Friday, August 25, 2017

வேலைவாய்ப்புக்கு புதுப்பித்தல் சலுகை

பதிவு செய்த நாள்24ஆக
2017
23:59


சென்னை: பல்வேறு காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 - 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது. 

ஆக., 22 முதல் நடைமுறைக்கு வந்துள்ள, இதை பெற விரும்புவோர், மூன்று மாதங்களுக்குள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதோர், http://tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்திலும் புதுப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.
பொற்சலங்கை குலுங்க வரும் பாலகணபதி பொங்கும் இன்பம் தந்திடுவாய் எந்த நாளுமே!

பதிவு செய்த நாள்24ஆக
2017
22:27



பாடுங்க! பாட்டு பாடுங்க!

அந்த காலத்தில் தாத்தா, பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பிள்ளையார் பெருமையை எடுத்து சொல்வர். பெரியவர்கள் பாட சிறுவர்கள் அதைக் கேட்டு பாடுவர்.
'குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்.
அந்தக்கால குழந்தைகளிடம் பக்தியை வளர்ப்பதில்
இது போன்ற பாடல்கள் உதவியாக இருந்தன.
நாமும் இதை பாடலாமே

கொண்டாட்டம் ஏன்?

விநாயகரின் அவதாரம் குறித்த செய்தி மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.சிவனின் மனைவி பார்வதி தன் தோழிகளுடன் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது தோழிகள், “தேவி! சிவனுக்குரிய பிருங்கி, நந்தி முதலிய கணங்களே நமக்கும் காவலர்களாக உள்ளனர். நமக்கென தனிக்காவலரை ஏன் நியமிக்க கூடாது?” எனக் கேட்டனர்.

உடனே பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அந்த உருவத்தின் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். அவரை தன் அந்தப்புர காவலராக நியமித்தாள். அவருக்கு 'கணபதி' என பெயரிட்டாள். அப்போது, அவர் மனித முகம் கொண்டவராகவே இருந்தார்.

இந்தநேரத்தில், பார்வதியைக் காண சிவன் அங்கு வந்தார். புதுக்காவலரான கணபதி அவரைத் தடுத்ததோடு, பார்வதியின் உத்தரவு இல்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்தார். கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை வெட்டினார். பார்வதி இதைக் கண்டிக்கவே, யானைத் தலையைப் பொருத்தி உயிர்கொடுத்தார். இந்த ஆனைமுகனுக்கு முதல் பூஜை செய்த பிறகே, அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடக்க வேண்டுமென ஆணையிட்டார். விநாயகர் யானைமுகனாக அவதரித்த நாளை 'விநாயகர் சதுர்த்தி' விழாவாக கொண்டாடுகிறோம்.

பூஜை செய்வது எப்படி

காலையில் நீராடி, பூஜையறையில் மாக்கோலம் இட்டு மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் பலகையிட்டு விநாயகர் களிமண் சிலை வைக்க வேண்டும். விநாயகர் படமும் வைக்கலாம். அருகம்புல், எருக்கம் பூ மாலையை அணிவித்து அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, பழங்கள் படைத்து துாப, தீபம் காட்ட வேண்டும். அப்போது அவ்வையாரின் விநாயகர் அகவலைப் படிக்க வேண்டும். இரவு விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பூஜை முடித்த மூன்றாம் நாளில் களிமண் விநாயகரை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். மதியம் ஒருவேளை உணவு சாப்பிட்டு, இரவில் பால், பழம் சாப்பிட வேண்டும்.

அறுபடை வீடு கொண்ட ஆனைமுகா!

ஆறுமுகன் முருகனைப் போல ஆனைமுகனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.
* முதல் படைவீடு திருவண்ணாமலைகார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு அல்லல் போக்கும் விநாயகராக வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் துன்பம் போக்குவதில் நிகரற்றவராக இவர் திகழ்கிறார்.
* இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். காசிக்குச் சமமாகத் திகழும் இங்கு 'ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி தரிசனம் செய்ய வேண்டும். தனி கொடிமரம் இவருக்கு இருப்பது சிறப்பு. இவரை வழிபட்டபின் படியேறி மேலேறுவது போல நம் வாழ்வில் மேன்மை அளிப்பவராக இருக்கிறார்.
* மூன்றாம் படைவீடு திருக்கடையூர் அபிராமி கோயில். இங்கு 'கள்ளவாரணப் பிள்ளையார்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுள், ஆரோக்கியம்
பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
* நான்காம் படைவீடான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்தி விநாயகராக வீற்றிருக்கிறார். தன்னை நாடி வருவோரின் வாழ்வில் வெற்றியை அருளும் வள்ளலாக திகழ்கிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் சன்னதி உள்ளது. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது போல அளவில் சிறியவரான இவர் சக்தி வாய்ந்தவராக உள்ளார்.
* ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் உள்ளது. கற்பக மரம் போல பக்தர் விரும்பும் வரங்களை அளித்து அற்புதம் நிகழ்த்தும் இவர் பெயரால் இத்தலம் விளங்குகிறது.
* ஆறாம் படைவீடான கடலுார் மாவட்டத்திலுள்ள திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக இருக்கிறார். பொள்ளுதல் என்பதற்கு 'செதுக்குதல்' என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி இவர். காலப்போக்கில் பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என மாறி விட்டது.

