Sunday, May 20, 2018

காஞ்சி முனிவரின் கோடீஸ்வர காரோட்டி

Published : 15 May 2018 10:00 IST

ஸ்ரீதர் சுவாமிநாதன்










‘‘மேத்தா... தலையை சுற்றுகிறது. பூஜையில் உட்காரக்கூட முடியலே...’’

முக்தி அடைவதற்கு முதல் நாள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இவை. தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசியவர்... சுமார் 75 ஆண்டுகளாக குரு சேவையையே பணியாகக் கொண்டு வாழ்ந்து வரும் 83 வயதான சந்திரசேகர மேத்தா. பல தலைமுறைகளாக அவரது குடும்பமே காஞ்சி மடத்துக்கும் சங்கராச்சாரியார்களுக்கும் பணியாற்றி வருகிறது.

மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்ட இவரது பெயரும் சந்திரசேகரன்தான். அந்தப் பெயரை இவருக்கு வைக்கும்படி ஆசி வழங்கியதும் மகா பெரியவர்தான். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அணுக்கத் தொண்டராக இருந்து 64 ஆண்டுகளாக அவரோடு அருகிலேயே இருந்து பணியாற்றியதோடு, அவருக்கு கார் ஓட்டிய பெருமைக்கு உரியவர் சந்திரசேகர மேத்தா. ‘‘காஞ்சி முனிவரின் அருளாசியால் பெரும் கோடீஸ்வரக் குடும்பம் எங்களுடையது. அவர்களுக்கு சேவை செய்வதே எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்’’ என்று சிலிர்ப்புடன் கூறும் சந்திரசேகர மேத்தாவை சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்தோம். அவரது நினைவுகளில் இருந்து..

சந்திரசேகர மேத்தாவின் முன்னோர்கள் குஜராத்தின் ‘கேடவாள்’ என்ற வகுப்பைச் சேர்ந்த ரிக் வேத பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி..1685-ல் மேத்தாவின் மூதாதையர் குஜராத்தில் இருந்து தமிழகம் வந்தனர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜாவின் ஆலோசனைப்படி அப்போது கும்பகோணத்தில் இருந்த காஞ்சி மடத்துக்குச் சென்று அப்போதைய பீடாதிபதியாக இருந்த சங்கராச்சாரியாரை தரிசித்தனர். அப்போதில் இருந்து மேத்தாவின் குடும்பத்தினருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது.

சந்திரசேகர மேத்தாவின் பாட்டனார்கள் ‘டி.பி. மேத்தா அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். பெரும் செல்வந்தர்களாக விளங்கினர். சந்திரசேகர மேத்தாவின் தாத்தா ரங்கநாத் மேத்தா. ஆங்கிலேயர் ஆட்சியில் 1937 முதல் 47-ம் ஆண்டுவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கவுரவ நீதிபதியாக இருந்தவர். 1947 முதல் 52-ம் ஆண்டுவரை இந்தியன் வங்கியின் இயக்குநராக இருந்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தவர்.

ரங்கநாத் மேத்தாவின் மூத்த சகோதரர் ராமநாத் மேத்தா. அவரது மகன் நீலகண்ட மேத்தா. ‘‘இப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெரு இவரது பெயரில் அமைந்ததுதான். நீலகண்ட மேத்தாவின் சகோதரர் சிவசங்கர மேத்தா 1963-64-ல் சென்னை மாநகர மேயராக இருந்தவர். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் உள்ள ‘மேத்தா நகர்’ எனது பாட்டனார் பெயரில் அமைந்ததுதான்’’ என்று பூரிப்போடு சொல்கிறார் சந்திரசேகர மேத்தா.

இவருடைய தாத்தா ரங்கநாத் மேத்தா, காஞ்சி மகா பெரியவருடன் கூடவே இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்தவர். 1923-ம் ஆண்டு மகா பெரியவர் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்தார். ரத்னங்கள் பதிக்கப்பட்ட அந்த தாடங்கங்களை மகா பெரியவர் உத்தரவுப்படி ரங்கநாத் மேத்தாவும் அவரது சகோதரர்களும் கைங்கர்யமாக செய்து கொடுத்துள்ளனர். ‘‘என் தாயின் வயிற்றில் நான் இருந்தபோதே எனக்கு பெயர் வைத்தவர் மகா பெரியவர்’’ என்று கூறி ஆச்சரியப்படுத்தினார் சந்திரசேகர மேத்தா. எப்படி.. என்று மனதில் தோன்றியபோதே அவரே விளக்கினார்.

பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் வாகனத்தில் செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மகா பெரியவர் கூறியிருக்கிறார். 1958-ல் காஞ்சி மடத்துக்கு கார் வாங்கப்பட்டது. சந்திரசேகர மேத்தா தனது சொந்தக் காரை ஓட்டியபடி வருவதை பல முறை பார்த்த பெரியவர் அவரையே மடத்தின் காரை ஓட்டுமாறு பணித்தார். ‘‘1998-ம் ஆண்டு வரை ஜெயேந்திரர் செல்லும் காரை நான் ஓட்டினேன். பிறகு, எனக்கு வயதாகிவிட்டதால் எனது மகன் ரமேஷ் மேத்தா அந்தப் பணியைச் செய்தார்.

