Saturday, September 9, 2017

குடிபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்ததை பொறுக்க முடியாமல் பெற்ற மகனை கொன்று சிறைக்கு சென்ற தாய்: யார் மீது தவறு... தாய் மீதா? தமிழக அரசு மீதா?

the hindu tamil

Published : 08 Sep 2017 08:01 IST

டி.எல்.சஞ்சீவிகுமார்



செந்தில் (பழைய படம்)


காமாட்சி


சரஸ்வதி

தாயிற் சிறந்த கோயில் இல்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரில் முதலில் நிற்கிறாள் தாய். தன்னிகரற்ற தாய்ப் பாசம் மனிதனுக்கு மட்டுமின்றி மொத்த உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அத்தகைய தாயே தனது மொத்த குடும்பத்தையும் மதுபோதையில் சித்ரவதை செய்த மகனின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக சாகடித்திருக்கிறார்.

சென்னை திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் செந்தில், மருமகள் காமாட்சி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். மூவரும் அருகே உள்ள கோலடி அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். மது போதைக்கு அடிமையான செந்தில் கடந்த 16 ஆண்டுகளாக மொத்தக் குடும்பத்தினரையும் சித்ரவதை செய்துவந்தார். மனைவிக்கு அரிவாள் வெட்டு, தாய்க்கு உருட்டுக் கட்டை தாக்குதல், குழந்தைகளைத் தூக்கிப் போட்டு பந்தாடுவது என தினம் தினம் செந்திலால் அந்தக் குடும்பம் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஆவேசமும்.. பாசமும்..

மகனால் தனது மருமகளும், குழந்தைகளும் படும் சித்ரவதைகளைச் சகிக்கமுடியாத சரஸ்வதி, 2 நாட்களுக்கு முன்பு, போதையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். இறந்துபோன மகனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதவர், பின்னர் திருவேற்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போதையின் பிடியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் மொத்த நிலையையும் தனது ஒற்றைச் செயலால் உணர வைத்திருக்கிறார் அந்தத் தாய். ‘மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம்’ என்று சொல்லிக்கொண்டே, சில நாட்களுக்கு முன்பு சத்தமின்றி 1,000 மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசு மீது மகனின் ரத்தக்கறையைப் பூசிவிட்டு சென்றிருக்கிறார் அந்தத் தாய். இப்போது அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது.

இங்கே குற்றவாளி யார்? கொலை செய்த தாயா? மதுபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்த மகனா? இல்லை, வீதிதோறும் மதுக்கடைகளை திறந்துவைத்திருக்கும் தமிழக அரசா?

பல ஆண்டுகளாக சித்ரவதை செய்த கணவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த மாமியார் சிறைக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செய்வதறியாது பரிதவிக்கும் காமாட்சியை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம். கணவனை இழந்த அவர், தொடர்ந்து நடக்கவுள்ள சடங்குகளுக்காக கைநிறைய கண்ணாடி வளையல்களும், கண்களில் முட்டி நிற்கும் கண்ணீருமாக நின்றிருந்தார்.

16 ஆண்டுகளாக சித்ரவதை

“சொந்த ஊரு அனகாபுத்தூரு அண்ணே, நானும் செந்திலும் சின்ன வயசுலயே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 16 வருஷமாச்சு. இத்தனை வருஷத்துல நானும், மாமியாரும், குழந்தைகளும் பட்ட சித்ரவதை கொஞ்ச நஞ்சமில்லை. கல்யாணமான புதுசுல ராத்திரி மட்டும் குடிச்சிட்டு இருந்தாரு. அப்புறம் பகல்லயும் குடிக்க ஆரம்பிச்சிடுச்சு.

நாலைஞ்சு வருஷமா அதுக்கு காலையில எழுந்திருச்ச உடனேயே ஆஃப் பாட்டில் பிராந்தி வேணும். நைட்டே குழந்தைங்க போயி வாங்கிட்டு வந்து வெச்சிடணும். இல்லைன்னா விடியற்காலை குழந்தைகளை அடி பின்னிடுவாரு. அப்புறம் நாள்பூரா அழிச்சாட்டியம்தான். பக்கத்துல செக்யூரிட்டி வேலை வாங்கிக் கொடுத்தேன். வேலைக்கு சரியா போறதில்ல.

