Saturday, May 4, 2019

நாளை, 'நீட்' தேர்வு: 15 லட்சம் பேர் பங்கேற்பு

Added : மே 04, 2019 01:25

சென்னை:நாடு முழுவதும், 'நீட்' நுழைவு தேர்வு நாளை நடக்கிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நாளை நடக்கிறது. நாடு முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எழுத உள்ளனர்; அவர்களுக்காக, 2,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 1.40 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுத, 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு, மதியம், 2:00 மணிக்கு துவங்கி, 5:00 மணிக்கு முடிகிறது. தேர்வில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆடைகள், ஆபரணங்களுக்கும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய, கலாசார மற்றும் மத ரீதியான உடை உடுத்தும் மாணவர்கள், கூடுதல் சோதனைகளுக்காக, மதியம், 12:30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' மற்றும் புகைப்படம், கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். தேர்வு மையத்துக்குள், தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி கிடையாது. மாணவியரை சோதிக்க, பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, கண்காணிப்பு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தயார் செய்ய வேண்டியது!

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் முகவரிகள், ஹால் டிக்கெட்டில் தரப்பட்டுள்ளன. 

முகவரி அறிவதில் சிரமம் தவிர்க்க, தேர்வு மையங்களை இன்றே பார்த்து வைப்பது நல்லது. 

அதேபோல, நீண்ட துாரம் பயணம் செல்வதாக இருந்தால், இன்றே சென்று விடுவது நல்லது.

ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட பின், சில மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்றியுள்ளதாக, என்.டி.ஏ., என்ற, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

.புகைப்படம்தேர்வு மையத்தின் பெயர், முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்றவற்றை, ஹால் டிக்கெட்டிலும், என்.டி.ஏ., இணையதளத்திலும், ஒரு முறை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, வழங்கப்பட்ட புகைப்படத்தை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். 

ஒரு புகைப்படம் தேவைப்படும் நிலையில், கூடுதலாக ஒன்றோ, இரண்டோ புகைப்படம் வைத்திருப்பது நல்லது

.ஹால் டிக்கெட்டின் நகலை, கூடுதலாக பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆடை பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க, கையில், ஒரு சாதாரண ஆடை வைத்திருந்தால் உதவியாக இருக்கும்

.தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன், சரி விகிதத்தில் உணவு சாப்பிட்டு கொள்ள வேண்டும்.

 உடல் உபாதை தராத வகையில், எளிதான உணவை எடுத்துக் கொள்வது சிறந்தது. 

தேர்வு மையத்திற்குள், 11:30 மணியில் இருந்து, மாலை, 5:30 மணி வரை, ஆறு மணி நேரம் வரை இருக்க வேண்டும்.

அதற்கேற்ற சக்தி கிடைக்கும் உணவு அல்லது பழச்சாறு உட்கொண்டிருக்க வேண்டும். 

மையத்துக்கு செல்லும் முன், அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். 

வருமான வரித்துறையின், 'பான்' கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ரேஷன் அட்டை, 'ஆதார்' அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்று, கட்டாயம் வேண்டும் என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.

இந்த ஆவணங்களில், ஒன்றுக்கு மேல் இருந்தால், அதை மாற்று உபயோகம் கருதி, பெற்றோர் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

தேர்வு மையம்; திடீர் மாற்றம்நாளை நடக்கவுள்ள, 'நீட்' நுழைவு தேர்விற்கு, தமிழகத்தில், 200 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில், மதுரையில், 35 மையங்களில், 6,853 மாணவர்கள், 11 ஆயிரத்து, 147 மாணவியர் என, மொத்தம், 18 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், மதுரை மண்டலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும், தேர்வு மையங்களில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சில மையங்கள் ரத்து செய்யப்பட்டு, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளன. மையங்கள் மாற்றப்பட்ட மாணவர்களின் பதிவு எண்கள், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,வின், www.ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

 மாணவர்கள் புதிய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கான அறிவிப்பை, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஹம்சபிரியா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...