Wednesday, October 25, 2017

மாநில செய்திகள்

டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் ரெயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்


ரெயில்களில் டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 24, 2017, 11:15 PM

சென்னை,சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரிக்கும், சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி போன்ற பல பகுதிகளுக்கும் புறநகர் மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கிவருகிறது.

இந்த புறநகர் மின்சார ரெயில்களிலும், இதேபோல் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் சில போலீசார் சீருடை அணிந்தோ, அல்லது சீருடை அணியாமலோ டிக்கெட் எடுக்காமல் பயணித்து வருவதாக ரெயில்வே துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் மற்றும் ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆகியோருக்கு தெற்கு ரெயில்வேயின் மூத்த கோட்ட வணிக மேலாளர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:–சென்னையில் இருந்து இயக்கப்படும் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் போலீசார் பணியில் இருக்கும்போதும், பணியில் இல்லாதபோதும் உரிய டிக்கெட் இல்லாமல் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் பயணம் செய்வதாகவும், பயணிகள் அமரும் இடத்தில் அவர்கள் உட்கார்ந்து கொள்வதாகவும் பயணிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

ரெயில்களில் சென்னை கோட்ட டிக்கெட் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் அவர்களிடம் பயணம் செய்வதற்கான ஆவணங்களை கேட்கும்போது போலீசார் தங்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டு பயணத்தை தொடர்கிறார்கள். ரெயில்களில் பயணம் செய்யும்போது போலீசார் டிக்கெட் அல்லது உரிய பயண ஆவணங்களை வைத்து இருக்கும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போலீசார் இவ்வாறு பயணம் செய்யும்போது உரிய ஆவணம் அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரெயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026