Sunday, August 27, 2017

'ரேஸ் கோர்ஸ்' பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நாள்26ஆக
2017
21:02


பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

சென்னை, அண்ணா சாலையில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதற்கு தீர்வாக, ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் ஒரு பகுதி பெறப்பட்டு பேருந்து நிலையமும், பேருந்து, ஷேர் ஆட்டோக்களுக்கு தனித்தனி வழித்தடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்து நிலைய சாலையை ஆக்கிரமித்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், காவல் துறையிரிடம் புகார் செய்தால் நடவடிக்கை இல்லை.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

தனியாரிடம் நிலம் பெற்று சாலை விரிவாக்கம் செய்தும், ஷேர் ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால் பயனில்லாமல் போனது. இங்கு, ஷேர் ஆட்டோக்களுக்காக தனி வழித்தடம் அமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி அடாவடி செய்கின்றனர். ஷேர் ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து பணம் பெறும் போக்குவரத்து போலீசார், புகார் அளித்தால் கண்டுகொள்வதில்லை.சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மூன்று நாட்களில், 2,500 இடங்கள் நிரம்பிஉள்ளன.

பதிவு செய்த நாள்27ஆக
2017
02:37

சென்னை:எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மூன்று நாட்களில், 2,500 இடங்கள் நிரம்பிஉள்ளன.தமிழகத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழக அரசின் மாநில ஒதுக்கீட்டில், 3,534 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரி களில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 இடங்கள் உள்ளன.அதேபோல, பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 1,198 இடங்கள் உள்ளன; சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன.
முதற்கட்டமாக, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை, சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மூன்று நாட்களில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, மாணவர்கள் பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியலில், 2,674 முதல், 4,269 இடங்களை பிடித்தோர் பங்கேற்கின்றனர்.
வங்கி ஏ.டி.எம்.,களில் 200 ரூபாய் கிடைக்குமா?
பதிவு செய்த நாள்27ஆக201702:36

தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்.,களில், 200 ரூபாய் நோட்டுகள், எப்போது கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வரலாற்றில் முதல் முறையாக, 200 ரூபாய் நோட்டுகளை, 17ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. அந்த நோட்டுகள், சென்னையில் உள்ள, ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வங்கிகளில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல், புழக்கத்திற்கு வரும்.
கிராமப்புறங்களில் உள்ள, வங்கிகளில் சென்று சேருவதற்கு, ஒரு வார காலமாகும். அதேபோல், புதிய, 50 ரூபாய் நோட்டும், நாளை முதல், வங்கிகளில் புழக்கத்திற்கு வரும். வழக்கமாக, புதிய நோட்டுகள் அறிமுகமாகும் போது, அது, நகரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.,களில், உடனடியாக கிடைக்கும்.

'புதிய, 200 ரூபாய் நோட்டு, வடிவத்தில் மாறுபடுவதால், அதற்கேற்ப, ஏ.டி.எம்.,களில், சிறிய மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -
மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு
பதிவு செய்த நாள்26ஆக201721:27

அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், அரசின் கவுன்சிலிங் வழியே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் கல்லுாரிகளுக்கு, வரும், 31ம் தேதி வரை அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ளன. இதில், மாணவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளி படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்கள், கல்லுாரி என்பதால், ஜாலியாக வகுப்பை, 'கட்' அடித்து, ஊர் சுற்றக்கூடாது என்றும், கல்லுாரிக்கு வராவிட்டால், பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அண்ணா பல்கலை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலையின், 17 உறுப்பு கல்லுாரிகளிலும், சென்னை அண்ணா பல்கலை வளாக கல்லுாரி களிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் வகுப்பு நேரத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.வகுப்பிற்குள் மாணவர்கள் நுழையும் போது, மொபைல் போனை அணைத்து வைக்க வேண்டும். வகுப்பில் அமர்ந்து, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், நேரத்தை வீணாக்க கூடாது.

