Sunday, August 27, 2017

சாராஹா அப்ளிகேஷனும், அச்சுறுத்தலும்..! - உஷார் ரிப்போர்ட்


‘சாராஹா’ இல்லாத பேஸ்புக் பதிவு களையும், டிவிட்டுகளையும் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது முடியாது என்று கூறும் அளவிற்கு ‘டாப் டிரென்ட்டிங்கில்’ சென்று கொண்டிருக்கிறது சாராஹா.

ஆகஸ்ட் 26, 2017, 12:49 PM

‘சாராஹா’ இல்லாத பேஸ்புக் பதிவு களையும், டிவிட்டுகளையும் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது முடியாது என்று கூறும் அளவிற்கு ‘டாப் டிரென்ட்டிங்கில்’ சென்று கொண்டிருக்கிறது சாராஹா. ‘அது என்ன புது அப்ளிகேஷன்?’ என்ற தேடலோடு பிளே ஸ்டோரில் இருந்த சாராஹாவை பதிவிறக்கம் செய்து உபயோகித்தோம். வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற எளிமையான சமூக வலைத்தளங்களை போன்று இல்லாமல்... ‘சாராஹா’ ஆப் சற்று கடினமாகவே இருந்தது. நம்முடைய ஸ்மார்ட் போனில் சேமித்து வைத் திருக்கும் நபர்களை எல்லாம் சாராஹாவில் எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் நமக்கு அறிமுகமில்லாதவர்களையும், ஊர்-பெயர் தெரியாதவர் களையும் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

‘யாரிடம் பேசுகிறோம்’, ‘எதற்காக பேசு கிறோம்’ என்பதை எல்லாம் மறந்துவிட்டு, மனதில் தோன்றுவதையெல்லாம் பேசுபவர்களுக்காகவே அளவு எடுத்து செய்ததை போலவே இருக்கிறது சாராஹா அப்ளிகேஷன். சாராஹாவில் இணையும் ஆண்களுக்கு வசைபாட்டும், பெண்களுக்கு காதல் பாட்டும் காத்திருக்கிறது.

“நீ எல்லாம் எதற்கு இருக்கிறாய்..?”, “உன்னை யார் சாராஹாவில் இணைய சொன்னது” என ஆண் கணக்காளருக்கும், “பீச் போகலாமா..?”, “காதலிக்கலாமா..?” என பெண் கணக்காளருக்கும் குறுந்தகவல் சாராஹாவில் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும். நமக்கு யார் அனுப்புகிறார்கள், எங்கிருந்து அனுப்புகிறார்கள், எதற்காக அனுப்புகிறார்கள்... என்று எல்லாம் சாராஹாவில் பார்க்க முடியாது. நம்மை பற்றிய விமர்சனங் களுக்கு பதில் அளிக்கவும் முடியாது. வேண்டுமானால் நமக்கு வந்திருக்கும் சாராஹா பதிவுகளை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதனை சவுதி அரேபியாவை சேர்ந்த ஜெயினுலாப்தீன் தவ்பீக் உருவாக்கியுள்ளார். இது சம்பந்தமாக அவரிடம் எப்படியாவது பேசவேண்டும் என்ற முயற்சியில் பேஸ்புக் சாட்டில் இணைந்தோம். அப்போது தான் ஜெயினுலாப்தீன் பக்கம் இருந்த நியாயம் புரிந்தது. சாராஹாவின் அம்சங்களை தெளிவுபடுத்திய ஜெயினுலாப்தீன், நல்ல விஷயத்திற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் இன்று அச்சுறுத்தலாக மாறிவரும் நிலவரத்தையும் பகிர்ந்துகொண்டார். அதை அவர் சொல்ல கேட்போம்...

“என்னுடைய அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும். அதில் உயர் அதிகாரிகளை தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொண்டால், வேலை பறிபோய் விடுமோ? என்பது மற்ற ஊழியர்களின் கருத்தாக இருக்கும். இதற்காகவே சாராஹா என்ற இணைய தளத்தை உருவாக்கினேன். அதில் மேலாளர், குழு தலைவர்... என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தைக் கூறலாம்; ஆனால் யார் கூறுகிறார்கள் என்பதை அறிய முடியாது.

இணையதளமாக செயல்பட ஆரம்பித்ததில் இருந்தே பல குறைகள் வந்து குவிய ஆரம்பித்தன. கடைநிலை ஊழியர்கள் அலுவல் சார்ந்த குறைகளையும், உயர் அதிகாரிகள் பற்றிய மனக்குறைகளையும் தைரியமாக தெரிவித்தார்கள். அதை உடனுக்குடன் சரிசெய்து கொண்டோம்.

