Wednesday, October 15, 2014

திறனும், வாய்ப்பும் கொட்டிக்கிடக்கும் தமிழ்நாடு



பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தொழில்வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்பதுபோல, முதலில் ஜப்பான், பின்பு சீனா, அதைத்தொடர்ந்து அமெரிக்கா என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியாவில் அந்த நாட்டின் தொழில் முதலீடுகள் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எப்படி இந்தியா தொழில் முதலீட்டார்களுக்கு ஒரு உகந்த இடமாக திகழ்கிறது? என்பதை படம் பிடித்துக்காட்டுவதுபோல விளக்கி, அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் அவர் முழங்கிய ‘மேக் இந்தியா’ அதாவது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற பிரகடனம் தொழில் முனைவோரை இந்தியாவை நோக்கி பார்க்கவைத்துவிட்டது.

மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் வர இருக்கும் இந்த சூழ்நிலையிலும், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை, வேகமான தொழில் வளர்ச்சியில் அவர் எவ்வளவு உத்வேகத்தோடு இருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும் அவர் விடுக்கும் செய்திக்கான ஒரு பிறப்பிடமாகவும் அமைந்துள்ளது. தனது வெளிநாட்டு பயணங்கள் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, ஏறத்தாழ ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கான வெளிநாட்டு தொழில் முதலீடுகள் இந்தியாவின் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது அந்தந்த மாநிலங்களின் கையில்தான் இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருக்கிறது. இந்த முதலீடுகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான வழிகளை மாநில அரசுகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். மத்திய–மாநில அரசு உறவுகளுக்கு ஒரு புதிய கணக்கு போட்டுக்கொடுத்து இருக்கிறார்.

இந்தூரில் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர்களான ரிலையன்ஸ் நிறுவன அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அடானி நிறுவன அதிபர் கவுதம் அடானி, டாட்டா நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி உள்பட பலர் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்கினால் அரசு சார்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்? என முதல்–மந்திரி அறிவித்தவுடன், இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களே ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக முதல் நாளிலேயே உறுதி அளித்தனர். இந்த மாநாட்டில் மத்திய அரசாங்கத்தின் முதலீடுகள் உள்பட மொத்தம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் வர காத்திருப்பதாக முதல்–மந்திரி சவுகான் பெருமையோடு கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்துக்கு சற்றும் குறையாத வாய்ப்புகளும், திறன்களும் தமிழ்நாட்டில் கொட்டிக்கிடக்கின்றன. பிரதமர் அறிவித்த வெளிநாட்டு முதலீடுகளின் பெரும் பங்கை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசின் தொழில்துறை முனைப்போடு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மத்திய அரசாங்கம் நடத்தியதைப்போல, உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் கூட்டி, புதிய முதலீடுகளை கொண்டுவருவதை போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும். தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஜப்பான் நாட்டைச்சேர்ந்த யமஹா நிறுவனம் அமைத்துக்கொண்டு இருக்கும் ஸ்கூட்டர் தொழிற்சாலை வருகிற ஜனவரி மாதத்தில் உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. தொடக்கத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் ஸ்கூட்டர்களும், அடுத்த 4 ஆண்டுகளில் 18 லட்சம் ஸ்கூட்டர்களும் உற்பத்தி செய்யப்போகிறது. இந்த நிறுவனம் நடத்திய இருசக்கர வாகன டெக்னீஷியன் போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள 21 நாடுகளில் இருந்து, 33 ஆயிரம் பேர்கள் கலந்துகொண்டனர். இதில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம்தான் வெற்றிபெற்றுள்ளார். ஆக, தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கு வாய்ப்புகளும், தொழில் திறன்களும் கொட்டிக்கிடக்கிறது என்பதை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விளம்பரப்படுத்த இதையெல்லாம் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் தமிழக அரசு குறிப்பாக தொழில்துறை ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.06.2026