Friday, November 28, 2014

நடுத்தர மக்களுக்கு இது நல்ல செய்தி


பொதுவாக எந்த அரசாங்கமும் இயங்க வேண்டுமென்றால், அதன் நிர்வாக செலவுக்கும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், மானியங்கள், உதவிகள் வழங்குவதற்கும் நிச்சயமாக நிதி தேவை. அந்த நிதியை வரி மூலம்தான் பெறமுடியும். அதைத்தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் செய்துகொண்டிருக்கிறது. அரசின் வருமானம் பலவழிகளில் வரியாக ஈட்டப்படுகிறது. அதில் ஒரு வரிதான் வருமான வரியாகும். 

இந்தியாவில் வருமானவரி 1860–ம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சனால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857–ம் ஆண்டில் நடந்த சிப்பாய்கலகத்தையொட்டி ஆங்கிலேய அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட இந்த வருமானவரி விதிக்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 1886–ம் ஆண்டில் வருமானவரிக்கென தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டம் பல மாற்றங்களுடன் புதிய சட்டங்கள், திருத்தங்கள் கண்டது. தற்போது ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு என பல விகிதாசாரங்களில் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டுக்குப்பிறகு 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி இல்லை. அதில் இருந்து வரி தொடங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் ஆண்டு வருமானம் வரை வரி இல்லை. அதுபோல, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பேச்சுகளில் வருமான வரியில் பெரும் மாற்றம் வரும் தொனி இருந்தது. கடந்த பட்ஜெட்டின்போது ஒருசில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகள் நிறைய எதிர்பார்த்த வருமானவரி கட்டுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையென்றாலும், ஓரளவுக்கு மனநிறைவை அளித்தது. சமீபத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, அடுத்த ஆண்டு பட்ஜெட்டை தயாரித்துக் கொண்டு வரும் நேரத்தில், மாதசம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதித்து அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்றுவதை தான் ஆதரிக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் என்று இருந்த வருமான வரி வரம்பை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்று உயர்த்திய அருண் ஜெட்லி, மத்திய அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்தால் இதை இன்னும் உயர்த்துவதாக கூறியுள்ளார். நடுத்தர மக்களின் பைகளில் கூடுதலாக பணம் வைக்கும் நிலையை ஏற்படுத்தி, அவர்கள் செலவழிக்கும் நிலையில், அதன்மூலம் மறைமுக வரிகள் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தின் வரியில் 50 சதவீதம், ஒவ்வொருவரும் செலுத்தும் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி போன்றவற்றால்தான் வருகிறது. எனவே, மக்களுக்கு செலவழிக்கும் வலிமையைக் கொடுத்தால், அதன்மூலம் இதுபோன்ற வரிகள் கிடைக்கும். எனவே அவர்களுக்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதிலாக, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடித்து வரி வசூலிக்கலாம் என்று அவர் சூசகமாக சொல்லியிருப்பது, மாதசம்பளம் வாங்கும், நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயமாக வரும் பட்ஜெட்டில் வருமானவரியில் மாதசம்பளம் வாங்கும், நடுத்தர மக்களுக்கு நல்ல பல சலுகைகளை அறிவிப்பார் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாகும். நடுத்தர மக்களைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு நிதிஆண்டின் இறுதியிலும் குறைந்தபட்சமாக அவர்களின் ஒரு மாதசம்பளத்துக்குமேல் வரியாக கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களால் அத்தியாவசிய பொருட்களைத்தாண்டி, ஆடம்பர பொருட்களைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடிவதில்லை. மேலும், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான செலவு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், வருமானவரியும் அதிகமாக இருந்தால் வயதான காலத்துக்கான சேமிப்பு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது என்பது அவர்களது குறை. தேவையற்ற மானியங்களுக்கு, தேவையற்றவர்களுக்கு செல்வதைத்தடுப்பது, நேர்முக வரிகளை வசூலிக்கும் அதிகாரிகள் கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தீவிரமாக இருப்பது போன்ற பல நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து காட்டுவார், வருமானவரியிலும் இன்னும் சலுகைகளை அறிவிப்பார் நிதி மந்திரி.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025