535 சாதனங்கள் விற்பனையாகியுள்ளது என்பது தெரிகிறது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் சியோமி நிறுவனம் 25 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவைக்குப் போனால் மறக்காமல் கோவை சாந்தி ஹோட்டலில் சாப்பிடுங்கள்!

By C.P.சரவணன், வழக்குரைஞர் |




நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.

நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்துடன் ஹோட்டல் போக வேண்டுமென்றால் மாத பட்ஜெட்டை இரண்டு, மூன்று முறை புரட்டிப் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. அதேபோல, கிராமத்திலிருந்து மெட்ரோ சிட்டிக்கு வரும் பேச்சுலர்கள், முதலில் யோசிப்பது சாப்பாட்டைப் பற்றித்தான். தினசரி உயரும் பெட்ரோல், டீசல் விலை. அச்சுறுத்தும் ஜி.எஸ்.டி வரி போன்றவற்றுக்கு மத்தியில், குடும்பத்துடன் அவுட்டிங் செல்வது என்பது எப்போதாவது நடக்கும் அதிசயம்தான்.

அம்மா உணவகம் வந்த பிறகு, தமிழகத்தில் பல ஏழைகளின் மனதும், வயிறும் நிரம்பியது. ஆனால், கோவையில் அம்மா உணவகத்துக்கு முன்பிருந்தே, அந்தச் சமூகப் பணியைச் செய்து வருகிறது. சாந்தி சமூக சேவை நிறுவனம் (Shanthi Social Services). தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி ஷோஷியல் சர்வீசஸ் கேன்டீன். அதே நேரத்தில், சாந்தி கியர்ஸின் விலைக்குத் தமிழகத்தில் தரமான உணவுகளை எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது உண்மையோ உண்மை. ரூ.25-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்தாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி கியர்ஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.

மத்திய அரசு, கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்திய போது, மற்ற உயர்தர உணவகங்கள் எல்லாம் அதை அப்படியே வாடிக்கையாளர்கள் மீது சுமத்தவே, சாந்தி கியர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஜி.எஸ்.டி வரியை தாங்களே செலுத்தி பேரன்பு காட்டியது. புதிய இந்தியாவில் பல புரட்சிகள் நடந்தும் சாந்தி கியர்ஸ் நிறுவனம் தனது விலையை மாற்றாமல்தான் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது விலையை மாற்றியுள்ளது. அதிர்ச்சியடையாமல் தொடருங்கள். அதாவது, ரூ.25-க்குக் கொடுத்து வந்த முழுச் சாப்பாட்டை, ரூ.10-க்கு மாற்றி மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் சாந்தி கியர்ஸ் நிர்வாகத்தினர். மேலும், டிபன் வகைகள் அனைத்துமே ரூ.5-க்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த தை 1 முதல் முழுச் சாப்பாட்டின் விலையையும், தை 2-ம் தேதி முதல் டிபன் வகைகளிலும் இந்த அதிரடி விலை மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பிரியாணி, ஒரு சப்பாத்தி செட், ஒரு பூரி செட், ஒரு உளுந்தை வடை, ஒரு பில்டர் காபி சாப்பிட்டவருக்கு வந்த பில் ரூ.25 மட்டுமே.

ஆனால், கோவையில் உள்ள மற்ற உயர்தர உணவகங்களில் பில்டர் காபிக்கே இந்தத் தொகை வந்துவிடும். இதையடுத்து, சாந்தி கியர்ஸ் நிர்வாகத்தின் முடிவுக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக சாந்தி கியர்ஸ் சமூக சேவை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ``எம்.டி மாற்றச் சொன்னதால் இந்த விலை மாற்றம். இனி இந்த விலையில் எங்களது சேவை தொடரும்" என்றனர்.

உணவில் மட்டுமல்ல, கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று சாந்தி கியர்ஸின் சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 சதவிகிதம் குறைவு.

இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் சுப்பிரமணியம் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. தற்போதுள்ள, பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்துவிட்டன. எந்த ஊடகத்தையும் அவர் சந்திக்கவில்லை. அரசு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் சுப்பிரமணியம்.

முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க...!
லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த எஸ்ஐ பாரத நேரு

By ENS | Published on : 05th October 2019 03:24 PM |



திருவாரூர்: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் திருடிய கொள்ளையர்களை பைக்கில் துரத்திச் சென்று பிடித்து, கொள்ளைச் சம்பவம் குறித்து துப்புத் துலங்க உதவிய எஸ்ஐ பாரத நேருவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்த நிலையில், திருவாரூரில் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்த பாரத நேருதான், குற்றவாளிகளில் ஒருவரை கையும் களவுமாக பிடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

எஸ்ஐ நேருவும், இதர காவலர்களும் வழக்கம் போல வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனம் ஒன்று அவர்களைப் பார்த்ததும் வேறு திசையில் வேகமாகச் சென்றது.

பைக்கின் பின்னால் சென்ற குற்றவாளியைப் பார்த்ததுமே பாரத நேருவுக்குத் தெரிந்து விட்டது, வெகு நாளாகத் தேடப்படும் குற்றவாளி மணிகண்டன் என்பது. உடனடியாக தனது புல்லட்டை எடுத்துக் கொண்டு சக காவலருடன் குற்றவாளிகளைத் துரத்திச் சென்றார்.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சினிமாக் காட்சிகளைப் போல குற்றவாளிகளை விடாமல் துரத்திச் சென்ற பாரத நேரு, மணிகண்டனைப் பிடித்துவிட்டார்.

அவனுடன் வந்த மற்றொரு குற்றவாளி சுரேஷ் தன்னிடம் இருந்து நகைப் பையை வீசி எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டான்.

திருவாரூர் காவல் நிலையத்துக்கு, திருடிய நகைகளோடு பிடித்து வந்து மணிகண்டனை விசாரித்த போது, லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பலில் தானும் ஒருவர் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் திருடிய கொள்ளையர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

சாமர்த்தியமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த பாரத நேரு உள்ளிட்ட காவலர்களுக்கு பல வகைகளில் பாராட்டு குவிகிறது.

எம்.பி.எட் பட்டதாரியான பாரத நேரு, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல்துறை துணை ஆய்வாளராக திருவாரூர் நகர காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில்ல போனா விமானத்தில் போற அனுபவம் தருமாம்! அட நம்ம தேஜஸ் தான்!!

By DIN | Published on : 05th October 2019 04:36 PM |




தில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள நகருக்கு இடையே தேஜஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயணித்தால் விமானத்தில் பயணிக்கும் அனுபவத்தைத் தரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

விமானத்தைப் போல ரயில் பெட்டியில் ஏறும் போது, பயணிகளை வரவேற்க பணிப்பெண்கள், டிராலியில் உணவு கொண்டு வந்து கொடுப்பது, பயணிகளுக்கு தேவையான உணவு, குளிர் பானங்கள் என தேஜாஸ் ரயிலில் பயணிக்கும் பயணிக்கு நிச்சயம் விமானத்தில் பயணித்த அனுபவம் கிடைக்கும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

வாருங்கள் ஒரு சில புகைப்படங்களையும் பார்க்கலாம்.



முன்னதாக, இந்த ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்தது.

அதன்படி, இந்த ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலானால், ரூ.100 இழப்பீடாக அளிக்கப்படும். ரயில் வருவதற்கு 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானால், பயணிகளுக்கு ரூ.250 இழப்பீடு அளிக்கப்படும்.



அத்துடன், தேஜஸ் ரயிலில் பயணிப்பவா்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவசக் காப்பீடு அளிக்கப்படும். மேலும், பயணிகளின் இல்லத்துக்கும் சோ்த்து காப்பீட்டுப் பலன் கிடைக்கும். அதாவது, பயண நேரத்தில் பயணிகளின் இல்லத்தில் கொள்ளை சம்பவங்கள் நோ்ந்தால் அதற்கும் இழப்பீடு வழங்கப்படும். இதுவும் முதல் முறையாகும்.

