Sunday, October 22, 2017

சிக்னலை தாண்டி சென்ற ரயிலை பின்னோக்கி நகர்த்திய ஊழியர்கள்

மும்பை:மஹாராஷ்டிராவில், குறிப்பிட்ட எல்லையை தாண்டி சென்று நின்ற ரயிலை, 40 ஊழியர்கள் சேர்ந்து பின்னோக்கி தள்ளி, சரியான இடத்தில் நிற்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இரு தினங்களுக்கு முன், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்துக்கு, 16 பெட்டிகளுடன், மும்பை - லக்னோ சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில், சிவப்பு சிக்னலை தாண்டி சென்று நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, மும்பை மண்டல ரயில்வே மேலாளர் முகுல் ஜெயின் கூறியதாவது:சிவப்பு சிக்னலை கவனிக்காமல், ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுனர், தனக்கு முன், ரயில் பாதையில் தண்டவாளம் இல்லாததை கவனித்ததும், ரயிலை நிறுத்தினார்.

அதற்குள், ரயிலின் கடைசி பெட்டி, நடைமேடையை கடந்துவிட்டது. அந்த வழித்தடத்தில் இருந்து, விரைவு வழித்தடத்திற்கு மாறுவதற்கு, தண்டவாளம் இல்லாததால், ரயிலை பின்னோக்கி நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில் இன்ஜினின், பின்னோக்கி நகர்த்தும் திறன் குறைவாக இருந்ததால், மணிக்கு, ஐந்து, கி.மீ., வேகத்தில் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டது. அத்துடன், 40 ரயில்வே ஊழியர்களும் இணைந்து, ரயில் பெட்டிகளை பின்னோக்கி தள்ளி, நடைமேடை பகுதிக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில், சிக்னலை மதிக்காமல் சென்ற ரயில் ஓட்டுனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026