இப்போதும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ரமேஷ் மேத்தாதான் கார் ஓட்டுகிறார். இது எங்கள் பரம்பரைக்கு கிடைத்த பேறு’’ என்கிறார் மேத்தா பெருமிதத்துடன்.

மகா பெரியவர் பற்றிய மேத்தாவின் நினைவுகளை கேட்டோம். சில விநாடிகள் நெற்றி சுருக்கி சிந்தனையில் மூழ்கியவர் பிரகாசமான முகத்துடன் சொன்னார்.. ‘‘ஒருமுறை சந்திரமவுலீஸ்வரர் பூஜை முடிந்து மகா பெரியவர் எல்லாருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். பிரசாதம் பெற்றுக் கொள்ள வரிசையில் ஒருவராக வந்து கொண்டிருந்தார் ‘கல்கி’ சதாசிவம். அவர் பெரியவர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பெரியவருக்கும் சதாசிவம் மீது அலாதி அன்பு. சதாசிவம் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். கடல் கடந்து சென்று வந்தவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுவது இல்லை. இது தெரியாமல் சதாசிவம் வரிசையில் வந்து கொண்டிருந்தார். மடத்தைச் சேர்ந்தவர்களுக்கு சதாசிவம் வெளிநாடு சென்று வந்தவர் என்று தெரியும். இருந்தாலும் அவரிடம் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்துடன் தவித்துக் கொண்டிருந்தனர். பெரியவரை நெருங்கிய சதாசிவம் தீர்த்த பிரசாதம் பெற பவ்யமாக கை நீட்டினார். எல்லாருக்கும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு.. பெரியவர் சிரித்தபடி தன் முன் இருந்த தேங்காயை எடுத்து பக்குவமாக உடைத்து அதன் இளநீரை சதாசிவத்தின் கைகளில் பிரசாதமாக ஊற்றினார். மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற சதாசிவம், ‘எனக்கு ஸ்பெஷல் பிரசாதம்’ என்று பூரித்தார். கடல் கடந்து சென்றவருக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கக் கூடாது என்ற சம்பிரதாயத்தையும் பெரியவர் மீறவில்லை. தன் பக்தரையும் ஏமாற்றவில்லை. தர்மத்தின் அவதாரம் மகா பெரியவர்’’.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கார் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.. ‘‘ஜெயேந்திரருக்கு ஏழைகள், என்றால் மிகவும் பரிவு. எப்போதும் காரில் புடவை, வேட்டி, போர்வை, ஜமுக்காளம் ஆகியவை நிறைய இருக்கும். சாலையோரம் உள்ள சாதாரண மக்களைக் கண்டால் அவற்றை எடுத்துக் கொடுப்பார். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, 5 லாரி நிறைய அரிசி, ஸ்டவ், மண்ணெண்ணை மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஜெயேந்திரருடன் குஜராத் சென்றது மறக்க முடியாத அனுபவம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஜெயேந்திரரே வழங்கினார். முக்தியடைவதற்கு முதல் நாள் காலை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தலை சுற்றுகிறது. பூஜையில் உட்காரக்கூட முடியவில்லை’ என்று தெரிவித்தார். நான் பதறிப் போனேன்.. மறுநாள்...’’ என்று வார்த்தையை முடிக்க முடியாமல் கலங்கிய மேத்தாவை உற்சாகப்படுத்தும் வகையில், ‘‘ஜெயேந்திரருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாமே?’’ என்று கேட்டோம். மீண்டும் உற்சாகமாக பேசினார் மேத்தா..

‘‘ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் கொடைக்கானல் சென்றிருந்தோம். ஆர்.ஆர்.ராஜூ என்பவரும் பெரியவரின் பக்தர்தான். அவர் கோல்ஃப் விளையாட்டைப் பற்றி ஜெயேந்திரரிடம் சொன்னார். கையில் பிடித்திருக்கும் ‘ஸ்டிக்’கால் சிறிய பந்தை அடித்து குழிக்குள் விழவைக்க வேண்டும் என்று விளக்கினார். இதை கவனித்த ஜெயேந்திரர் கோல்ஃப் விளையாடுவதற்கான சிறிய பந்தை எடுத்து குழிக்குள் போட்டுவிட்டு நிதானமாக.., ‘இதற்கு போய் இவ்வளவு கஷ்டப்படுவானேன்?’ என்று கேட்டு கலகலவென சிரித்தார்’’ என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி மகிழ்ச்சியான நினைவுகளில் மூழ்கினார் சந்திரசேகர மேத்தா!

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026