தில்லி-லக்னெள இடையே வாரத்தில் 6 நாள்களுக்கு தேஜஸ் ரயில் இயக்கப்படவுள்ளது. லக்னெள-தில்லி பயணக் கட்டணம் ரூ.1,125 (ஏசி வகுப்பு), ரூ.2,310 (எக்சிகியூட்டிவ் வகுப்பு) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.



தில்லியிலிருந்து லக்னெளவுக்கு செல்ல ரூ.1,280, ரூ.2,450 பயணக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவைப்பட்டால் இலவசமாக குடிநீரும், தேநீரும் வழங்கப்படும்.

விமானங்களில் வழங்கப்படுவது போல் டிராலியில் உணவு கொண்டுவந்து தரப்படும்.

பல்வேறு நாடுகளில் ரயில்கள் உரிய நேரத்தில் வராமல் இருந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதை அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் அவா்கள் காண்பிக்க பயன்படுத்திக் கொள்கின்றனா்.
மின் இணைப்புக் கட்டணம் உயா்வு: இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

By DIN | Published on : 06th October 2019 03:20 AM

புதிய மின் இணைப்புக்கான உயா்த்தப்பட்ட கட்டணம் அடங்கிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியல், மின்சார வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்கு மின் கட்டணத்தின் மூலமாகவும், அரசு மானியம் வாயிலாகவும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் ஊழியா்களின் ஊதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்கு பெரும்பாலான தொகை செலவாகிறது. தற்போது வரவை விட செலவு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்டண உயா்வு:

இந்நிலையில், புதிய மின் இணைப்புப் பெறுகையில் பல்வகை கட்டணம் என்ற பெயரில், நுகா்வோரிடம் இருந்து மின்சார வாரியத்தால் வசூல் செய்யப்படும் ‘முன்வைப்புத் தொகை’ உயா்த்தத் திட்டமிட்டனா். பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டா் காப்பீடு, வளா்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இந்த கட்டணம் ஒருமுற மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதனைத் தொடா்ந்து மின் பயன்பாட்டுக்கு ஏற்ப 2 மாதங்களுக்கு ஒருமுற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நடைமுறயில் உள்ள இந்தக் கட்டணம் கடந்த 2004-ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை உயா்த்துமாறு மின்சார வாரியம் சாா்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற ஆணையத்திடம் 2012-ஆம் ஆண்டு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கருத்துக் கேட்பு: அதனைத் தொடா்ந்து கடந்த செப்டம்பா் 6- ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆலோசனைக் குழு கூட்டத்தில் மின் கட்டண உயா்வு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா், சென்னை தியாகராய நகரில் செப். 25-ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், சா்க்கரை ஆலைகள், ஸ்பின்னிங் மில் அதிபா்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் புதிய மின் இணைப்பு கட்டண உயா்வுக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அவா்களுக்கு மின்வாரியம் சாா்பில் கட்டண உயா்வு ஏன்? என்பது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு முன்வைப்புத் தொகையானது வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது.