நான் அண்ணா நகர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல வேலை பாக்குறேன். பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல மாமியார் பாத்திரம் கழுவுறாங்க. எங்க சொற்ப வருமானத்தை வெச்சுத்தான் மூணு குழந்தைகளையும் காப்பாத்துறேன். இதுல தினமும் புருஷனுக்கு குடிக்கவும் பணம் தரணும். சரி குடிச்சுத் தொலையட்டும், பிறகாவது அமைதியா இருக்கலாம்ல.. அதுவும் கிடையாது. கோவம் வந்திச்சின்னா, அரிவாளை எடுத்து என்னை வெட்டிடுவாரு. உடம்பெல்லாம் அரிவாள் வெட்டு. அவங்க அம்மாவை உருட்டுக் கட்டையால பலமுறை மண்டையை உடைச்சிருக்காரு. பசங்களை தெருவுல ஓட விட்டு அடிப்பாரு. போலீஸ் ஸ்டேஷன்ல பலமுறை புகார் கொடுத்தோம். மகளிர் போலீஸம்மா, ‘கண்ணு நீ ஸ்ட்ராங்கா ஒரு கேஸ் கொடு, பத்து வருஷம் உட்கார வெச்சிடுறேன்’னாங்க. மனசு கேட்கலை.

அடியாச்சும் வாங்கிக்கலாம். ஆனா, அது கேட்குற வார்த்தை ஒவ்வொண்ணும் செத்துடலாம்போல இருக்கும். தெனமும் வேலைக்குப் போயிட்டு நானும் அத்தையும் வருவோம். ரெண்டு பேரையும் வாய்கூசாம அசிங்க அசிங்கமா பேசுவாரு. மூணு நாளு முன்னாடி இவர் பண்ண அழிச்சாட்டியம் தாங்க முடியாம அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். திங்கள்கிழமை காலையில போன் வருது.. வந்து பார்த்தா, முகமெல்லாம் ரத்தக்கறையோட அத்தை உட்கார்ந்திருந்தாங்க.

“தங்கம், உனக்கு தாலி எடுத்துக் கொடுத்த கையாலேயே உன் தாலியைப் பறிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடும்மா. அவன் இருந்தா உங்களை உசுரோட விடமாட்டான்”னு என் காலில் விழுந்து கதறினாங்க. கையில் இருந்த ஏழாயிரம் ரூவாயையும், கம்மலையும் கழட்டிக் கொடுத்துட்டு, ‘எப்படியாச்சும் பொழைச்சுக்கோ’ன்னு சொல்லிட்டு, அழுதுகிட்டே போலீஸ்கூட போயிட்டாங்க. எனக்கு அம்மா இல்லை. விவரம் தெரியாத வயசுலேயே இறந்துட்டாங்க. அத்தைதான் அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க. அவங்களும் ஜெயிலுக்கு போயிட்டாங்க. இனி எனக்கு யாரு இருக்கா...?” கதறி அழுகிறார் காமாட்சி.

இதில் தவறு யார் மீது? மகனைக் கொன்ற தாய் மீதா? குடிநோயாளி மீதா? தெளியாத மதுக் கொள்கையுடன் செயல்படும் தமிழக அரசு மீதா?
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு: அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கலாம்; சட்டம் ஒழுங்கை பாதித்தால் போலீஸ் நடவடிக்கை

2017-09-09@ 00:05:08




புதுடெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. அதே நேரம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் அரியலூர் மாணவி அனிதாவுக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்தில் அமைதி குலைந்துள்ளது.

இந்நிலையில், அனிதா தற்கொலைக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 3 தினங்களுக்கு முன் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வல்ல. நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவான தேர்வு. அதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் செய்யப்பட்ட வாதத்தில், ‘‘போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதித்துள்ளது. மாணவியின் தற்கொலையை மூடி மறைக்க ஆளும் கட்சியினர் பள்ளிக் குழந்தைகள் உட்பட பலரை மறைமுகமாக போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். அதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. அதனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்துவது சட்ட விரோதமாகும். அதனால், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் மற்றும் மாணவர்கள் யாராக இருந்தாலும் நீட் தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. இந்த விவகாரத்தில் எந்த வடிவிலான போராட்டங்களாக இருந்தாலும் அதற்கு தடை விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழங்கு பாதிக்கப்படுவதை தலைமை செயலாளரும், உள்துறை செயலாளரும் தடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சட்டம் ஓழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை அல்லது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் பந்த் அல்லது இதர நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே நேரம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது, விமர்சனங்கள் செய்வது அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது ஆகியவை, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் இருந்து மாறுப்பட்டவை என்பதை மிகவும் தெளிவாக தெளிவுப்படுத்துகிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அடிப்படை உரிமையுண்டு. ஆனால், அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவோ அல்லது வன்முறையில் முடியவோ கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

