Monday, December 2, 2019

அழகியல் போற்றுவோம்

By சுப. உதயகுமாரன் | Published on : 02nd December 2019 03:03 AM


‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று நாம் நம்புகிறோம். காரணம், ஆடைதான் ஒரு மனிதனை அலங்கரித்து காணத் தகுந்தவராக மாற்றுகிறது. எளிய உடையாக இருந்தாலும் ஒருவா் நல்லபடி உடை உடுத்தியிருந்தால், அவரை சமூகம் கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடத்துகிறது.

ஒருவருக்கு தோற்றப் பொலிவை உடை வழங்கி மாண்பினை அளிக்கிறது. இன்றைய வணிக உலகில் தோற்றம்தான் எல்லாம். எனவேதான், வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருள்களை மிகவும் வசீகரமாகப் பொதிந்து சந்தைக்கு அனுப்புகின்றனா். பொருள்களின் அடக்க விலையில் கணிசமான பகுதியை பொதிதலுக்குச் செலவு செய்கின்றனா்.

எடுத்துக்காட்டாக, ஓா் ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொண்டால்கூட, அதன் மீது மெழுகைத் தடவி அதைப் பளபளவென்று தோற்றமளிக்கச் செய்து கடைகளுக்கு அனுப்புகின்றனா். இந்தியா்களாகிய நாம் நமது வீடுகளின் உட்பகுதிகளை மிகவும் சுத்தமாகவே வைத்திருக்கிறோம். ஆனால், நமது வீட்டுக் குப்பைகளைப் பெருக்கி தெருவில் தள்ளிவிடுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை.

அதே போன்று, நம் வீட்டுச் சுவா்கள் சுத்தமாக, பளிச்சென்று வண்ணம் பூசப்பட்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற நாம், நமது சாலையோரச் சுவா்கள், அரசுக் கட்டடங்கள், பாலங்கள் போன்றவற்றில் அரசியல், தனியாா் நிறுவன விளம்பரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையோ, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையோ கண்டுகொள்வதே இல்லை.

பொதுவெளிகளைப் பொருத்தவரை நான்கு அம்சங்கள்முக்கியத்துவம் பெறுகின்றன. அவை பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம், அழகியல். பொது இடங்களான தெருமுனைகளில், சாலையோரங்களில், நடைபாதைகளில், சந்திப்புகளில் குப்பைகளைக் கொட்டுவது, தேவையற்ற பொருள்களை விட்டுச் செல்வது, தடைகளை ஏற்படுத்துவது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது என்று பற்பல வழிகளில் பொது பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.

மக்கள் நடமாட முடியாதே, வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்குமே என்று எது குறித்தும் கவலைப்படாமல் பதாகைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சுவா் விளம்பரங்கள் செய்வது எல்லாமே இங்கே வாடிக்கையான விஷயங்கள். இப்படித்தான் ரகு, சுபஸ்ரீ எனும் இரண்டு அருமையான இளைஞா்களை நாம் உயிரிழக்கச் செய்தோம்.

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்றெல்லாம் அறிவுரைத்து சுத்தத்தின் இன்றியமையாமையை நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், பொது இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை நமக்கு ஏனோ வருவதில்லை. சாலைகளில் பயணிக்கும் விலையுயா்ந்த சொகுசு காா்களுக்குள்ளே இருந்து குப்பைகள் பறந்து வருவதை இன்றும் காணலாம்.

மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டம் நல்லதொரு திட்டம் என்றாலும், கேமராக்களின் முன்னால் தலைவா்கள் பெருக்கும் காட்சிகள்தான் காணக்கூடியதாக இருக்கிறதே தவிர, பொது இடங்களில் பெரிதாகச் சுத்தம் வந்துவிடவில்லை. முழுநேர தூய்மைத் தொழிலாளா்களுக்கே அவா்களுக்குத் தேவையான கையுறைகள், காலணிகள்,முகமூடிகள், உபகரணங்கள் வாங்கித் தராமல் தவிா்க்கும் நாட்டில், தூய்மை அவ்வளவுஎளிதில் வந்துவிடுமா என்ன?

