Thursday, November 27, 2014

உருவாக்கிக்கொள்பவைதான் வேலைகள்!



வாழ்க்கையில் உளச் சிக்கல் உள்ளவர்களுக்கும் அவர்களின் வேலைப் பளுவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டார் நண்பர் ஒருவர். வேலைப் பளு அதிகம் இருந்தால் உளச் சிக்கல் வருமோ இல்லையோ, மிகக் குறைவான வேலைப் பளு நிச்சயம் மன உளைச்சலைத் தரும் என்றேன். வேலை குறைவாக இருந்தால் முதலில் ஆறுதலாகத்தான் இருக்கும். நிறைய நேரம் இருப்பது நன்மையாகத் தோன்றும். பின்னர் அதுதான் ஆபத்தாக மாறும்.

குறைந்த சம்பளத்திலும் திருப்தி

“வேலைன்னு பெரிசா கிடையாது. ஆனால் கண்டிப்பா சீட்டில் இருக்கணும்!” என்று ஆரம்பத்தில் பெருமையாகப் பேசுபவர்கள் பின்னர் நேரத்தைக் கொல்வதைவிடத் தங்கள் அமைதியைக் கொல்வார்கள். வேலை இல்லாதவன் மனம் ஒரு பிசாசின் பட்டறை என்று தெரியாமலா சொன்னார்கள்?

நீங்களே யோசித்துப் பாருங்களேன். உற்பத்திக் கூடத்தில் அடிமட்டத் தொழிலாளியின் பணியிடம் அவரது ஒவ்வொரு நிமிட வேலையையும் நிர்ணயித்து விடுகிறது. ஒரு பாகத்தைப் பொருத்துவதற்குள் அடுத்த பாகம் தயாராக நிற்கிறது. அத்தனையையும் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். தேநீர் இடைவெளியும் உணவு இடைவெளியும் போய் வரத்தான் நேரம் சரியாக இருக்கிறது. இதனால் மனதை வேறு எதிலும் செலுத்தாவண்ணம் பணிபுரிகிறார்கள். இதனால்தான் குறைந்த சம்பளத்திலும் பணித் திருப்தி இவர்களிடம் அதிகம் உள்ளது.

ஓய்வறியா சூரிய(ளே)னே!

என்ன வேலை , எவ்வளவு வேலை என்று அளவிட முடியாத வேலைகளில் யோசிப்பதற்கு நேரம் நிறைய கிடைக்கிறது. அது பெரும்பாலும் மன உளைச்சலில்தான் கொண்டு முடிகிறது.

வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை நான் எப்போதும் பெருமையுடன் பார்ப்பேன். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு பெண்மணி காலை 5 முதல் இரவு 8 வரை பல வீடுகளில் வேலை பார்ப்பவர். ஒரு பக்கம் வீட்டு வேலை. இன்னொரு பக்கம் சமையல். இன்னொரு பக்கம் வண்டி துடைத்தல். இப்படிப் பல வேலைகள்.

காலை முதல் இரவுவரை அப்படி ஒரு துறுதுறுப்பு. தெரியாத வேலையே கிடையாதோ என்று சந்தேகிக்கும் அளவு எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். யாருக்குப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பார். எங்க ஏரியாவில் எல்லாருக்கும் அந்தம்மா பரிச்சயம்.

“ஓய்வறியா சூரியனே” என்று இவருக்கு போஸ்டர் ஒட்ட ஆளில்லை. ஆனால் சொந்தச் சோகங்கள் எவ்வளவு இருந்தாலும் படுத்தால் நிம்மதியாக உறங்கும் வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். உட்கார்ந்து யோசித்தால் பெரும் பட்டியல் போடும் அளவுக்குப் பிரச்சினைகளும் துயரங்களும் அவருக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நேரம் ஏது?