என்னுடைய அலுவலகத்திற்கு பயன்பட்ட அப்ளிகேஷன், உலக மக்களுக்கு பயன்படும் நோக்கில் ஆப்பாக வடிவமைத்து வெளியிட்டேன். சாராஹா அப்ளிகேஷனை அலுவலக ரீதியாகவும் பயன்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் இருக்கும் நண்பர்கள் குழுவிலும் பயன்படுத்தலாம். மேலும் தனிநபர் கணக்காகவும் பயன்படுத்தலாம். அலுவலக நிறை-குறைகள் மட்டுமின்றி, நண்பர்களின் நேர்மையான விமர்சனங்களை பெற முடியும். அதற்காகவே அப்ளிகேஷன்களை உருவாக்கினேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ மொட்டை கடிதத்தின் டிஜிட்டல் பிரதி தான் ‘சாராஹா’. நம்மை பற்றி யார் விமர்சிக் கிறார்கள், யார் புகழ்கிறார்கள்... என்பதை எல்லாம் சாராஹாவில் பார்க்க முடியாது. ஆனால் கருத்துகளை பதிவு செய்யலாம். கருத்து தெரிவிப்பவரின் தகவல்கள் எல்லாம் பத்திரமாக பாதுகாக்கப்படும்.

பெரும்பாலான மக்கள் சாராஹாவை நல்ல விதமாகவே பயன்படுத்துகிறார்கள். அதையே எல்லா மனிதர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. சிலர் நேரடியாக திட்டுகிறார்கள். ஆபாசமான முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆபாசமான வார்த்தைகளால் பின்னப்பட்ட முள் முடியை என் தலையிலும் அணிவித்தார்கள். உறவுக்கார பெண்களுக்கும், தோழிகளுக்கும் ஏராளமான காதல் மொட்டை கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அப்ளிகேஷனை அழித்துவிடும் முயற்சியிலும் இறங்கினேன். ஆனால் அதற்கு பதிலாக ஒருசில கட்டுப்பாடுகளையும், கருத்து தெரிவிப்பவர்களுக்கு சுடச்சுட பதில் அளிக்கும் ‘ரிப்-பிளே’ வசதியையும் சாராஹாவில் கொண்டு வர திட்டமிட்டிருக் கிறேன். ஒருசில நாட்களில் அந்த பணிகள் முடிந்துவிடும். அதனால் சாராஹாவை தைரியமாக பயன்படுத்தலாம்” என்பவரிடம் சாராஹாவில் இருக்கும் போலி கணக்குகள் பற்றி கேட்டோம். ஜெயினுலாப்தீனின் பதில் நம்மை சிந்திக்க வைத்தது.

“பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-ஆப் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் போலி கணக்குகள் இருக்கிறது. பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் சில ஆண்கள், போலியான காதல் நாடகங்களை அரங்கேற்றுகிறார் கள். அதை உண்மை என நம்பும் சில ஏமாளி ஆண்களும், மனமுருகி பேசுகிறார்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆன்லைன் பேங்கிங் மூலமாக பணத்தை பறிகொடுப்பது, ஆயிரக்கணக்கில் ரீ-சார்ஜ் செய்வது என பல வழிகளில் ஏமாறுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதை இணையதளவாசிகள் தான் சரி செய்து கொள்ளவேண்டும்” என்ற எச்சரிக்கையுடன் விடைபெற்றார்.

அரபு மொழியில் ‘சாராஹா’ என்பது நேர்மையை குறிக்கும். அதனால் தான் ஜெயினுலாப்தீன் தன்னுடைய இணையதளத்திற்கும், அப்ளிகேஷனுக்கும் ‘சாராஹா’ என்று பெயரிட்டுள்ளார். மக்களின் நேர்மையை வெளிக்காட்ட உருவாக்கப்பட்ட ‘சாராஹா’ அப்ளிகேஷன் இன்று தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஜெயினுலாப்தீனை குறை சொல்வதை விட... அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்துபவர்களைதான் குறைசொல்ல வேண்டும். பிளே ஸ்டோரில் இருக்கும் அத்தனை அப்ளிகேஷன்களும் நம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்கு தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் நாம் பயன்படுத்தினால் போதும்.

எந்த ஒரு புதிய முயற்சி வந்தாலும் அதில் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். சமூக ஊடகத்தில் உள்ள அனைத்து ‘ஆப்’களுமே இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் இத்தகைய புதிய வரவுகளை சரிவர கையாள மக்கள் புரிந்துகொண்டால், சவால்களை சுலபமாகக் கடந்து அதன் நன்மைகளை பெறமுடியும் என்பதே உண்மை.

இனி ‘சாராஹா’ போன்ற அப்ளிகேஷன்கள் நல்லவையாக இருப்பதும், அச்சுறுத்தலாக மாறுவதும் இணைய வாசிகளின் கைகளில் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...