Sunday, March 1, 2020

வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்

Added : பிப் 29, 2020 23:09




கடல் அலைகள் தாலாட்ட, கடற்காற்று உங்கள் நாசிகளில் கடலின் வாசனைகளை நிரப்ப, பனை மரங்கள் சூழ உங்கள் நாள் ஆரம்பித்தால் எப்படி இருக்கும். அத்தகைய அழகான தீவு தான், 'ரீ யூனியன் ஐலண்ட்!'
யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய பூமி என்று சான்றிதழ் பெற்ற, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள, ரீ யூனியன் ஐலண்ட் தீவு, மொரீஷியஸ் நாட்டிலிருந்து, 210 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்தியர்களுக்கு இங்கு செல்ல விசா தேவையில்லை என்பது கூடுதல் தகவல்.இரண்டரை லட்சம் இந்தியர்கள் வாழும் இந்த தீவில், இறங்கிய நிமிடத்திலிருந்து நீங்கள் அதன் வெவ்வேறு கலாசாரத்தை அனுபவிக்கலாம். அழகிய உப்பங்கழிகள் நிறைந்த ரீ யூனியன் தீவில், மரகத பச்சை நிறக் கடலில், 30 கி.மீ., துாரத்திற்கு, பவளப் பாறைகள் அமைந்துள்ளன. இந்த தீவு, 1,000 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த தீவை நடந்து சென்றோ, குதிரை மேலோ அல்லது பைக்குகளிலோ நம் வசதிக்கேற்ப சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்கள் தங்கியோ சுற்றிப் பார்க்கலாம். இத்தீவை சுற்றி, 31 விடுதிகள் உள்ளன. இவை அனைத்தும், இயற்கை சூழ்நிலையிலேயே அமைந்துள்ளன.பல நீர்வீழ்ச்சிகள், நதிகள் மற்றும் உப்பங்கழிகள் உள்ளன. இவற்றில் படகுகள், ஆழ்கடல் நீச்சல் மூலம் பல சாகச விளையாட்டுகளை மேற்கொள்ளலாம். ரீ யூனியன் தீவில் பல தமிழ் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் சீன கோவில்களும் உள்ளன. இங்கு, பல நாட்டவர்களின் பண்டிகைகளும் பெருமளவில் கொண்டாடப்படுகின்றன.

என்ன சாப்பிடலாம்?

எல்லா உணவும் அரிசி சார்ந்தே உள்ளன. இந்திய சீன உணவுகள், கறி மற்றும் மீன் உணவுகள், தக்காளி, பூண்டு, மஞ்சள், வெங்காயம் போட்டு தயாரிக்கப்படுகின்றன. கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மது வகையும் பரிமாறப்படுகிறது. இதை நேரடியாகவோ அல்லது சர்க்கரை மற்றும் தேனுடனோ கலந்து தருகின்றனர். இங்கு சில எரிமலைகளும் இருக்கின்றன. அவற்றை சிறிய விமானங்கள் மூலமாகவோ, ஹெலிகாப்டர் மூலமாகவோ பார்வையிடலாம். இத்தீவு, 3,000 ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் ஒரு எரிமலை வெடித்ததிலிருந்து உருவாகியது. எரிமலைகளை சுற்றி, மலைகளும், வளங்களும், விளை நிலங்களும், நீர்வீழ்ச்சிகளும் உருவாகின. இதன் தென் பகுதியில் எரிமலையில் ஆன கரிய நிற மணற்பரப்பை கொண்ட கடற்கரையை காணலாம். உலகின் அழகிய கோல்ப் மைதானங்களும் இங்குள்ளன.

எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து, ஏர் ஆஸ்ட்ரல் நிறுவனத்தின் வாரமிருமுறை விமானத்தில் டில்லி அல்லது மும்பை சென்று, அங்கிருந்து ரீ யூனியன் சென்றடையலாம்.

பாதுகாப்பு

இந்த தீவில் வசிப்பவர்கள் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களை மரியாதையுடனும், பாசத்துடனும் நடத்துகின்றனர். திருட்டு பயம் அறவே கிடையாது.

உடல் நலம்

கொசுக்கள் உள்ளதால், அதற்கான பாதுகாப்பு அவசியம். பலவகை மருந்துகளும், மருந்து கடைகளில் கிடைக்கின்றன. வெயில் அதிகம் என்பதால், அதற்காக பாதுகாப்புகளுடன் பயணிக்க வேண்டும். மெல்லிய கதர் ஆடைகள், கறுப்பு கண்ணாடிகள், தொப்பிகள் தேவைப்படுகின்றன. வெயிலுக்கான களிம்புகளும், கிரீம்களும் தேவைப்படும்.
சீதோஷ்ண நிலை

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குளிர் காலம் என்பதால், 20 டிகிரி வரை செல்கிறது. மலைகளில், 4 டிகிரி வரை கூட செல்லலாம். அங்கு, பனி படர்ந்து காணப்படுகிறது.இத்தீவிற்கு செல்ல விதிமுறைகள்ரீயூனியன் தீவு, பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாக கருதப்பட்டாலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, 15 நாட்கள் வரை தங்குவதற்கு விசா தேவையில்லை.

உள்நாட்டு பயணங்கள்

நாமே ஓட்டிச் செல்லும் வாடகை கார்களே பெரும்பாலும் உபயோகப் படுத்தப்படுகின்றன. நம் ஊரை போலவே வலது பக்கம் ஓட்டக்கூடிய கார்களே உள்ளன. இந்த கார்களை வாடகைக்கு எடுக்க, சர்வதேச ஓட்டுனர் உரிமம் அல்லது பிரான்ஸ் நாட்டின் ஓட்டுனர் உரிமம் தேவைப்படும். இந்தியாவுக்கும், ரீ யூனியன் தீவிற்குமான நேர வித்தியாசம் நம் நாட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் பின்னால் உள்ளது. ரீ யூனியன் தீவில் நேரம் காலை, 8:00 என்றால், இந்தியாவில், காலை, 9:30.நாணயம் மற்றும் வங்கி சேவைகள்பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாகவும், ஐரோப்பியாவின் ஒரு பகுதியாகவும் இருப்பதால், 'யூரோ' நாணயங்கள் உபயோகப்படுகின்றன. விசா, மாஸ்டர் கார்டு, டைனர்ஸ் கார்டு, யூரோ கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...