Tuesday, August 22, 2017

'மாஜி' சண்முகநாதனுக்கு 'கல்தா'

பதிவு செய்த நாள்21ஆக
2017
23:52

திருநெல்வேலி: பன்னீர் அணியில், ஆரம்பம் முதலே இருந்தவர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன். அணிகள் இணைப்புக்கு பின் இவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க.,வில் பன்னீர் போர்க்கொடி துாக்கிய போது, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு செல்லும் வழியில், நடுவழியில் இறங்கி ஓடி வந்தவர் சண்முகநாதன். அதன் பிறகு தான் அவரது அணிக்கு ஒவ்வொருவராக வரத் துவங்கினர். அணிகள் இணைப்பு பேச்சு நடந்த போதே, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதையும், எந்த பதவியும் கிடைக்காது எனபதையும் சண்முகநாதன் உணர்ந்து கொண்டார். இதன் காரணமாகவே, நேற்று முன்தினம், திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும்செவலில் பன்னீர் பங்கேற்ற, ஒண்டிவீரன் நினைவு தின விழாவை, சண்முகநாதன் புறக்கணித்தார்.சண்முகநாதனுக்கு பதவி கிடைக்காததால், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இன்று கவர்னரை சந்திக்க முடிவு
பதிவு செய்த நாள்21ஆக
2017
23:45

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், இரவு சென்னை மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடம் வந்தனர். அங்கு அமர்ந்து 30 நிமிடம் தியானம் செய்தனர். இன்று காலை 10:00 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தியானம் செய்த எம்.எல்.ஏ.,க்கள்:

1. தங்க தமிழ்ச்செல்வன், -ஆண்டிபட்டி
2. கதிர்காமு,- பெரியகுளம்.
3.ஜக்கையன்,- கம்பம்
4. தங்கதுரை,- நிலக்கோட்டை.
5.முத்தையா, - பரமக்குடி
6. சுப்ரமணியன்,- சாத்துார்.
7. ஜெயந்தி,- குடியாத்தம்.
8. மாரியப்பன் கென்னடி-, மானாமதுரை
9.பழனியப்பன்,- பாப்பிரெட்டிபட்டி.
10.செந்தில்பாலாஜி, - அரவக்குறிச்சி.
11.வெற்றிவேல், -ஓமலூர்.
12.பார்த்திபன்,- சோளிங்கர்.
13. கோதண்டபாணி,- திருப்போரூர்.
14. ஏழுமலை, - பூந்தமல்லி.
15. ரெங்கசாமி,- தஞ்சை
16. பாலசுப்பிரமணியன்,- ஆம்பூர்.
17.முருகன்,- அரூர்.
18. சுந்தராஜ், ஓட்டப்பிடாரம்.
5000 ஆண்டு வரை தேதி சொன்னால் கிழமையை சொல்லும் சிறுவன்; இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்

பதிவு செய்த நாள்21ஆக
2017
23:36




ராமநாதபுரம்: ஒன்று முதல் ஐயாயிரம் ஆண்டு வரை, தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் 13 வயது சிறுவனுக்கு, அபார நினைவாற்றலுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைசேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகம்மது பஹீம்,13. துபாயில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர்.

சிறுவயதில் உறவினர் வீட்டிற்கு சென்றால், அவர்களின் வீட்டில் உள்ள காலண்டரை பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த நிலையில், தற்போது ஒன்று முதல் 5000 ஆண்டு வரை, எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை கூறுகிறார்.

இதேபோல் உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் கூறுகிறார். எந்த நாட்டை கேட்டாலும், அதன் தலைநகர், கொடி, மொழி, நாணயத்தை கூறுவார். சர்வதேச எண் முறை, அனைத்து அலைபேசி நிறுவனங்களின் பெயர், மாடல், தயாரிப்பு தேதி, மென்பொருள் குறித்தும் கூறுகிறார்.

எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தின் பெயர், தேதி, நேரத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார். இவருக்கு, சிறந்த ஞாபக சக்தியாளர் என்ற முறையில், 5000 ஆண்டுகளுக்கான தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் திறனுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது. இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை இந்தியா சாதனையாளர் புத்தகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வழங்கினார். பின்னர் அந்த சிறுவன் கலெக்டர் நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.



