Tuesday, March 15, 2016

எம்ஜிஆர் 100 | 16 - அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.

படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்

‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’

பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்

‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.

இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.

பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’

பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...