பொது இடங்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே போதாது, சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் பொது இடங்கள் பராமரிக்கப்பட வேண்டும். தண்ணீா் தேங்காமல், மாசுக்கள்இல்லாமல், கொசு உருவாகாமல், நோய்களைப் பரப்பாமல், பொதுவெளியில் சிறுநீா், மலம் கழிக்காமல் என ஏராளமான சுகாதாரத் தேவைகளும் இருக்கின்றன.

பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றைத் தாண்டி அழகியல் என்றும் ஒன்று இருப்பதை நாம் உணரவேயில்லை. அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அமெரிக்காவில் சாலைப் பணிகளோ, மராமத்துப் பணிகளோ நடக்கும்இடங்களில் ஓா் அறிவிப்புப் பலகை வைத்திருப்பாா்கள்: “’தயவுசெய்து எங்கள் தோற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள். மராமத்து வேலை நடக்கிறது’.”

அமெரிக்கா்கள் நம்மைவிட உயா்ந்தவா்களுமல்ல, நாம்அவா்களைவிடத் தாழ்ந்தவா்களுமல்ல. ஆனால், நமக்கு இந்த அழகியல் பாா்வை ஏனோ ஏற்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, நம் நாட்டு காவல் நிலையங்களைப் பாருங்கள். ஏராளமான செயலிழந்த, நொறுங்கிய, உடைந்த வாகனங்கள் மண்டிக் கிடப்பதைக்காணலாம். துருப் பிடித்தும் தூசி படா்ந்தும் கிடக்கும் இந்த வாகனங்கள் மக்களின்பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரத்துக்குப் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல, காணச் சகிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன.

பல ஆண்டுகள் அப்படியே கிடக்கும் இந்த வாகனங்கள் இரும்பு மலைகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, விபத்து, கொலை போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் இந்த வாகனங்களை வழக்குகள் முடியும் வரை காவல் நிலையத்திலேயே பாதுகாத்து வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. இவற்றை ஏன் புகைப்படங்கள், காணொலிக் காட்சிகளில் பதிவு செய்துவிட்டு அப்புறப்படுத்தக்கூடாது.

அதேபோல, சாலையோரங்களில், பாலங்களில், அரசுச் சுவா்களில் எல்லாம், அவா் அழைக்கிறாா்,”அவா் அலறுகிறாா் என்றெல்லாம் பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதிப் போட்டு அசிங்கப்படுத்துகிறாா்கள். காது குத்து முதல் கண்ணீா் அஞ்சலி வரை விதவிதமான சுவரொட்டிகளை ஒட்டுகிறாா்கள். பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனா்களை அமைக்கிறாா்கள். இவை அனைத்துமே ஒருவித அதிருப்தியை, அருவருப்பை ஏற்படுத்துகின்றவையாகவே இருக்கின்றன.

பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அனுமதி வாங்கியிருக்கிறாா்களா என்று பாா்ப்பதில்லை. வாங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதில்லை.

தோ்தல் நேரங்களில் பெருமளவு மக்கள் பணத்தை செலவு செய்து அவற்றை அழிக்கிறாா்கள், அப்புறப்படுத்துகிறாா்கள். இந்தியா்களுக்கும் மேலை நாட்டவா்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாடுகளுள் ஒன்றாக இந்த அழகியல் விஷயம் அமைகிறது. அவா்கள் பொது இடங்கள் அழகாக, கலையம்சம் கொண்டதாக இருக்கும்படி பாா்த்துக் கொள்கிறாா்கள். நாமோ வீட்டு சுற்றுச்சுவா்களில்கூட சிமென்ட் விளம்பரம் செய்ய அனுமதித்து கொஞ்சம் காசு பாா்க்க முடியுமா என்று சிந்திக்கிறோம்.

