Monday, October 23, 2017

தலையங்கம்

விஜய் அரசியலுக்கு வருகிறாரா?




தமிழக அரசியலில் பரபரப்பான கருத்து பரிமாற்றங்களை நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் உருவாக்கிவிட்டது.

அக்டோபர் 23 2017, 05:00 AM

பா.ஜ.க. தலைவர்கள் எதிர்ப்பாகவும், ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப்பிறகு தொடர்ந்து திரையுலக தொடர்பு கொண்டவர்களே முதல்-அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தமட்டில், அவர் நடிக்கும்போதே தி.மு.க.வில் மிகத்தீவிரமாக இருந்தார். அவர் படங்களில் எல்லாம் தி.மு.க.வையோ, அறிஞர் அண்ணாவையோ, உதய சூரியன் சின்னத்தையோ குறிப்பிடுவதில் தவறுவதில்லை. ஜெயலலிதாவை பொறுத்தமட்டில், நடிப்பு உலகை விட்டுவிட்டு, அ.தி.மு.க.வில் சேர்ந்து டெல்லி மேல்-சபை உறுப்பினர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் என்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராகவும் பணியாற்றி, எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு முதல்-அமைச்சரானார். அதன்பிறகு தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், இதற்கு முன்பிருந்த ஓ.பன்னீர்செல்வமும் திரையுலகு தொடர்பு கொஞ்சம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளாகவே இருப்பவர்கள்.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் படங்களில் நடித்தவர்கள்தான். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்றும், கமல்ஹாசன் வரப்போகிறார் என்றும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இந்தநிலையில், ‘தளபதி’ என்று ரசிகர்களால் பெரிதும் அழைக்கப்படும் நடிகர் விஜய், அவர் படங்களில் பொதுவாகவே ‘பஞ்ச்’ டயலாக்குகளை உதிர்ப்பார். தற்போது திரையிடப்பட்டுள்ள ‘மெர்சல்’ படத்தில் அண்ணன், தம்பி, அப்பா என்று 3 வேடங்களில் நடித்திருக்கும் விஜய், 3 வேடங்களிலும் ‘பஞ்ச்’ டயலாக்குகளை உதிர்த்திருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, இலவச டி.வி., கிரைண்டர், மிக்ஸி, பேன், ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்ததாக தாக்குதல், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாதது ஆகியவை தொடர்பாக ‘பஞ்ச்’ டயலாக்குகளை உதிர்த்திருக்கிறார். விஜய் இதுவரையில் மிக அமைதியாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுவந்தார். 2009-ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த கூட்டத்திலேயே அவர் சூசகமாக தனது அரசியல் ஆசையை வெளியிட்டுவிட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு சாதாரண மக்களுக்கு பெரும் இன்னல் என்பது போன்ற கருத்துகளை வெளியிட்ட அவர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்ததே அவருடைய அரசியல் ஆசையை வெளிக்காட்டிவிட்டது. தமிழக மீனவர் பிரச்சினையின்போது நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். காவிரி பிரச்சினையில் தனது குரலை ஓங்கி ஒலித்தார்.

‘விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் பேசிய பேச்சுதான் பெரியஅளவில் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றது’. ஆக, நேரடியாக அவரது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கவில்லையே தவிர, அதற்கான பணிகளை தொடங்கிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். நிச்சயமாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார்.

அதற்கு திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆக, இன்றைய சூழ்நிலையில் முதலில் அரசியலுக்குள் வரப்போவது ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?, விஜய்யா? என்றுதான் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. யார் என்றாலும் சரி, இப்படி திரைக்குப்பின்னால் இருந்து அதை தெரிவிப்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்தால் உடனடியாக அதை பகிரங்கமாக வெளியிட்டுவிட்டு, அரசியலில் நுழையவேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா?, இந்த பஞ்ச் டயலாக்குகள் அதற்கு முன்னோடியா என்பதுதான் எல்லோருடைய பரபரப்பான எதிர்பார்ப்புகளாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026