வகுப்பில், மொபைல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பதை, ஆசிரியர்கள் குழு ஆய்வு நடத்தும். இதில், மாணவர்களின் மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், போன் பறிமுதல் செய்யப்படும்.பின், பெற்றோரை அழைத்து வந்து கடிதம் கொடுத்த பிறகே, மீண்டும் வழங்கப்படும் என, 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
செப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்26ஆக
2017
21:04

மதுரை:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்ரமணியன், மதுரையில் அளித்த பேட்டி:

மறைந்த ஜெயலலிதா அறிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய சம்பள விகிதம் வழங்க வேண்டும். அதற்கு முன், இடைக்கால நிவாரணம், 20 சதவீதம் வழங்க
வேண்டும்.இதை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, அரசு கவனம் செலுத்துகிறது.

செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும். மறியல்,காத்திருப்பு, சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்படும். மாநிலத்தில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இந்த போராட்டங்களில் ஈடுபடுவர். எனவே மக்கள் நலன் கருதி ஊழியர், ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் பேசி, பிரச்னைகளுக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நான்கு வழிச்சாலை பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான மரம் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது



திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான மருத மரம் அப்படியே பிடுங்கி எந்திரங்கள் மூலம் வேறு இடத்தில் நடப்பட்டது.

ஆகஸ்ட் 27, 2017, 03:45 AM

திருப்புவனம்,

திருப்புவனத்தில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான மருத மரம் உள்ளது. இதன் அருகே மதுரை–ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த மருத மரத்தின் அருகில் விவசாய நிலங்கள் உள்ளன. முன்பு திருப்புவனத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு டவுன் பஸ்களில் விவசாயிகள், அலுவலர்கள் மருத மர நிறுத்தத்தில் இறங்கி செல்வது வழக்கம். இதேபோல் பாதயாத்திரை செல்வோர் இந்த மருத மரத்தில் இளைப்பாறி செல்வார்கள். அந்த அளவிற்கு இந்த மரத்தின் கிளைகள் பறந்து விரிந்து காணப்படும். இதே மரத்தின் முன்புறம் மணிகள் கட்டி சாலையில் செல்வோர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது மதுரை–ராமேசுவரம் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மருத மரத்தின் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிக்கு இடையூராக மருத மரம் இருந்ததால் அந்த மரத்தை எந்திரங்கள் மூலம் தூருடன் பிடுங்கி 300 அடி தூரத்தில் நடப்பட்டது.

திருப்புவனம் தாசில்தார் கமலா, இன்ஸ்பெக்டர் திருவானந்தம், நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் முத்துடையார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மரம் மாற்றப்பட்டது. முன்னதாக மானாமதுரையில் பஸ் போக்குரத்து திருப்புவனத்தில் இருந்து சக்குடி வழியாக இயக்கப்பட்டது.
சாராஹா அப்ளிகேஷனும், அச்சுறுத்தலும்..! - உஷார் ரிப்போர்ட்


‘சாராஹா’ இல்லாத பேஸ்புக் பதிவு களையும், டிவிட்டுகளையும் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது முடியாது என்று கூறும் அளவிற்கு ‘டாப் டிரென்ட்டிங்கில்’ சென்று கொண்டிருக்கிறது சாராஹா.

ஆகஸ்ட் 26, 2017, 12:49 PM

‘சாராஹா’ இல்லாத பேஸ்புக் பதிவு களையும், டிவிட்டுகளையும் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது முடியாது என்று கூறும் அளவிற்கு ‘டாப் டிரென்ட்டிங்கில்’ சென்று கொண்டிருக்கிறது சாராஹா. ‘அது என்ன புது அப்ளிகேஷன்?’ என்ற தேடலோடு பிளே ஸ்டோரில் இருந்த சாராஹாவை பதிவிறக்கம் செய்து உபயோகித்தோம். வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற எளிமையான சமூக வலைத்தளங்களை போன்று இல்லாமல்... ‘சாராஹா’ ஆப் சற்று கடினமாகவே இருந்தது. நம்முடைய ஸ்மார்ட் போனில் சேமித்து வைத் திருக்கும் நபர்களை எல்லாம் சாராஹாவில் எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் நமக்கு அறிமுகமில்லாதவர்களையும், ஊர்-பெயர் தெரியாதவர் களையும் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

