Sunday, December 1, 2019

செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறும் தாலுகாக்கள்



செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களும் செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் இடம் பெறுகின்றன.

பதிவு: நவம்பர் 29, 2019 04:30 AM

வாலாஜபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து இன்று (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகிறது. புதிதாக பிறக்கும் இந்த மாவட்டத்தை பற்றிய சிறப்புகளை இனி காண்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னை முதல் பொன்னேரி வரை செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டுதான் செயல்பட்டது. 1997-ல் தான் இந்த மாவட்டமானது காஞ்சீபுரம், திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களும் புதிய மாவட்டத்தில் இடம் பெறும்.

செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர், மறைமலை நகர், பம்மல், செம்பாக்கம், மதுராந்தகம் என 8 நகராட்சிகளையும், அச்சரப்பாக்கம், சிட்லபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாடம்பாக்கம், மாமல்லபுரம், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பள்ளிக்கரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் போன்ற பேரூராட்சிகளையும் கொண்டு அமைகிறது செங்கல்பட்டு மாவட்டம்.

காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், புனித தோமையார் மலை, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், இலத்தூர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்கள் புதிய மாவட்டத்தில் இணைந்துள்ளன.

உலகமே வியந்து பார்க்கும் வரலாற்று சின்னங்களையும், தகவல்களையும் கொண்ட பெருமை மிக்க மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் ஆகும். பல்லவ சாம்ராஜ்யத்தின் சிற்ப கலைக்கூடமாக திகழ்கின்ற மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஒரு மணிமகுடம் என்று சொன்னால் அது மிகையல்ல. அங்குள்ள பல்லவ காலத்து சிற்பங்களும், வரலாற்று சின்னங்களும் எந்த காலத்திலும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கே பெருமை சேர்ப்பதாகும்.

சமீபத்தில் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீன அதிபரே மாமல்லபுரம் வந்து சிற்பங்களை கண்டு வியந்தது தமிழனின் திறமையை, பெருமையை உச்சம் கொள்ள செய்தது. எப்போதும் சுற்றுலா பயணிகளின் முதல் இடமாக நினைவில் நிற்கும் மாமல்லபுரம் தொடர்ந்து அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து வருவது மாவட்டத்திற்கு வருவாயை மட்டுமல்ல புகழையும் சேர்க்கப்போகிறது. வரலாற்று நினைவுகளை மட்டுமல்லாது, பக்தி மனம் தவழும் ஆன்மிக தலங்களையும் கொண்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டம்.

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஏரிகாத்த ராமர் கோவில் என ஆன்மிக தலங்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

செங்கல்பட்டு மாவட்டம் 120 கி.மீ அழகிய எழில் கொஞ்சும் கடற்கரையை (கிழக்கு கடற்கரை சாலை) கொண்டது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் உள்ளதால் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்கு குறைவில்லை.

வண்டலூர் உயிரியல் பூங்கா, வெளிநாட்டு பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகியவை சுற்றுலா வருமானத்தை ஈட்டி தருபவை. மாவட்டத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி பெரும்பாலான மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வைப்பதுடன், விவசாயத்தை தழைக்க செய்கிறது.

சென்னையை இணைக்கும் செங்கல்பட்டு ரெயில் நிலையம், தலைமை அரசு ஆஸ்பத்திரி, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஒருங்கிணைந்த விரைவு மற்றும் அமர்வு கோர்ட்டுகள், மாவட்ட தலைமை நூலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என மக்களுக்கு சேவையாற்றி வருபவை பல உள்ளன.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...