Wednesday, May 23, 2018

காற்றில் கரையாத நினைவுகள் 13: இரவல் பழக்கம்!

Published : 22 May 2018 08:54 IST

வெ.இறையன்பு







ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.

அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை.

- நினைவுகள் படரும்...

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...