Saturday, March 5, 2016

மின்னினாலும் பொன் வேண்டாம்!

DINAMANI

By அழகியசிங்கர்
First Published : 05 March 2016 01:01 AM IST

தினசரியில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்வு என்ற செய்தியைப் படித்தேன். என்ன உயர்வாக இருந்தால் என்ன? தங்கம் விற்கும் கடையில் கூட்டம் குறைவதே இல்லை. தங்கம் எப்போதும் பிரச்னைக்குரிய உலோகமாகவே இருக்கிறது. அதை வாங்குவது ஒரு போதை என்பதால், அதைப் பத்திரப்படுத்துவது ஆபத்தானது. 
 சில ஆண்டுகளுக்கு முன், என் நண்பர் ஒருவர் தன் மனைவியின் நகைகளை எல்லாம் ஒரு திருமண வைபவத்தில் காணாமல் போக்கிவிட்டார். உண்மையில், அந்த நகைகளை நெருங்கிய உறவினர்கள் திருடி வைத்திருந்தார்கள். தங்கம் என்றால் எப்படியெல்லாம் உறவினர்கள் கூட மாறி விடுகிறார்கள்? 
 ஓராண்டுக்கு முன், என் மனைவி கையில் 2 லட்ச ரூபாய் வைத்திருந்தார். அது அவரது சேமிப்புப் பணம். அவருக்கு அந்தப் பணத்தில் நகை வாங்க வேண்டுமென்று தோன்றியது. நான் வேண்டாம் என்று சொன்னால் கேட்கப் போவதில்லை.
 ஒரு பிரபலமான நகைக் கடைக்கு அழைத்துப் போனேன். கடை ஊழியர்கள் எங்களை வரவேற்ற விதத்தைக் கண்டு பிரமித்துப் போனேன். உள்ளே சென்று தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்று சொன்னோம். அந்த இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். 
 என் மனைவி பலவிதமாக தங்கச் சங்கிலிகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு சங்கிலியை வாங்காமல் ஏன் இப்படி செய்கிறார் என்று எனக்குத் தோன்றியது. பின் இறுதியில், அரை மனதாக ஒரு சங்கிலியைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஊழியர்கள் விடவில்லை. 
 என்னையும் தொந்தரவு செய்தார்கள் எதாவது வாங்கும்படி. நானும் ஒரு சங்கிலியை எடுத்துக்கொண்டேன். சின்னச் சங்கிலியாக இருந்தாலும் விலை அதிகம் கொடுத்து வாங்கினோம்.
 பின் காப்பியோ குளிர்பானமோ குடிக்கச் சொன்னார்கள். நான் சர்க்கரை இல்லாத காப்பி சாப்பிட்டேன். நகையின் விலையில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொன்னேன். அவர்கள் நகைத் தயாரிப்பு செலவில் பெரிய மனது பண்ணி கொஞ்சம் குறைத்தார்கள். 
 அன்று அவர்கள் தொந்தரவு செய்து மாதம் ரூ.5,000 கட்டும்படி சீட்டில் சேர்த்தார்கள். 11 மாதம் கட்டும் சீட்டில் சேர்ந்தேன். 11 மாதம் கழித்து நகையை வாங்கிக் கொள்ளலாம்.
 வீட்டிற்கு வந்தபோது மனம் வேதனை அடைந்தது. 2 லட்ச ரூபாய் பணம் என்பது எவ்வளவு பெரிய தொகை. ஆனால், கையில் அடங்குகிற மாதிரி இந்தத் தங்கச் சங்கிலிகளை வாங்கிக்கொண்டு வந்து விட்டோமே என்று தோன்றியது. 
 மேலும், என் வாழ்க்கையில் முதன் முதலாக தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டதால், பாரமாக அது கழுத்தில் தொங்குவதாக தோன்றியது. ஓய்வுபெற்ற பிறகு பகல் நேரத்தில் தூங்கும் வழக்கத்தை நான் வைத்திருக்கிறேன். 
