Tuesday, August 15, 2017


விமான நிலையம் - செங்கல்பட்டு மேம்பாலம்:தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேச்சு

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:23

சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை மேம்பால சாலை அமைப்பதற்கான ஆய்வறிக்கை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னை, ஜி.எஸ்.டி., சாலையில், விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலம் முதல் செங்கல்பட்டு வரை, போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள, 10 கி.மீ., வரை, புதிய குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு, உட்புற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையில் சேரும் இடங்களில் தான், அதிகளவில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், குரோம்பேட்டை, எம்.ஐ.டி., தாம்பரம், வண்டலுார் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுஉள்ளன.

ஒவ்வொரு சந்திப்பிலும் மேம்பாலம் கட்டுவதற்கு பதிலாக, திரிசூலம் முதல் செங்கல்பட்டு வரை, 41 கி.மீ.,க்கு மேம்பால சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்தது. இதற்காக நியமிக்கப்பட்ட, சி.டி.எம்.ஸ்மித் நிறுவனம், சாத்தியக்கூறு அறிக்கையை, சி.எம்.டி.ஏ.,விடம் அளித்துள்ளது.இதனடிப்படையில், புதிய மேம்பால சாலை அமைக்கும் திட்டம் குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேச்சு நடத்தப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.- நமது நிருபர் -
கண்ட இடங்களில் கொட்டப்படுது குப்பைகேள்விக்குறியாகும் சுகாதாரம்:தேவையாகிறது மக்களுக்கு விழிப்புணர்வு
பதிவு செய்த நாள்15ஆக
2017
01:45

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கண்ட இடங்களில் சகட்டுமேனிக்கு குப்பையை வீசுவது தொடர்கதையாவதால் மக்களின் சுகாதாரமான வாழ்வு கேள்விக்குறியாகிறது.விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளின் அருகில் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் எல்லாம் புதிதாக குடியிருப்புகள் உருவாகி உள்ளன. 

நகராட்சியில் வசிப்பவர்கள் வீடுகள் கட்டி இங்கு குடிபெயர்ந்து வருகின்றனர். நகராட்சிக்கு மிக அருகில் இருந்த போதும் இப்பகுதிகளில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டியது ஊராட்சிகளின் பொறுப்பாக உள்ளது.வாறுகால் சுத்தம் செய்வது, குப்பை சேகரித்து அகற்றுவது,சாலை அமைப்பது போன்ற பணிகள் ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுகிறது. இப்பகுதியில் வசிப்பவர்கள் காலியிடங்களையும், ரோட்டின் ஒரங்களையும் கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நகராட்சி பகுதிகளை விட நகராட்சியை யொட்டியுள்ள கிராமங்களில் அதிகளவு குப்பை சேர்ந்து காணப்படுகிறது. நச்சுப்புகைநகராட்சிகளில் உள்ளது போன்று குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. குப்பையை கண்ட இடத்தில் வீசி செல்கின்றனர். இறைச்சிக்கழிவுகள்,உபயோகப் படுத்தப்பட்ட பழைய உடைகள், மெத்தை விரிப்புகள்,ரோட்டின் ஒரத்திலும், காலியாக உள்ள பிளாட்டுகளில் வீசி செல்கின்றனர். 

இவை காற்றுக்கு பறந்து வாறுகால், பாதாளசாக்கடை குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி சுகாதாரகேட்டை உருவாக்குகிறது.சிலர் இவற்றினை தீ வைத்து கொளுத்துவதால் இதில் எழும் நச்சுப்புகையால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதி்க்கும் நிலை உள்ளது.சுற்றுச்சூழல் மாசு மாவட்ட நிர்வாகம் நகராட்சி மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று குப்பையை வாங்கி வர வேண்டும் இவற்றை குப்பைக்கிடங்கு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தி தற்காலிக பணியாளர்களையும் நியமித்துள்ளது. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் படி பொதுமக்களிடம் பல முறை வலியுறுத்தியும் விழிப்புணர்வு முகாம், ஊர்வலம் நடத்தியும் உள்ளது.எனினும் கண்ட இடங்களில் பொதுமக்கள் குப்பையை வீசி விட்டு செல்வதும், தீ வைத்து எரிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

