Thursday, November 20, 2014

அவசரம் வேண்டாம்

பள்ளிக்கூட பருவத்தில் மாணவர்கள் எத்தனை மொழிகளை படிக்க ஆர்வமாக இருக்கிறார்களோ, எத்தனை மொழிகளை அவர்களால் படிக்க முடியுமோ, அதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டியது, மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும். அதைவிடுத்து, நீ இந்த மொழியைத்தான் படிக்கவேண்டும், அந்த மொழியை படிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, அவர்களது உரிமையில் தலையிடுவது சரியல்ல. இந்தியாவைப் பொறுத்தமட்டில், மாநிலங்களில் அந்தந்த மாநில கல்வித்திட்டம் இருக்கிறது. அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வித்திட்டம் இருக்கிறது. இதுதவிர, மத்திய அரசாங்கம் நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான கல்வித்திட்டமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளிக்கூடங்களில் 1965 வரை மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைப் படித்து வந்தனர். அதன்பிறகு இருமொழி கொள்கை அமலுக்கு வந்தபிறகு தமிழ், ஆங்கிலம் இருமொழிகளை மட்டும் படித்து வருகிறார்கள். இந்தி படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் இந்தி பிரசார சபா நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று அதை பயன்படுத்தி, அதற்குரிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள்.

சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய கல்வித்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் 3–வது பாடமாக ஏதாவது ஒரு மொழியை விருப்பப்பாடமாக படித்து வந்தனர். இதில் தமிழை விருப்பப்பட்டால் படிக்கலாம், அல்லது அந்த பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, பிரஞ்சு, ஜெர்மன் போன்ற ஏதாவது ஒரு மொழியைப் படிக்கலாம் என்று இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பள்ளிக்கூட கல்வியை முடிக்கமுடியும் என்ற நிலையைத் தடுக்க, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் கட்டாய மொழியாக கண்டிப்பாக தமிழை படிக்கவேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் முதல் வகுப்பில் இருந்து ஆங்கிலம், தமிழ் மற்றும் ஒரு மொழி ஆகிய 3 மொழிகளை மட்டுமே படிக்கமுடியும். இதிலும் முதல் இரு மொழிகளுக்குத்தான் தேர்வு இருக்கும். மூன்றாவதாக எந்த மொழியை எடுத்தாலும் அது விருப்ப மொழியாகத்தான் இருக்கமுடியும். ஆனால், இதைத் தாண்டி மேலும் ஒரு வெளிநாட்டு மொழியை படிக்க விரும்பும் மாணவர்கள் அதையும் விருப்பப்பாடமாகத்தான் படிக்க முடியுமே தவிர, அது தேர்வுக்கான பாடமாக இருக்காது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 40–க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் உள்பட நாடு முழுவதிலும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் உள்ள இடைநிலை வகுப்புகளுக்கான கல்வித்திட்டத்தில் திடீரென்று ஒரு மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. 6–வது வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை மாணவர்கள் படித்துக்கொள்ள வசதியாக 2011–ம் ஆண்டு ஜெர்மனி நாட்டோடு ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஜெர்மனி நாட்டு நிதி உதவியுடன் 700 ஆசிரியர்கள் ஜெர்மன் மொழியை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 80 ஆயிரம் மாணவர்கள் ஜெர்மன் மொழியை கற்று வந்தனர். இந்த கல்வி ஆண்டு முடிய இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களின் ஆளுனர்கள் குழு கூட்டம், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலையைப் பார்த்தவுடன் சமஸ்கிருதம் அல்லது ஏதாவது ஒரு இந்திய மொழி என்றார்கள். ஜி20 மாநாட்டுக்காக ஜெர்மனி சென்றிருந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெர்மனி நாட்டு ஜனாதிபதி இதுபற்றி பேசியிருக்கிறார். ஜெர்மன் மொழியை படித்துவந்த மாணவர்கள் ‘டேர்ம்’ என்று சொல்லப்படும் முதல் பருவத்தை முடித்துவிட்டு, 2–வது பருவம் முடியும் நேரத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில், திடீரென நீ ஜெர்மன் மொழியை படித்தது போதும், சமஸ்கிருத மொழியை படிக்க வேண்டும் என்று அவசர முடிவு எடுக்க வேண்டாமே! எந்த முடிவை எடுத்தாலும், நன்கு ஆலோசித்து, விவாதித்து, தேவையான காலஅவகாசத்தை கொடுத்து எடுக்க வேண்டும்.

Source: Daily thanthi 20.11.2014

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...