காலையில் தடை: மாலையில் மாற்றம்

நீட் தேர்வுக்கு எதிரான எல்லா போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக நேற்று காலை விசாரணையின்போது நீதிபதிகள் முதலில் தெரிவித்தனர். பின்னர் வெளியிட்ட இறுதி உத்தரவில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான போராட்டங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது அடிப்படை உரிமை’ என்று நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உயிரை வளர்க்கும் உயிர்க்காற்று


By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 09th September 2017 01:16 AM  | 
narayanan
Ads by Kiosked
உடம்பு வாழ உயிர் வேண்டும், உயிர் வாழ உணவு வேண்டும், உணவு வாழ உயிர்க்காற்று வேண்டும், உயிர்க்காற்று வாழ நீர் வேண்டும், நீர் வாழ நீரில் உயிரிகள் வாழ வேண்டும். இவ்வாறு நாம் பகுத்தாய்ந்து உண்மைகளைக் கண்டெடுக்க வேண்டும். முடிவில் நம் முன்னோர் கண்டெடுத்த பஞ்சபூதத் தத்துவத்தில் உண்மையின் பிறப்பைக் கண்டறியலாம். 
நீர், காற்று, தீ, வான், மண் என்ற ஐந்து சக்திகளில் உலகம் அடங்கியுள்ள உண்மையை ரிக் வேதம் கூறுகிறது. உணவு வாழ நீரும், உயிர்க்காற்றும் பற்றாது. விவசாயம் செய்ய வேண்டும். விதை வேண்டும். விதை ஊன்ற மண் வேண்டுமே! 
மண்ணில் ஊன்றிய விதை முளைத்து மரமாகிக் குடை விரிக்க வெளி வேண்டும். வெட்டவெளி என்பது ஆகாயம். உண்மையில் சூரியன் உட்பட அனைத்து கிரகங்களையும், கிரகச் சுழற்சிகளுக்கும் இடம் தரும் வெளிக்கும் எல்லையில்லாத வானத்திற்கும் நிறம் இல்லை. நீல நிறம் என்பதுகூட மாயத்தோற்றமே. 
அடுத்த கிரகம் பற்றி அறிவதைவிட இந்த பூமியையும் கடலையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோமா? படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றிய கதையை டார்வின் விளக்கினார். விதை வளர்ந்து மரமான கதை என்ன?
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளிலிருந்து உருவத்தில் பெரிதாயுள்ள யானை வரை வாழக்கூடிய இயற்கை அற்புதங்கள் பல, நம் அறிவுக்கு எட்டாமலேயே உள்ளன. எட்டியமட்டில், இந்த உலகம் எவ்வளவு தூரம் இயங்கும்? அழியும் காலம் நெருங்கிவிட்டதா? அணுகுண்டு போட்டு அழியப் போகிறதா? இயல்பு மீறிய வகையில் இயற்கைக்கு சேதம் விளைவித்து அழியப் போகிறதா? 'கடல் உள்ள வரை உலகு இயங்கும்' என்று எண்ணத் தோன்றுகிறது. 
ஏனெனில் எது இல்லாவிட்டாலும் 'ஆக்சிஜன்' உள்ளவரை உயிரியக்கம் இருக்கும். ஆக்சிஜன் தொழிற்சாலைகளையுள்ள கடலும், மரங்களும் எப்படி உலகை இயக்குகின்றன? ஆக்சிஜன் எப்படி உருவாகிறது? தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதுபோல் ஆக்சிஜ பகவானாயிருப்பவர் மகாவிஷ்ணுவே. 
ஆக்சிஜ பகவானின் அற்புதச் செயலை அறிவியலில் விளக்க முடியாமல், திருப்பாற்கடல் கடைந்தெடுக்கப்பட்டு கற்பக விருட்சமும், காமதேனுவும் வெளிப்பட்டதைப் புராணமாகக் கற்பித்தனரோ! திருப்பாற் கடலில் ஆதிசேஷன் என்ற பாம்புப் படுக்கையில் மகாவிஷ்ணு அனந்தசயனனாகப் பள்ளிகொண்டுள்ளார். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? என்று கேட்டால், 'இந்த உலகத்தைக் காப்பாற்றவே' என்று பதில் வரும். இது விஞ்ஞான உண்மை. 