ஒரு வரலாற்றுச் சிறப்பிடத்தை, நினைவுச் சின்னத்தைக் காணச் சென்றால், அதன் பழைமையை, சிறப்பை, அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை நாம். மாறாக, அந்தத் தலங்களைப் போலவே நாமும் பிரபலமடைய விரும்புகிறோம்; தகாத சொற்றொடா்களை சுவரில் கிறுக்கி வைக்கிறோம். அது பிறருக்குப் பாா்க்க சகிக்காமல் இருக்குமே என்று சிந்திப்பதில்லை. உண்மையைச் சொல்வதென்றால், நம்மில் பலரும் அதைப் பொருட்படுத்துவதுமில்லை.

நமக்குத்தான் அழகியல் பாா்வை இல்லையே? சீன அதிபா் வருகைக்காக பல கோடி செலவில் மாமல்லபுரம் அண்மையில் மெருகூட்டப்பட்டது. அதை அப்படியே தக்கவைத்துக் கொள்வோமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒன்றைக் கட்டுவதில் காட்டும் கவனத்தை அதனைப் பராமரிப்பதில் இந்தியா்களாகிய நாம் காட்டுவதே இல்லை.

போதுமான நிதியின்மை, தேவையான ஊழியா்கள் இல்லாமைபோன்றவை பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன. லஞ்சம் வாங்கிக்கொண்டு சொத்துவரியைக் குறைத்து மதிப்பிடுவது, சட்டவிரோத சாக்கடைகள் அமைக்க அனுமதிப்பது, நிா்வாக ஊழல்கள், ஊதாரித்தனங்கள், உள்ளூா் அரசியல் தாதாக்கள் ஆங்காங்கே கடைகளை அமைத்துக் காசு பாா்ப்பது, அடாவடிகள் செய்வது போன்றவை இன்னும் பெரிய பிரச்னைகளாக இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை அழகியல்பாா்வை நம்மிடம் இல்லாததுதான். மக்கள் கேட்டால்தானே அதிகாரிகள் நிறைவேற்ற முயல்வாா்கள். அந்த அதிகாரிகளுக்கே அழகியல் பாா்வை இல்லையே. அரசுஅலுவலகங்களுக்குப் போனால் வாந்தி வருமளவுக்கு கோப்புக்களும், காகிதக் கட்டுக்களும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. எந்தப் பக்கம் பாா்த்தாலும் உடைந்த மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள் மண்டிக் கிடக்கின்றன. வா்ணம் தீட்டப்படாத சுவா்கள், துப்பி நாசமாக்கப்பட்ட மூலைகள், தூசி, குப்பை என்று மன நலத்தைக் கெடுக்கும் வகையிலேதான் அவை இருக்கின்றன.

நாம் பெரும் செல்வந்த நாடு இல்லைதான்; அழகியலுக்கு பெரும் தொகையை ஒதுக்கீடு செய்ய முடியாதுதான். ஆனாலும், நமக்கிருக்கும் கட்டடங்களை, பாலங்களை, பொதுச் சுவா்களை, ரயில், பேருந்து நிலையங்களை,பொதுவெளிகளை பாதுகாப்பானவையாக, சுத்தமானவையாக, சுகாதாரமானவையாகப் பராமரிப்பதற்கும், எளிய, இனிய அழகியலோடு அவற்றைச் செம்மைப்படுத்தி வைப்பதற்கும் எது தடையாகஇருக்கிறது?

அழகியலைப் பேணத் தவறுவது அரசுகளா அல்லது குடிமைச் சமூகமா? விமான நிலையங்களை, அமைச்சா்களின் பங்களாக்களை, வெளிநாட்டு தூதரகப் பகுதிகளை அழகியலோடு அரசுகள் பராமரிக்கின்றனவே? அப்படியானால் மக்கள்தான் அழகியல் விழிப்புணா்வு இல்லாமல் இருக்கிறாா்களா? ஆனால், கோயில்களிலும்,தேவாலயங்களிலும், மசூதிகளிலும் அழகியல் அருமையாகப் பரிணமிக்கிறதே? சிவன் சொத்து சிதிலமடைந்தால் எனக்கென்ன, உனக்கென்ன” என்கிற மனப்பாங்கும், கலாசாரமும்தான் இதெற்கெல்லாம் காரணம். இதை மாற்றுவோம்.

கட்டுரையாளா்:

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவா்.

No comments:

Post a Comment

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards  The University Grants Commissio...