Tuesday, November 18, 2014

நகை அல்ல; கழிப்பறைதான் அடிப்படை தேவை

பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததில் இருந்து, நாடு முழுவதும் ‘சுத்தம்தான் சுகம் தரும்’ என்ற விழிப்புணர்வு பரவிவிட்டது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும், கிராமப்புறங்களில் கழிப்பறைகள் இல்லாமல், இன்றும் எப்போது இரவு வரும், இருட்டை பயன்படுத்தி திறந்தவெளிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அவலநிலையில் பெண்கள் இருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் சைக்கேடா என்ற கிராமத்தில் திருமணமான ஒரு இளம்பெண் ஒருவர், தான் புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாத நிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், ‘தாலி சங்கிலி’யை, தன் கழுத்தில் இருந்து எடுத்து விற்று, அந்த பணத்தைக்கொண்டு, ஒரு கழிப்பறையை கட்டி பெரிய புரட்சியை செய்துவிட்டார். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், மராட்டிய மாநில மந்திரி பங்கஜா முண்டே, அவரை அழைத்து தன் சொந்த செலவில் ஒரு தாலி சங்கிலியை கொடுத்து கவுரவித்தார். நகைகளை ஒப்பிடும்போது, கழிப்பறைத்தான் அடிப்படை தேவையாகும். அதனால்தான், என்னுடைய தாலி சங்கிலியை விற்று கழிப்பறையை கட்ட முடிவெடுத்தேன் என்று அந்த புரட்சிப்பெண் கூறியது, நிச்சயமாக கிராமப்புற பெண்களை, ஏன் ஒட்டுமொத்த கிராம மக்களையே சிந்திக்க வைக்கிறது.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நேரத்தில், சுதந்திர தினவிழா போன்ற பெரிய விழாவில், மிகப்பெரிய திட்டங்கள் குறித்து பேசவேண்டும் என்று சிலர் கருதலாம். அப்படியிருக்கும்போது, கழிப்பறைகள் கட்டவேண்டும் என்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து ஒரு பிரதமர் பேசுகிறாரே என்று நாட்டு மக்கள் அதிர்ச்சி அடையலாம். ‘தூய்மை இந்தியா’ பிரசாரத்தை பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்க உள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். அதில், பெண் குழந்தைகளுக்கென தனியாக கழிப்பறை வசதிகள் செய்யப்படவேண்டும். இந்த திட்டத்தின்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகள் கட்டப்படவேண்டும் என்று அறிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தமட்டில், தமிழக அரசு கிராமப்புறங்களில் சுகாதார வளாகங்கள் உள்பட கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. ஆனால், கல்வித்துறை இதில் வேகம் காட்டவேண்டும் என்பதை தெளிவாக்கும் வகையில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் பிறப்பித்துள்ள ஒரு தீர்ப்பு தெளிவாக காட்டுகிறது. மத்திய அரசாங்க இணையதளத்தில் உள்ள ஒரு தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 1,442 அரசு மகளிர் பள்ளிக்கூடங்களும், 4,278 ஆண்கள் பள்ளிக்கூடங்களும் கழிப்பறைகள் இல்லாமல் இயங்குகிறது. 2,080 பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகள் இப்போது செயல்படாமல் இருக்கும் நிலையில், மாணவர்களும், மாணவிகளும் கஷ்டப்படுகிறார்கள் என்ற தகவலை சுட்டிக்காட்டி, ஒரு வழக்கு தொடரப்பட்டது. பள்ளிக்கூட கல்வித்துறை 6 வாரங்களுக்குள் அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கட்ட என்ன திட்டங்கள் இருக்கின்றன, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை வசதிகளை உருவாக்குவதற்காக எவ்வளவு காலம் தேவைப்படும்? என்பதை தெரிவிக்கவேண்டும் என்று கூறிவிட்டு, கழிப்பறைகளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தடையில்லா தண்ணீர் சப்ளை வழங்கவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அரசு பள்ளிக்கூடங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை வசதிகள் வேண்டும், பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகள் வேண்டும் என்பதில் கண்டிப்பாக கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தவேண்டும். ஐகோர்ட்டு தெரிவித்தபடி, வெறும் கழிப்பறைகள் அமைத்து பயனில்லை. தண்ணீர் வசதிகளும் வேண்டும். இதையெல்லாம் செய்தால், கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், வளர்ந்த பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலைமையை தவிர்த்துவிடமுடியும். இதை நிறைவேற்றவேண்டும் என்றால், இதற்காக மத்திய–மாநில அரசுகள் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி, பிரதமர் இலக்கு நிர்ணயித்தபடி, அடுத்த ஆண்டு சுதந்திரத்தினத்துக்குள் கழிப்பறைகள் இல்லாத பள்ளிக்கூடமே இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...