நாமெல்லாம் பூமிக்கு வேண்டிய ஆக்சிஜனை மரங்கள் தருவதாக நினைக்கிறோம். மரங்கள் 30 சதவீதம் மட்டுமே தருகிறது. காடுகள் அழிக்கப்பட்டதால் 20 சதவீதம். மீதி நச்சுக்காற்றே. ஆனால், கடல் வழங்குவது 70 சதவீத உயிர்க்காற்று.
உலகில் நமது உயிர் இயக்கமே உயிர்க்காற்று சூழற்சியினால்தான். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்க்காற்றை உள்ளே வழங்கி வெளிவந்த கார்பன் காற்று மீண்டும் மரங்களால் சுத்தமாகிய உயிர்க்காற்று மனிதர்களாலும், விலங்குகளாலும் மாசாகிக் கடலுக்குள் வாழும் ஜீவராசிகளுக்கு உயிர்தந்து, கடல் நீர் உதவியால் உயிர்க்காற்றாகிக் கடலையும் பூமியையும் காப்பாற்றுகிறது. 
கடலில் எப்படி உயிர்க்காற்று உருவாகிறது? கடலில் உள்ள தாவரங்களுக்கும் மீன்களுக்கும் உணவாயுள்ள பாசிகளில் கண்ணுக்குப் புலப்படாத பிளாங்க்டன் (PLA NKTON) கார்பனை உட்கொண்டு உயிர்க்காற்றை உற்பத்தி செய்கிறது. 
பிளாங்க்டன் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க் கூட்டம். கடல் பாசிகளிலும், வேறு பல்லாயிரக்கணக்கான கடல்தாவரங்களிலும் பின்னிப் படர்ந்துள்ள இந்த நுண்ணுயிரிக் கூட்டம் கடல் தாவரங்களுக்கு வேண்டிய உயிர்க்காற்றை நீரிலிருந்து பிரித்து வழங்குகிறது. 
நாம் மண்ணைப் படித்திருக்கிறோம், மரங்களைப் படித்திருக்கிறோம், பயிர்களைப் படித்திருக்கிறோம், ஆனால் கடலைப் படிக்கவில்லை! பூவுலகில் இருப்பதுபோல் பாதாள உலகிலும் பல அற்புதங்கள் உள்ளன. பூமியின் கீழ்மட்டம் ஆழி. ஆகவே, 'ஆழி சூழ் உலகு' என்று கூறுகிறோம். மழை பெய்கிறது. வெள்ளம் ஏற்படுகிறது. கரை புரண்டோடும் வெள்ளம் கடலில் சேர்கிறது. 
அவ்வாறே புவிமீது வளர்ந்த மரங்கள், மண்ணுக்கு அடியில் உள்ள உலோகங்களிலிருந்து சத்தைப் பெற்று விண்ணில் உயர்ந்து பச்சைக்குடைகளை விரித்தவண்ணம் உள்ளன. இந்தப் பச்சை நிறம் எப்படி வந்தது? இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறார்கள். 
ஆங்கிலத்தில் Photo Synthesis  என்ற சொல்லுக்கு ஏற்ப இணையான தமிழ்ச்சொல் இல்லை. ஒளிச்சேர்க்கையில் என்ன சேர்கிறது? மரம் தனக்குத் தேவையான உணவைத் தயார் செய்துகொள்ள உயிரிகளும் ரசாயனங்களும் சேர்கின்றன. மண்ணிலிருந்து மரங்களின் வேர் வழியே செல்லும் கார்பன், ஒளியின் உதவியால் மரம் உணவைப் பெற்றுக்கொண்டு மூன்று பங்கு உயிர்க்காற்றை வெளியேற்றுகிறது. 
அதாவது தண்ணீர் எச்2ஓ உடன் உட்கொள்ளப்பட்ட கார்பன் சிஓ2-வும் சேர்ந்து ஓ3. அதாவது ஒளிச்சேர்க்கை மூலம் (ஓ2-வில் உள்ள 2 பங்கு ஆக்சிஜனும், எச்2ஓ-வில் உள்ள ஒரு பங்கு ஆக்சிஜனும் வெளியேறுவதால் நம்மால் உயிர்வாழ முடிகிறது! 
இதே நிகழ்ச்சி கடலிலும் நிகழ்கிறது. மரங்கள் வழங்கும் உயிர்க்காற்றைவிட கடல் வழங்கும் உயிர்க்காற்று இரண்டு மடங்கு அதிகம்.
மண்ணில் நாம் காணும் இயற்கையின் அற்புதங்கள் கடலிலும் நிகழ்கின்றன. ஆழ்கடலில் காணக்கூடிய அற்புதங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கடலுக்குள் பவழப்பாறைகள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் போல் உயர்ந்தும் நீண்டும் குகைகளை உருவாக்கியும் உறைந்துள்ளன. 