‘யாரிடம் பேசுகிறோம்’, ‘எதற்காக பேசு கிறோம்’ என்பதை எல்லாம் மறந்துவிட்டு, மனதில் தோன்றுவதையெல்லாம் பேசுபவர்களுக்காகவே அளவு எடுத்து செய்ததை போலவே இருக்கிறது சாராஹா அப்ளிகேஷன். சாராஹாவில் இணையும் ஆண்களுக்கு வசைபாட்டும், பெண்களுக்கு காதல் பாட்டும் காத்திருக்கிறது.

“நீ எல்லாம் எதற்கு இருக்கிறாய்..?”, “உன்னை யார் சாராஹாவில் இணைய சொன்னது” என ஆண் கணக்காளருக்கும், “பீச் போகலாமா..?”, “காதலிக்கலாமா..?” என பெண் கணக்காளருக்கும் குறுந்தகவல் சாராஹாவில் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும். நமக்கு யார் அனுப்புகிறார்கள், எங்கிருந்து அனுப்புகிறார்கள், எதற்காக அனுப்புகிறார்கள்... என்று எல்லாம் சாராஹாவில் பார்க்க முடியாது. நம்மை பற்றிய விமர்சனங் களுக்கு பதில் அளிக்கவும் முடியாது. வேண்டுமானால் நமக்கு வந்திருக்கும் சாராஹா பதிவுகளை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதனை சவுதி அரேபியாவை சேர்ந்த ஜெயினுலாப்தீன் தவ்பீக் உருவாக்கியுள்ளார். இது சம்பந்தமாக அவரிடம் எப்படியாவது பேசவேண்டும் என்ற முயற்சியில் பேஸ்புக் சாட்டில் இணைந்தோம். அப்போது தான் ஜெயினுலாப்தீன் பக்கம் இருந்த நியாயம் புரிந்தது. சாராஹாவின் அம்சங்களை தெளிவுபடுத்திய ஜெயினுலாப்தீன், நல்ல விஷயத்திற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் இன்று அச்சுறுத்தலாக மாறிவரும் நிலவரத்தையும் பகிர்ந்துகொண்டார். அதை அவர் சொல்ல கேட்போம்...

“என்னுடைய அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும். அதில் உயர் அதிகாரிகளை தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொண்டால், வேலை பறிபோய் விடுமோ? என்பது மற்ற ஊழியர்களின் கருத்தாக இருக்கும். இதற்காகவே சாராஹா என்ற இணைய தளத்தை உருவாக்கினேன். அதில் மேலாளர், குழு தலைவர்... என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தைக் கூறலாம்; ஆனால் யார் கூறுகிறார்கள் என்பதை அறிய முடியாது.

இணையதளமாக செயல்பட ஆரம்பித்ததில் இருந்தே பல குறைகள் வந்து குவிய ஆரம்பித்தன. கடைநிலை ஊழியர்கள் அலுவல் சார்ந்த குறைகளையும், உயர் அதிகாரிகள் பற்றிய மனக்குறைகளையும் தைரியமாக தெரிவித்தார்கள். அதை உடனுக்குடன் சரிசெய்து கொண்டோம்.

என்னுடைய அலுவலகத்திற்கு பயன்பட்ட அப்ளிகேஷன், உலக மக்களுக்கு பயன்படும் நோக்கில் ஆப்பாக வடிவமைத்து வெளியிட்டேன். சாராஹா அப்ளிகேஷனை அலுவலக ரீதியாகவும் பயன்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் இருக்கும் நண்பர்கள் குழுவிலும் பயன்படுத்தலாம். மேலும் தனிநபர் கணக்காகவும் பயன்படுத்தலாம். அலுவலக நிறை-குறைகள் மட்டுமின்றி, நண்பர்களின் நேர்மையான விமர்சனங்களை பெற முடியும். அதற்காகவே அப்ளிகேஷன்களை உருவாக்கினேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ மொட்டை கடிதத்தின் டிஜிட்டல் பிரதி தான் ‘சாராஹா’. நம்மை பற்றி யார் விமர்சிக் கிறார்கள், யார் புகழ்கிறார்கள்... என்பதை எல்லாம் சாராஹாவில் பார்க்க முடியாது. ஆனால் கருத்துகளை பதிவு செய்யலாம். கருத்து தெரிவிப்பவரின் தகவல்கள் எல்லாம் பத்திரமாக பாதுகாக்கப்படும்.