வேலையில் கரைதல்

யோசிக்க நேரமில்லை என்பது மறைமுக ஆசீர்வாதம். நம் வாழ்க்கையில் வருத்தப்படவும், கோபப்படவும் ஆட்களுக்கும் சம்பவங்களுக்குமா பஞ்சம்? உட்கார்ந்து யோசித்தால் கசப்புதான் மிஞ்சும். குறிப்பாகக் கடந்த காலத்தை இம்மி அளவும் மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. வருங்காலம் பற்றிய பயங்களும் பெரும்பாலும் வீண் என்று நமக்கே தெரியும். அதனால் நேற்றைய வாழ்க்கையையும் நாளைய வாழ்க்கையையும் நினைக்காமல் இருக்க, இன்றைய பொழுதில் நிலைக்க நமக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. அது நம்மை முழுவதுமாக உள் வாங்கிக்கொள்ள அனுமதித்து அதில் கரைந்து போக முடிந்தால் நாம் பாக்கியசாலிகள்.

இதனால்தான் விழித்திருக்கும் நேரத்தில் அதிகம் வேலை இல்லாதவர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள்.வேலை என்பதை நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகப் பார்க்க வேண்டும்.

மன அழுத்தம்

ஆறு மாதமாகச் சம்பளம் தராத கம்பெனியில் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் மிகச் சிறப்பாகச் செயல்படும் நண்பரைச் சந்தித்தேன். சம்பளம் வராத பிரச்சினையைக் கூட நினைக்க நேரமில்லை என்று சிரித்தார். ஒரு புத்த பிக்குவைப் பார்த்தது போலிருந்ததது. “சம்பளம் வராம எங்கே போகும், அதுக்காக வேலையைக் கெடுக்க முடியுமா?”

மன அழுத்தம் மேல்த் தட்டு மக்களுக்கு அதிகமாக வரக் காரணம் அவர்களுக்கு அதிகமான நேரம் கிடைப்பதால்தான். பத்துப் பேருக்குச் சதா பொருள் எடுத்துத் தரும் பெட்டிக்கடைக்காரருக்கோ, சாலையில் மக்கள் நெரிசலில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கோ வராத மன அழுத்தம், ஏசி அறையின் தனிமையில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாதவருக்கு வருகிறது.

வேலையின் முக்கியத்துவம்

அலுவலகத்திலும் அதிகம் வம்பு பேசும் மக்கள் வேலை குறைவான பிரிவுகளில்தான் இருப்பார்கள். ஆனால் வேலைப்பளு உள்ள துறைகளில் உடல் அசதி இருந்தாலும் மன வெறுமை இருக்காது. சீனா போன்ற தேசத்தில் மக்கள் மன நலத்துடன் இருக்கக் காரணம் எல்லாரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள். முதியவர்கள்கூட வீட்டில் இருந்தே சின்னச் சின்ன வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.

வேலை பார்ப்பது முக்கியம். அது நம் படிப்புக்கு, தகுதிக்கு, வசதிக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். வருமானம் இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். குறிப்பாகக் குடும்பத்தை மட்டும் பராமரிக்கும் பெண்கள், ஓய்வுக்குப் பின் முதியோர்கள், படித்து வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்கள் இவர்கள் அனைவரும் அதிகம் தாமதிக்காமல் சில மணி நேரங்கள் செய்யும் பகுதி நேர வேலையையாவது மேற்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

தொலைபேசி வழியே பொருட்கள் விற்கலாம். வலைத்தளத்தில் எழுதலாம். பார்வையற்றோர்க்குப் படித்துக் காட்டலாம். சின்ன முதலீட்டில் பலர் சேர்ந்து தொழில் செய்யலாம். டியூஷன் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம். உங்கள் துறை சார்ந்து ‘குறைந்த கட்டண ஆலோசகர்’ ஆகலாம்.

கோயில்களில் சேவை செய்யலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் அலுவலகத்தில் உதவிகள் செய்யலாம். சிறியதாகத் தொடங்கும் பல வேலைகள் பின்னர் பெரும் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தலாம். எதையாவது செய்யலாம். ஆனால் கண்டிப்பாக எதையாவது செய்யணும். வேலைகள் தானாக வருவதில்லை. அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
Source: The Hindu

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...