தினகரன் எம்.எல்.ஏ.,க்களால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுமா?

அ.தி.மு.க., பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என மூன்றாக பிளவுபட்டது. நேற்று பன்னீர் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தன. இரு அணியினரும் இணைந்து சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு முழுமையாக விலக்க முடிவு செய்துள்ளனர்.



இரு அணிகள் இணைந்தாலும் ஆட்சி பெரும்பான்மைக்கு போதுமான எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. 

அ.தி.மு.க.,விற்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; இவர்களில் 20 பேர் தினகரன் அணியில் உள்ளனர். சமீபத்தில் மதுரை மாவட்டம் மேலுாரில் நடந்த தினகரன் பொதுக்கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

அவர்களில் 13 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'தினகரன் அழைத்ததால் சென்றோம்; ஆட்சி கவிழ்க்க துணை போக மாட்டோம்' என, கூறினர்.

தற்போது இரு அணிகள் இணைந்த நிலையில் மீண்டும் 20 எம்.எல்.ஏ.,க்கள்,தினகரன் பக்கம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று தினகரன் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 19 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்பம் அரசியலில் இருந்து விலக்கப்படுவதை எதிர்த்து இவர்கள் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். இதை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆட்சிக்கு பாதிப்பில்லை
.
சென்னையில் நேற்று, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது: தற்காலிக பொதுச் செயலர் சசிகலா பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். எனவே பொதுச் செயலர் பதவி குறித்து பொதுக்குழு தான் முடிவு செய்யும்.

இன்றைய கூட்ட பொருளில் பொதுச் செயலர், துணை பொதுச் செயலர் குறித்து எதுவுமில்லை. வைத்திலிங்கம் பொதுச் செயலர் குறித்து கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

ஜெ.,வால் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்கள் ஜெ., அரசு தொடர்ந்து ஆள வேண்டும் என்றே நினைப்பர். மாறான கருத்தை யாரும் தெரிவிக்க மாட்டார்கள்; அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
வங்கிகள் இன்று, 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்22ஆக
2017
02:36

பொதுத்துறை வங்கி ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என, தெரிகிறது. வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவிலான, ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், இன்று வங்கி பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பொதுத்துறை வங்கி ஊழியர்களை கேட்ட போது, 'நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகள் திறந்திருக்கும். ஆனால், ஊழியர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள். அதனால் வழக்கமான பணிகள் பாதிக்கும். அதே நேரத்தில், இணைய பரிவர்த்தனை, பாதிக்கப்படாது' என்றார்.

- நமது நிருபர் -
இலவச வில்லங்க சான்று சேவை மீண்டும் துவக்கம்
பதிவு செய்த நாள்22ஆக
2017
02:34

பதிவுத்துறை இணையதளத்தில், திடீரென முடங்கிய, இலவச வில்லங்க சான்று பெறும் சேவை, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. புதிதாக வீடு, மனை வாங்குவோர், முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக அறியும் வசதி, பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த சேவை, சில நாட்களாக முடங்கியதால், சொத்துகளின் வில்லங்க விபரங்களை அறிய முடியாத நிலை உருவானது. இது குறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில், பதிவுத்துறை இணையதளத்தில், இலவச வில்லங்க சான்று சேவை, நேற்று மாலை முதல், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.

- நமது நிருபர் -
'ஆதார்' பதியாத கார்டுகள் ரேஷன் பொருட்கள், 'கட்'


பதிவு செய்த நாள்22ஆக
2017
02:34


குடும்பத்தில் ஒருவரின், 'ஆதார்' விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதார் கார்டு விபரங்கள் அடிப்படையில், உணவுத்துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 56 ஆயிரத்து, 936 ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் விபரத்தையும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை. அவர்கள், 24ம் தேதிக்குள், தங்களின் ஆதார் விபரத்தை பதிவு செய்து, ரேஷன் கார்டுகளை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பதியாத ரேஷன் கார்டுகளை, உணவு வழங்கல் துறை முடக்கி வைக்க உள்ளது. இதையடுத்து, அந்த கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும்.

- நமது நிருபர் -

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...