பூமியின் அடியில் உள்ள உலோகச் சத்துக்களை மரம் ஏற்பதுபோல கடல் அடியில் உள்ள பாறைகளில் உள்ள உலோகச்சத்தைக் கரைத்து உணவாக மாற்றிக்கொள்ளும் கடல்தாவர இனங்களால்தான் மீன்களின் வாழ்வு மட்டும் அல்ல, மனிதனுக்கும் உயிர்வாழ்வு கிட்டுகிறது. யானையைவிடப் பெரிய பெரிய திமிங்கலங்கள் வாழ்கின்றன. சிங்கம், புலி போன்ற கொடிய சுறாமீன்களும் உண்டு.
உயிர்க்காற்று இல்லாமல் கடலில் அவை வாழ்வது எப்படி? கடல்வாழ்ப் பிராணிகளுக்கெல்லாம் வாழ்வு தருவதே கடல் தாவரங்கள்தாம். இக்கடல்வாழ் தாவரங்களில் உள்ள பிளாங்க்டன் நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கைக்குக் காரணமாயுள்ளன. 
கடல் தாவரங்கள் பல வகைப்படும். அவை இலை வடிவில் அடர்ந்து படர்ந்து கடலில் வியாபித்துள்ளன. விஷப்பாசிகளும் உண்டு. நல்ல பாசிகளும் உண்டு. அட்லாண்டிக் சமுத்திரத்தில் மனிதன் உண்ணத்தக்க கடல்பாசி - தாவரங்களை விசைப்படகுகள் மூலம் சென்று கடலில் குதித்து அறுவடை செய்து திரும்பும் ஸ்காண்டிநேவிய மக்களைப் பற்றிய தகவல்கள் உண்டு.
ஆண்டுகள் செல்லச் செல்ல பூமியில் விளைவிக்கப்படும் உணவுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இப்போதே கடலில் மீன்பிடித்துக் கரை சேர்த்து அப்படியே விற்பனைக்கு வருகின்றன. மிகுந்தவை உப்புக்
கருவாடு. 
பலவகை கடல் பாசிகளும் உணவுச் சங்கிலியில் இடம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள (ரூபாய் சுமார் 2.5 லட்சம் கோடி) கடல் வாணிபப் பொருள்கள் உலகப் பொருளாதாரத்தில் பங்கு பெற்றுள்ளன. இவ்வளவு நிகழ்ந்தும் இன்னமும் ஆழ்கடல் மர்மம் புரியாத புதிராயுள்ளது. 
கடலில் இயங்கும் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியே தொடக்க நிலையில் உள்ளபோது, மக்கள் கடலை மாசுகளின் சங்கமமாக மாற்றிவிட்டனர்.
உணவுச் சங்கிலி என்று சாதாரணமாகப் பலரும் பேசுகிறோம். மண்ணில் விளைந்த பொருள், உங்கள் உணவு மேஜைக்கு ஒரு சாப்பாடாக வரும் வரையில் உள்ள பின்னலமைப்பு இது. ஒரு பக்கம் ஜங்க் ஃபுட், மறுபக்கம் விளைபொருள்களில் எஞ்சியுள்ள நச்சு. 
கத்தரிக்காய் விஷம், தக்காளி விஷம், ஆப்பிள் விஷம், திராட்சை விஷம், பீட்ரூட் படுவிஷம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வயிற்றுக்குள் தள்ளி உயிர் வாழ்கிறோம். இயற்கையாகக் கடலில் விளையும் இவை நஞ்சில்லாதது என்று கடல்பாசி விற்பவரும், மீன் விற்பவரும் சொல்லலாம். அது உண்மையா? கடலில் எவ்வளவு மாசுகளைக் கொட்டுகிறோம்? அவை பற்றிய கணக்கைக் கேட்டால் மீனையும் கடல்பாசிகளையும் கையில் தொடமாட்டோம். 
நாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக், மின்சாதனங்கள், துணிகள், பல்வேறு சாயம், கச்சா எண்ணெய்.... எல்லாம் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாகச் சிதைத்து, ஏறத்தாழ 51 டிரில்லியன் (ரூபாய் சுமார் 51 லட்சம் கோடி) துகள்கள் பிளாங்க்டனுடன் கலந்து மீன்களையும், கடல் தாவரங்களையும் நச்சாக்குகின்றனவாம். 
MILKYWAY என்று சொல்லப்படும் பால்வளி மண்டலத்தில் காணப்படும் நட்சத்திரங்களைப்போல் ஐந்து மடங்கு பிளாஸ்டிக் துகள்கள் கடலில் மின்னுகின்றனவாம். அப்படியானால் மண்ணைவிட கடல் இன்னமும் அதிக மாசாகி வருகிறது. 
கடலையும் மண்ணையும் காப்பாற்ற மனிதனால் ஆவது ஒன்றுமில்லை. நாம் உயிர்வாழ, உயிர்க்காற்றுப் பெற, உணவு பெற, ஊன் பெற, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளே துணை.

