Wednesday, May 23, 2018

காத்திருப்போர் வேறு ரயிலில் செல்லும் வசதி அறிமுகம்

Added : மே 23, 2018 00:59

புதுடில்லி: காத்திருப்பு பட்டியலில் இருப்போர், வேறு ரயிலில் செல்வதற்கு வசதியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., 'விகல்ப்' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் அல்லது, ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களில், டிக்கெட் முன்பதிவு செய்து, காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணியர், ரயில் புறப்படுவதற்கு, 12 மணி நேரத்திற்கு முன் வரை, டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியுள்ளது.இந்நிலையை மாற்றி, டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலுக்கு பதில், இருக்கை அல்லது படுக்கை வசதியுள்ள ரயில்களில், காலியிடம் இருந்தால், அந்த ரயிலில், தங்கள் டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்துகிறது.இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., வெளியிட்ட அறிக்கை:காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிக்கு, 'விகல்ப்' என்று பெயரிடப்பட்ட புதிய திட்டத்தில், ஐந்து ரயில்கள் குறித்த தகவல் வழங்கப்படும். தனக்கு வசதியான ரயிலில், இருக்கை அல்லது படுக்கை வசதி காலியாக இருந்தால், அந்த பயணி பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒருமுறை மாற்று ரயிலில் டிக்கெட் பதிவு செய்து விட்டால், மீண்டும் மாற்ற இயலாது. அதை ரத்து செய்வதானால், ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், ரயில் புறப்படுவதற்கு முன், பயணியர் பட்டியல் தயாரிக்கப்படும் போது, டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர்களுக்கு வேறு ஒரு ரயிலில் இடம் வழங்கப்படும். மாற்று ரயில் டிக்கெட்டில், கட்டண வேறுபாடு இருந்தால் வசூலிக்கவோ அல்லது வழங்கப்படவோ மாட்டாது.எனவே, மாற்று ரயிலில் டிக்கெட் பெற்றவர்கள், புறப்படும் நாளில், தங்களுடைய, பி.என்.ஆர்., எண்ணை பயன்படுத்தி, டிக்கெட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சில ரயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சைவ தினம்' நிறுத்தி வைப்பு மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை, 'சைவ தினம்' ஆக கொண்டாடும் முடிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.'மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், ரயில் பயணியருக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது' என, ரயில்வே வாரியம், சமீபத்தில் அறிவித்து இருந்தது.இந்நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, மறு உத்தரவு வரும் வரை, இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, அனைத்து ரயில்வே மண்டல வர்த்தக மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...