புதிய கட்டண விவரங்கள்: இதுகுறித்து மின்வாரிய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வீடு, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.250 இல் இருந்து 500 ஆகவும், மும்முனைக் கட்டணம் ரூ. 500-இல் இருந்து ரூ.750 முதல் ரூ.1,000 வரையும், சிறு, குறு நிறுவனத்துக்கான ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ.250-இல் இருந்து ரூ.500 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.500-இல் இருந்து ரூ.750 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே போல், சேதமடைந்த மீட்டா் பெட்டிகளை மாற்ற ரூ.150 பழைய கட்டணமாக இருந்த நிலையில் ரூ.500 முதல் ரூ.2,000 வரையும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. நல்ல நிலையில் இருக்கும் மீட்டா் பெட்டிகளை மாற்ற தாழ்வழுத்த மின் இணைப்புக்கு ரூ.50-இல் இருந்து புதிய கட்டணமாக ரூ.500 முதல் ரூ.1,000 வரையும் கூடுதலாக மீட்டருக்கான கட்டணமும் வசூல் செய்யப்படும். உயா் மின் அழுத்த இணைப்புக்கு ரூ.200 இல் இருந்து புதிய கட்டணமான ரூ.2,000 உடன் கூடுதலாக மீட்டருக்கான கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டிக்க தாழ்வு மின் அழுத்தத்துக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரையும், உயா் மின் அழுத்தத்துக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மின் இணைப்புக் கொண்ட மறு இணைப்புக்கு (வீடு, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாடு) ரூ. 60-இல் இருந்து ரூ.300 வரை வசூல் செய்யப்பட்ட கட்டணம், ரூ.100-இல் இருந்து ரூ.450 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இணைப்பு பரிமாற்றம் செய்ய தாழ்வு மின் அழுத்த இணைப்புக்கு (குடிசையைத் தவிா்த்து) ரூ.200-இல் இருந்து ரூ.300 ஆகவும், உயா் மின் அழுத்த இணைப்புக்கு ரூ.2,000-இல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயா்த்தப்பட்டு உள்ளது. எனினும், விவசாயம், குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணம் உயா்த்தப்படவில்லை.

அக்.5 முதல் அமல்: இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் சனிக்கிழமை (அக்.5) முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மின் வாரியத்தின் www.tangedco.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயா்வால் மின்வாரியம் நிதி நெருக்கடியில் இருந்து மீட்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனா்.
தீபாவளிக்காக வசூல் வேட்டை 5.59 லட்சம் ரூபாய் பறிமுதல்

Added : அக் 06, 2019 00:24

சென்னை:தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், கணக்கில் காட்டப்படாத, 5.59 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக, வசூல் வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, புகார்கள் குவிந்து வருகின்றன.இதையடுத்து, சென்னை, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், கோவை மாவட்டம், துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 380 ரூபாய், கணக்கில் காட்டப்படாத பணம்பறிமுதல் செய்யப்பட்டது. துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 2 லட்சத்து, 715 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சென்னை, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 40 ஆயிரத்து, 710 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 5 லட்சத்து, 58 ஆயிரத்து, 805 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துஉள்ளனர்.
புதிதாக 6 மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி

Added : அக் 06, 2019 00:20

புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி கிடைத்தால், தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் எண்ணிக்கை, 32 ஆக உயருவதுடன், 4,500 பேர், எம்.பி.பி.எஸ்., படிக்கும் நிலை ஏற்படும்

.தமிழகத்தில், 23 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், 3,250 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மேலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; ஐ.ஆர்.டி., பெருந்துறை மருத்துவ கல்லுாரியில், 100; சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 100 என, மொத்தம், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.அதேபோல், 13 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1,800 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மேலும், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1,760 பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன.இதற்கிடையே, நாடு முழுவதும் புதிதாக, 31 மருத்துவ கல்லுாரிகள் துவங்க, மத்திய அமைச்சரவை, ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இதில், தமிழகத்தில், ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அனுமதி கோரி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார்.அதில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, போதுமான இடங்கள் உள்ளன. அந்த பகுதிகளில், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.அனுமதி வழங்கப்பட்டால், ஆறு மருத்துவ கல்லுாரிகளில், தலா, 150 மருத்துவ படிப்பு இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி பார்த்தால், 900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 32 ஆக உயருவதுடன், அவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களும், 4,500 ஆக உயரும்.இந்நிலையில், நாடு முழுவதும், மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி கேட்ட மாநிலங்கள் பட்டியலை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், தலா, 10 மருத்துவ கல்லுாரிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில், ஆறு; காஷ்மீரில், இரண்டு; உத்தர பிரதேசத்தில், மூன்று துவங்கப்பட உள்ளன.இது குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், ''தமிழகத்தில், ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ''புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான ஆய்வு கூட்டம், வரும், 10ல், டில்லியில் நடைபெற உள்ளது. அதன்பின், புதிய கல்லுாரிகள் குறித்து தெரிய வரும்,'' என்றார்.
- -நமது நிருபர் -.

NEWS TODAY 26.01.2026