பெரும்பாலான மக்கள் சாராஹாவை நல்ல விதமாகவே பயன்படுத்துகிறார்கள். அதையே எல்லா மனிதர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. சிலர் நேரடியாக திட்டுகிறார்கள். ஆபாசமான முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆபாசமான வார்த்தைகளால் பின்னப்பட்ட முள் முடியை என் தலையிலும் அணிவித்தார்கள். உறவுக்கார பெண்களுக்கும், தோழிகளுக்கும் ஏராளமான காதல் மொட்டை கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அப்ளிகேஷனை அழித்துவிடும் முயற்சியிலும் இறங்கினேன். ஆனால் அதற்கு பதிலாக ஒருசில கட்டுப்பாடுகளையும், கருத்து தெரிவிப்பவர்களுக்கு சுடச்சுட பதில் அளிக்கும் ‘ரிப்-பிளே’ வசதியையும் சாராஹாவில் கொண்டு வர திட்டமிட்டிருக் கிறேன். ஒருசில நாட்களில் அந்த பணிகள் முடிந்துவிடும். அதனால் சாராஹாவை தைரியமாக பயன்படுத்தலாம்” என்பவரிடம் சாராஹாவில் இருக்கும் போலி கணக்குகள் பற்றி கேட்டோம். ஜெயினுலாப்தீனின் பதில் நம்மை சிந்திக்க வைத்தது.

“பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-ஆப் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் போலி கணக்குகள் இருக்கிறது. பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் சில ஆண்கள், போலியான காதல் நாடகங்களை அரங்கேற்றுகிறார் கள். அதை உண்மை என நம்பும் சில ஏமாளி ஆண்களும், மனமுருகி பேசுகிறார்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆன்லைன் பேங்கிங் மூலமாக பணத்தை பறிகொடுப்பது, ஆயிரக்கணக்கில் ரீ-சார்ஜ் செய்வது என பல வழிகளில் ஏமாறுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதை இணையதளவாசிகள் தான் சரி செய்து கொள்ளவேண்டும்” என்ற எச்சரிக்கையுடன் விடைபெற்றார்.

அரபு மொழியில் ‘சாராஹா’ என்பது நேர்மையை குறிக்கும். அதனால் தான் ஜெயினுலாப்தீன் தன்னுடைய இணையதளத்திற்கும், அப்ளிகேஷனுக்கும் ‘சாராஹா’ என்று பெயரிட்டுள்ளார். மக்களின் நேர்மையை வெளிக்காட்ட உருவாக்கப்பட்ட ‘சாராஹா’ அப்ளிகேஷன் இன்று தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஜெயினுலாப்தீனை குறை சொல்வதை விட... அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்துபவர்களைதான் குறைசொல்ல வேண்டும். பிளே ஸ்டோரில் இருக்கும் அத்தனை அப்ளிகேஷன்களும் நம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்கு தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் நாம் பயன்படுத்தினால் போதும்.

எந்த ஒரு புதிய முயற்சி வந்தாலும் அதில் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். சமூக ஊடகத்தில் உள்ள அனைத்து ‘ஆப்’களுமே இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் இத்தகைய புதிய வரவுகளை சரிவர கையாள மக்கள் புரிந்துகொண்டால், சவால்களை சுலபமாகக் கடந்து அதன் நன்மைகளை பெறமுடியும் என்பதே உண்மை.

இனி ‘சாராஹா’ போன்ற அப்ளிகேஷன்கள் நல்லவையாக இருப்பதும், அச்சுறுத்தலாக மாறுவதும் இணைய வாசிகளின் கைகளில் தான் இருக்கிறது.

NEWS TODAY 10.07.2026