 இவற்றில் பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரி பேக்குகள் கலந்து கிடப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. வீடுகளில் குப்பை வாங்க வருபவர்கள் தெருவில் சிதறிக்கிடக்கும் குப்பையை அள்ள மாட்டோம் என கூறுவதாலேயே தெருவில் குப்பை வீசி செல்வதாக பொதுமக்கள் பலர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். மாதம் ஒரு முறையாவது ஒவ்வொரு தெருவாக வந்து மாஸ்கிளீனிங் மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட நிர்வாகம் இதில் உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேவை மாஸ்கிளீனிங்சாத்துார் அய்யாச்சாமி, ''சாத்துார்: அமீர்பாளையம்,புதுப்பாளையம், படந்தால்,அயன்சத்திரப்பட்டி, வாழவந்தாள்புரம் உள்ளிட்ட பகுதிகள் நகராட்சியின் அருகில் உள்ளது.இங்கு தெருக்களில் குப்பை சிதறிக்கிடக்கின்றன. மாதம் ஒரு முறை கூட குப்பையை அள்ளிச்செல்ல ஆட்கள் வருவதில்லை. இவற்றால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.அப்பகுதியினர் தீ வைத்து எரிப்பதாலும் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உள்ளது. நகராட்சி பகுதிகளில் உள்ளது போன்று மாஸ்கிளீனிங் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

செங்கல்பட்டில் சுகாதார அதிகாரிகள் நியமனம் அவசியம்:நகராட்சியில் சீர்கேடுகளை தவிர்ப்பது அத்தியாவசியம்

பதிவு செய்த நாள்15ஆக
2017
00:14


செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சுகாதார பணிகளை செய்ய, சுகாதார அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சி,6.8 சதுர கி.மீ.,யில் உள்ளது. நகரில், 275 தெருக்களும், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2012ல், பத்து வார்டுகள், தனியார் நிறுவனத்திடம், சுகாதார பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.துப்புரவுஇதில், 22 வார்டுகளை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஏ.பி.சி., என, வகைப்படுத்தி, சுகாதார பணிகளை செய்கின்றனர்.சுகாதார பணிகளுக்கு, இரண்டு டிராக்டர்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் உள்ளன. இதன் மூலம், நகராட்சியில், சேரும் குப்பையை அப்புறப்படுத்துகின்றனர்.

ஒரு நாளைக்கு, 42 டன் குப்பை சேருகிறது. தெருக்களில் உள்ள, மழைநீர் கால்வாய்களையும், ஊழியர்கள் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், ஊழியர் பற்றாக்குறையால், கால்வாயில் உள்ள குப்பை எடுக்காமல் உள்ளது.தற்போது, நகர் நல அலுவலர் மற்றும், சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அனைத்து பணிகளையும், ஆணையரே பார்த்து வருகிறார். இதனால், நகராட்சியில், ஒட்டுமொத்த பணிகளையும், அவரே பார்க்க வேண்டிய சூழல் உள்ளதால், சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

'டெங்கு' காய்ச்சல்

இந்நிலையில், அழகேசன் நகரைச் சேர்ந்த, ஜெகன்மோகன் என்பவருக்கு, 'டெங்கு' காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பின், நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர்புற சுகாதார பணியாளர்கள், அழகேசன் நகர் மற்றும் ஜி.எஸ்.டி., சாலை ஆகிய பகுதியிலிருந்த, குப்பை மற்றும் மழை நீர் கால்வாயிலிருந்த அடைப்பு களை சீரமைத்தனர்.

தற்போது, மேற்கண்ட பகுதியில், தொடர்ந்து, கொசு மருந்து அடிக்கப்படுகிறது.இது போல, ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணாநகர் உட்பட பல்வேறு பகுதியில், தேங்கி உள்ள குப்பை மற்றும் மழை நீர் கால்வாய்களையும் சீரமைத்து, கொசு மருந்து அடிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.எனவே, நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க, நகரில் சுகாதார பணிகள் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற மாநிலங்களுக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்15ஆக
2017
03:26




புதுடில்லி: 'சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடிதம் :

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:பல நாடுகளுடன், நாம் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறோம். அங்குள்ள பிரச்னைகளால், பலர் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்கி வருகின்றனர்.இதுபோல் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை, பயங்கரவாத அமைப்புகள், தங்கள் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றன; 

இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: அண்டை நாடான மியான்மரின் ராகைன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அச்சுறுத்தல் ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா, ஹரியானா, உத்தர பிரதேசம், டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில், 14 ஆயிரம் பேர் தங்கியிருப்பதாக, பார்லிமென்ட்டில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுபோலவே, அண்டை நாடுகளைச் சேர்ந்த பலர், அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக தங்கிஉள்ளனர். இவர்களுக்கு பணம் கொடுத்து, தங்கள் பணிகளுக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்; இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது. அதனால், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து வெளியேற்றும்படி, மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது - டி.எம்.இ., தகவல்

பதிவு செய்த நாள்15ஆக
2017
00:37




சென்னை : ''தமிழக அரசு மருத்துவ மனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை,'' என, டி.எம்.இ., எனப்படும், மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம்,கோரக்பூரில் உள்ள, அரசு மருத்துவமனையில்,ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஐந்து நாட்களில், மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த, 63 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

ஒப்பந்த நிறுவனத்திற்கு, 67 லட்சம் ரூபாயை அரசு தராததால், அந்நிறுவனம், ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால், இந்த கொடூரம் நடந்தது தெரிய வந்துள்ளது.இது, மற்ற மாநிலங்களுக்கும் எச்சரிக்கை போல் நடந்துள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்தள்ளது. ஆனால், 'அதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையிலும், திரவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் இருந்து, வார்டுகளில், ஒவ்வொரு படுக்கை அறைக்கும், குழாய் வழியே, திரவஆக்சிஜன் எடுத்து செல்லப்படுகிறது.