தற்கொலை தவிர்ப்போம்

By ஆர். வேல்முருகன்  |   Published on : 09th September 2017 01:13 AM  |
DINAMANI
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர், முதுநிலை மருத்துவம் படிக்கும்போது பேராசிரியர் திட்டியதால் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார். 
கேரளத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவி கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டார். பிளஸ் 2 தேர்வுகளின் போது எதிர்பார்த்ததை விடக் குறைந்த மதிப்பெண் பெறும்போது பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மாணவரும் பெற்றோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்புவதற்குப் பழகவும் பழக்கவும் வேண்டும். விரும்பியபடி வாழ்க்கை என்பது இந்த உலகில் சிலருக்கு வேண்டுமானால் அமைந்திருக்கலாம். 
மீதியுள்ளவர்கள் அனைவருமே கிடைத்த வாழ்க்கைக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்தான். இந்தப் படிப்பு இல்லாவிட்டால் மற்றொன்று. இந்த உலகில் வாழ்வதற்கும் படிப்பதற்கும் ஆயிரம் மாற்று வழிகள் இருக்கின்றன. 
இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. அதற்கெல்லாம் தற்கொலைதான் தீர்வென்றால் இங்கு வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். 
அந்தத் திறமையை வைத்து ஒவ்வொருவரும் முன்னேற வேண்டுமே தவிர எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணமே வரக்கூடாது. இதற்குச் சிறு வயதில் இருந்தே மன நல நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும். 
தற்கொலை கூடாது என்ற அளவில் பாடத்திட்டங்களுடன் வாழ்வியல் நடைமுறையையும் கற்றுத் தர வேண்டும்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்றாலும் அவர் மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை. அவர் இறந்த சோகம் பிறரை விட அந்தக் குடும்பத்துக்குத்தான் அதிக நாள் நீடிக்கும். 
கட்சி வித்தியாசமில்லாமல்அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தக் குடும்பத்தை நோக்கிச் சென்றனர், நிதி அறிவிக்கப்பட்டது. தேவையான உதவிகளைச் செய்ய அரசு காத்திருக்கிறது. 
ஆனால் இதுவெல்லாம் உயிரிழந்த மாணவி அனிதாவின் தற்கொலையை நியாயப்படுத்துமா?
இப்போது வருத்தம் தெரிவிப்பவர்கள் சிறப்பு ஒதுக்கீடாக அம்மாணவிக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்திருக்க முடியும். 
மதிப்பெண் குறைந்த அரசியல்வாதிகளின் மகளுக்கு முதல்வரின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கித் தர முடியும்போது ஏன் அனிதாவுக்குத் தரப் போராடியிருக்கக் கூடாது? அனிதாவைப் போல பல நூறு மாணவியர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசு கொள்கை முடிவுகள் எடுக்கும்போது மாணவர்கள் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகள் வாங்கும் நன்கொடையை நேரடியாகத் தடுத்திருக்கலாம். ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொள்வதை இன்று வரை அரசால் உறுதி செய்ய முடியவில்லையே. 
கட்டணம் ரூ.4 லட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகிறார்களே. இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
இப்போது சமத்துவம் குறித்துப் பேசும் அரசியல் கட்சிகள் தமிழக மாணவர்களிடையே பாகுபாடு காட்டுகின்றன என்பரை மறுக்க முடியாது. அரசின் நலத்திட்ட உதவிகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே. 
தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி. அரசுப் பள்ளிகளிலும் சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட சலுகைகள் தரப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகள் எப்படியோ ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நினைப்பிலும் ஆளுங்கட்சி எப்படியோ தங்கள் ஆட்சி தொடர்ந்தால் போதும் என்ற நினைப்பிலும்தான் உள்ளனவே தவிர தங்கள்பெயர் சொல்லும்படி ஆட்சியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு சிறிது கூடக்கிடையாது. 
தமிழகப் பிரச்னைகளில் அரசியல் செய்யட்டும், ஆனால் நீட் போன்ற பொதுப் பிரச்னைகளிலாவது தமிழக மாணவர்களின் நலன் கருதி ஒன்றிணையலாமே. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றார். மருத்துவமனையில் இருந்து மறைந்தார். அவருடைய சாவு மர்மமாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 
அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் போராட்டத்தில், நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வரப்படாது என்ற முழங்கியதால் மாணவர்கள் இப்போது ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர். 
எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தச் சமுதாயத்தில் மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டுமே தவிர தற்கொலை குறித்து சிந்திக்கக் கூடாது. 