வெள்ளியை மறக்காதீங்க!

விநாயகரை வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வழிபட வேண்டும். இன்று வெள்ளியும், சதுர்த்தியும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. வணங்கும்போது நினைவிற்கு வரவேண்டியது அவ்வையாரின் 'சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று துவங்கும் 'விநாயகர் அகவல்' பாடல். இதை பாடினால், இரட்டிப்பாக பலன் உண்டாகும். காஞ்சிப்பெரியவர், “நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை ஏற்பட அவ்வையார் மூலம் பிள்ளையாரை பிடிப்பதே வழி” என்கிறார்.

ரகசியத்தை தெரிஞ்சுக்கங்க!

விநாயகருக்கு மோதகம், அவல், பொரி ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைக்கிறோம். பெரும் தத்துவம் இதில் அடங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.மோதகம்: வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை அடையலாம் என்பதன் அடிப்படையில் படைக்கப்படுகிறது.அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக்
காட்டுகிறது.

'ஆன் தி வே' ஆண்டவன்

நம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தை முதல் பெரியவர் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், “பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,” என்று இவரிடம் போய் நிற்பர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் 'ஆன் தி வே ஆண்டவனாக' இருந்து நம்மை காப்பவர் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப்பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி தான் நடக்கிறது. பல நாடுகளிலும் இவரது வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. ஆறுஆதாரங்களில் மூலாதார மூர்த்தியாக இருந்து நம்மை கரைசேர்ப்பவர் இந்த ஆனைமுகப் பெருமான் தான்.

காஞ்சிப்பெரியவர்சொல்றதைக் கேளுங்க!

தமிழ் முருகன், தமிழ் தெய்வம் என்றெல்லாம் முருகனை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால், அவரின் அண்ணனான விநாயகரும் தமிழ் தெய்வம் என்கிறார் காஞ்சிப்பெரியவர்.
தமிழகத்தைப் போல, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் விநாயகருக்கு அதிக கோயில்கள் இல்லை. சொல்லப் போனால், விநாயகரின் சாம்ராஜ்யமான மகாராஷ்டிராவில் கூட விநாயகர் கோயில்கள் குறைவாகவே உள்ளன. ஆற்றங்கரை, அரசமரம், தெருக்கோடி, முட்டுச்சந்து, வெட்டவெளி, சாலைக்கரை என்று எங்கு சென்றாலும் விநாயகருக்கு வழிபாடு நடப்பது இங்குதான். தமிழகம் 'தெய்வத்தமிழ் நாடு' என பக்தி மயமாக திகழ்வதற்கு, முருகனின் அண்ணனான விநாயகரே முதல் காரணமாக இருக்கிறார்.
சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 00:11

சென்னை: சேலம், கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாக்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தொழில் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக பிரசாந்த்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஜி.லதா நியமனம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை:

சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வி துறைக்கு...

பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிக முதன்மை செயலராக நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்., மாற்றப்படவில்லை. முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்

பதிவு செய்த நாள்
ஆக 24,2017 18:59



சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடு விக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்று இரவு பரோலில்விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது, பேரறிவாளன் தாயார் கோரிக்கை மனுவை ஏற்று அவரை பரோலில்விட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் அவர் பரோலில் விடுவிக்கப்படுவார் என்றார்.

இதையடுத்து இன்று இரவு 8: 55 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுதலையானார்.