மேலும், மருத்துவமனைகளில், 40 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரை இருப்பில் உள்ளன. எனவே, உ.பி.,யில் நடந்தது போன்ற சம்பவம், தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மல்லையாவை அடைக்க மும்பை சிறை தயார்?

புதுடில்லி,:'வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, 61, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவரை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள, ஆர்தர் சாலை சிறை, பாதுகாப்பு மிக்கதாக இருக்கும்' என, அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.



கர்நாடகாவைச் சேர்ந்த, மதுபானத் தொழிலதிபர், விஜய் மல்லையா. இவர், விமான சேவை நிறுவனம் நடத்த, வங்கிகளில்,9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆர்தர் சாலை சிறை


இந்நிலையில், டில்லியில், மூத்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:பிரிட்டனில் உள்ள மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. மல்லையா, இந்தியாவுக்குநாடு கடத்தப்பட்டால், அவரை பாதுகாப்பாக அடைத்து வைக்கும் வகையில், மும்பையில், ஆர்தர் சாலையில் உள்ள சிறை திகழ்கிறது.
இது தொடர்பாக, ஆர்தர் சாலை சிறைத்துறை, விரிவான அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மத்திய அரசால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு விசாரணை, இந்த கோர்ட்டில் தான் நடந்து வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு  முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகலாம்

'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும், தமிழக அரசின் சட்ட வரைவு மசோதாவை ஏற்ற, மத்திய உள்துறை அமைச்சகம், மற்ற அமைச்சகங்களுடன், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால், இது குறித்து முக்கிய அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.





மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும், பொது நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலிருந்து விலக்கு அளிக்கும்படி, தமிழக அரசு, மத்திய அரசை, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து, 'ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், சமீபத்தில் தெரிவித்தார்.

ஆவணங்கள் தயார்

இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் டில்லி விரைந்தார்.

நேற்று டில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு சென்ற அவர், ஓராண்டுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வரைவை அளித்தார். காலையில், உள்துறை இணைச் செயலர் மித்ராவிடம் ஆலோசனை நடத்திய பின், தமிழ்நாடு இல்லம் திரும்பிய ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆவணங்களை தயார் செய்து, மீண்டும் உள்துறைஅமைச்சகத்திற்கு வந்தார்.
ஏற்கனவே, மத்திய அரசு வசம் இரண்டு சட்ட வரைவுகள் இருந்தன. நிரந்தர விலக்கு கோரும் சட்ட வரைவு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு கோரும் சட்ட வரைவு ஆகியவை, திரும்பப் பெறப்பட்டன. அவற்றில் கூடுதல் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கோரும் புதிய சட்ட வரைவு, தெளிவாக தயார் செய்யப்பட்டு, உள்துறை இணைச் செயலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

நல்ல முடிவு

இதன்பின், நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ''மத்திய அரசிடம், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கோரும் சட்ட வரைவு ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன; நல்ல முடிவு வரும் என, நம்புகிறோம்,''
என்றார்.ஓராண்டுக்கு விலக்கு கோரும் சட்ட வரைவை தயார் செய்வதில், ராதாகிருஷ்ணனோடு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் கிருஷ்ணன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் உமாநாத், தமிழக மருத்துவப் பணிகள் கழக இயக்குனர் செந்தில்குமார் ஆகியோரும் முக்கிய பங்காற்றினர்.

நாளை வெளியாகலாம்

சட்ட வரைவை ஏற்பதாக, உள்துறை அமைச்சகமும் தெரிவித்தது. இதன்பின், இந்த ஆவணங்கள், சட்டத்துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரத் துறை ஆகிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மூன்று அமைச்சகங்களின் ஒப்புதல் கிடைத்ததும், மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு, சட்ட வரைவை அனுப்பி வைக்கும். இதன்பின், அந்த சட்ட வரைவு, தமிழக அரசுக்கு அனுப்பப்படும். இதையடுத்து, தமிழக கவர்னர் மூலமாக, 'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் பற்றிய முடிவு நாளை வெளியாகலாம்.

NEWS TODAY 27.01.2026