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை நோக்கி மட்டுமே முன்னேற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே சிறக்கும்.
 
வேலையை துறந்த ஆசிரியை உண்ணாவிரத போராட்டம்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:55




திண்டிவனம்: நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தி, தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த வைரபுரம் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றியவர் சபரிமாலா, 34. இரு தினங்களுக்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தியும், இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனுடன், பள்ளி வளாகத்தில் தர்ணா நடத்தினார். போராட்டத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம், வேலையை ராஜினாமா செய்வதாக ஆசிரியை கடிதம் அளித்தார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள தன் வீட்டின் எதிரில், நேற்று காலை, 8:15 மணிக்கு, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

அரசியல் கட்சியினர் அவரை சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சமாதானம் செய்தும், சபரிமாலா தன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

'நீட்' தேர்வு - யாருக்கு அதிக பலன்

பதிவு செய்த நாள்09செப்
2017
02:04

'நீட்' தேர்வு மூலம் தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முன்பு கிருஷ்ணகிரி, நாமக்கல் என குறிப்பிட்ட சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் பலன் பெற்றனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு தான் 'நீட்' (national eligibility cum entrance test). கடந்த முறை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலாவ தேர்வு முறையில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து மட்டும் 1,750 பேர் தேர்வாகினர். இந்த ஆண்டு இப்பகுதியில் இருந்து நீட் அடிப்படையில் 373 பேர் தான் தேர்வாகினர். மறைந்த மாணவி அனிதாவின் அரியலூரில் இருந்து 4 பேர் தான் கடந்த முறை வாய்ப்பு பெற்றனர். இம்முறை 21 பேர் தேர்வு பெற்றுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இம்முறை அதிக எம்.பி.பி.எஸ் இடங்களை பெற்றுள்ளனர்.






நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்தவர்கள் 471 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம். கடந்த முறை 113 மாணவர்கள் மட்டுமே தேர்வாகி இருந்தனர்.
109

நாமக்கல்லுக்கு தான் அதிக பாதிப்பு. இங்கு இருந்து கடந்த முறை 957 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வாகினர். இம்முறை 109 பேர் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளனர்.
'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வருகிறது
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 'செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்திய பின், ஒரு தரப்பினர் பின்வாங்கினர். இன்னொரு தரப்பினர் மட்டும், இரு நாட்களாக வேலைநிறுத்தம், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தை தொடரக் கூடாது என, மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்தது. ஆனாலும் நேற்று, வேலைநிறுத்த போராட்டம் தீவிரமானது. பின்வாங்கிய சங்கத்தினரும், நேற்றைய போராட்டங்களில் பங்கேற்றனர். அதனால், ௫௦ சதவீத அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. அரசு பணிகள் பாதிக்கப்பட்டன; பள்ளிகள் முடங்கின.

நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்றுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ள, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், சென்னையில், இன்று பிற்பகலில் கூடி முடிவு எடுக்கின்றனர்.

முதல்வரின் வாக்குறுதிப்படி, நவ., 30௦க்குள், ஊதிய உயர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் அக்டோபரில் போராட்டத்தில் குதிக்க, முடிவு செய்துள்ளனர்.

NEWS TODAY 15.07.2026