 அதுமாதிரி நான் தூங்கும் போது நகைப் பற்றிய கவலை என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. திடீரென்று விழித்துக் கொள்ளும்போது என் கழுத்தைத் தொட்டு பார்த்துக் கொண்டேன். இது என்னடா புதிய தொந்தரவா இருக்கிறதே என்று நினைத்துக் கொள்வேன்.
 ஒருமுறை மயிலாடுதுறைக்குச் சென்றபோது, ஞாபகமாய் வீட்டில் தங்கச் சங்கிலியைக் கழற்றி பத்திரப்படுத்தி விட்டுத்தான் சென்றேன். பாருங்கள்.. நான் எவ்வளவு சுதந்திரமான மனிதன்? இந்தத் தங்கச் சங்கிலியால் என் சுதந்திரம் பறிபோய்விட்டது. 
 என் அடுக்ககத்தில் கீழே நான்தான் இரவு நேரத்தில் கதவைப் பூட்டும் வழக்கம் உள்ளவன். இரவு நேரத்தில் நான் பனியனைக் கழற்றிவிட்டு கீழே இறங்கி கதவைத் தாழ்ப்பாள் போடுவேன். இந்தத் தங்கச் சங்கிலியை அணிந்தபிறகு, என் கற்பனை விபரீதமாக சிறகு விரித்து அடிக்கிறது.
 யாரோ ஒருவன் தினமும் என்னைக் கண்காணிப்பவன், இரு சக்கர வாகனத்தில் வந்து என் தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு ஓடிப் போவதுபோல் கற்பனை செய்கிறேன். 
 அதனால், கீழே போகும்போது சட்டையை அணிந்துகொண்டுதான் போகிறேன். இந்தத் தங்கச் சங்கிலி இல்லாவிட்டால் நான் இப்படியெல்லாம் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.
 மேலும், சீட்டு கட்டுவதற்காக நான் ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தியாகராய நகரில் உள்ள அந்த நகைக் கடையின் கிளைக்குப் போக வேண்டியிருந்தது. அந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் எனக்குப் பெரிய தொகையாகப்பட்டது. 
 அவர்கள் கொடுக்கும் சீட்டு அட்டையையும், பதிவுச் சீட்டையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியிருந்தது. ஒருமுறை தவறுதலாக அட்டையை எங்கோ வைத்துவிட்டேன். என் மனம் தடுமாறி விட்டது.
 பல இடங்களில் தேடித் தேடி பின் அட்டையைக் கண்டுபிடித்தேன். கண்டு பிடித்தபின் நான் பெரிய சாதனை செய்து விட்டதாகவே நினைத்தேன். 
 எப்போது தங்கச் சீட்டு முடியுமென்று ஒவ்வொரு மாதமும் தவமிருந்தேன். ஒரு வழியாக இந்த மாதம் முடிந்தது. நகை வாங்கச் செல்லலாமென்றால் நகையின் விலை ஒவ்வொரு நாளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது. நான் சீட்டு துவங்கிய நாளிலிருந்து நகையின் விலை பலமடங்கு அதிகரித்துவிட்டது. 
 இந்த முறை நகை வாங்க நகைச் சீட்டை எடுத்துக்கொண்டு நானும் மனைவியும் கடைக்குச் சென்றோம். இரண்டு வளையல்கள் வாங்கி, சீட்டுப் பணம் தவிர, மேலும் ஏழாயிரம் பணம் கட்டினோம். அவர்கள் உபசரித்து சீட்டுப் போடச் சொன்னார்கள். இந்தச் சீட்டு கட்டினதால் பெரிய லாபம் இல்லை என்று சொன்னேன். ஆனால், அவர்கள் வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். 
 வளையலை எடுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடி வந்து விட்டோம். இனிமேல் நகைக் கடை பக்கமே போகக் கூடாது என்று முடிவு எடுத்தோம்.
 ஆமாம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று சொல்வார்கள். இப்போதோ மின்னினாலும் பொன் வேண்டாம் என்று சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...