பரோல் குறித்து தகவலறிந்த வட்டார்ஙகள் கூறுகையில்,, இரவு நேரத்தில் யாரும் பரோலில் விடுவிக்கப்படுவதில்லை. எனினும் பரோலை எதிர்த்து யாரும் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுவிடாது என்பதற்காகவே இரவில் பரோலில் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அநத் வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலையான பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் மூன்று போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு சென்றன

பேரறிவாளனுக்கு பரோல் நிபந்தைனைகள்

சிறையில் அளிக்கப்பட்ட முகவரியில் தான் தங்கி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் நாள் தோறும் கையெழுத்து இட வேண்டும் . பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது ரூ.200 நோட்டு
பதிவு செய்த நாள்24ஆக
2017
13:21



புதுடில்லி: புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான மாதிரி தாள்களையும் வெளியிட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த நோட்டில், ஒரு புறத்தில் மகாத்மா காந்தி படமும் அதன் அருகில் தேவநாகிரி எழுத்தில் ரூ.200 என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் சாஞ்சி ஸ்தூபி இடம்பெற்றுள்ளது. பார்வையற்றோர் இந்த நோட்டை தொட்டு, மதிப்பை உணரும் வகையில் ரூ.200 நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால், சில்லரை பிரச்னை தீர்க்கும் வகையில் இந்த நோட்டுகள் வெளியிடப்படுகின்றன. இந்த நோட்டு வெளியிடுவதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.
உப்புக்கு ஒரு ரூபாய் வசூலித்த ஓட்டல்

பதிவு செய்த நாள்24ஆக
2017
14:48




ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில், உப்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடந்தது என்ன?

ஐதராபாத்தில், ராஜ்பவன் சாலையில் சோமாஜிகுடா என்ற இடத்தில், பார் வசதியுடன் கூடிய ஓட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை, அவினாஷ் சேதி என்பவர் தன் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது தான் சாப்பிட இருந்த எலுமிச்சை கலந்த சோடாவில் சேர்க்க, கூடுதலாக சிறிய அளவிலான உப்பு தரும்படி கேட்டுள்ளார். ஆனால், பில்லில் அதற்கான கட்டணம் சேர்க்கப்படும் என அவருக்கு தெரியாது. அனைத்தும் முடிந்து பில் வந்த போது சேதி அசந்து விட்டார். உப்புவுக்கு ஒரு ரூபாய் கட்டணம் என அந்த பில்லில் போடப்பட்டு இருந்தது. இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டல் நிர்வாகம் விளக்கம்

இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், ' இது தவறாக நடந்து விட்ட சம்பவம். நாங்கள் புதிய சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கி உள்ளோம். அதைஊழியர்கள் தற்போது தான் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சேதி என்பவர் பில்லுக்கு பணம் கட்டும் போது, இரவு, 11 மணியாகி இருந்தது. ஊழியர்கள் பணியை முடிக்கும் அவசரத்தில் இருந்தனர். எனவே, பில்லை கவனிக்க முடியவில்லை' என்றனர்.சேதி சாப்பிட்ட எலுமிச்சை கலந்த சோடாவின் கட்டணமான, 150 ரூபாயை திரும்ப தர ஓட்டல் நிர்வாகம் முன் வந்தது. ஆனால், சேதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
சென்னையில் மீண்டும் பெரு வெள்ளம்..?

பதிவு செய்த நாள்25ஆக
2017
04:58




'சென்னையில், நவம்பரில் வெள்ளம் வரும்' என, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது.

ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை, இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. செப்., இறுதி வரை, இந்த மழை நீடிக்கும்; அக்டோபரில், வட கிழக்கு பருவமழை துவங்கும். 'தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், இயல்பான அளவு பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையமும், சர்வதேச வானிலை ஆய்வு மையமும், ஏற்கனவே அறிவித்துள்ளன.

அதே போல், 2015ல், சென்னைக்கு வெள்ளத்தை ஏற்படுத்திய, 'எல் நினோ' மற்றும் 2016ல், சென்னையை புயல் தாக்க காரணமான, 'லா நினா' ஆகிய, இரு பருவ நிலைகளும், தற்போது இல்லை என்றும், வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், 'நவம்பரில், சென்னையை புயல், வெள்ளம் தாக்கி அழிக்கும்' என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' தெரிவித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இது போன்ற தகவல்களை, நாசா தெரிவிக்கவில்லை.

இது குறித்து, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: நவ., மாதம், தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும், வட கிழக்கு பருவமழை காலம். அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ உருவாகி, மழையை கொடுக்கும். கடந்த, 2015 மற்றும் 2016ல், பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால், இயற்கை சீற்றங்கள் உருவாகின. இதை, ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிகழ்வுகளை காட்டி, சிலர் ஆண்டுதோறும், மக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றனர்.

புயல், மழை, வெள்ளம் குறித்து, செயற்கைக்கோள்கள் வாயிலாக கணித்து, வானிலை ஆய்வு மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கும். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து தாக்கும் புயல், தற்போதே உருவாகிக் கொண்டிருப்பதாக வதந்தி பரப்புவது, மூடநம்பிக்கையை காட்டுகிறது. எனவே, அடிப்படை அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இது போன்று பீதி ஏற்படுத்துவோர் மற்றும் வலைதளங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 10.07.2026