Saturday, September 9, 2017

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு: அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கலாம்; சட்டம் ஒழுங்கை பாதித்தால் போலீஸ் நடவடிக்கை

2017-09-09@ 00:05:08




புதுடெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. அதே நேரம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் அரியலூர் மாணவி அனிதாவுக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்தில் அமைதி குலைந்துள்ளது.

இந்நிலையில், அனிதா தற்கொலைக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 3 தினங்களுக்கு முன் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வல்ல. நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவான தேர்வு. அதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் செய்யப்பட்ட வாதத்தில், ‘‘போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதித்துள்ளது. மாணவியின் தற்கொலையை மூடி மறைக்க ஆளும் கட்சியினர் பள்ளிக் குழந்தைகள் உட்பட பலரை மறைமுகமாக போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். அதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. அதனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்துவது சட்ட விரோதமாகும். அதனால், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் மற்றும் மாணவர்கள் யாராக இருந்தாலும் நீட் தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. இந்த விவகாரத்தில் எந்த வடிவிலான போராட்டங்களாக இருந்தாலும் அதற்கு தடை விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழங்கு பாதிக்கப்படுவதை தலைமை செயலாளரும், உள்துறை செயலாளரும் தடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சட்டம் ஓழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை அல்லது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் பந்த் அல்லது இதர நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே நேரம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது, விமர்சனங்கள் செய்வது அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது ஆகியவை, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் இருந்து மாறுப்பட்டவை என்பதை மிகவும் தெளிவாக தெளிவுப்படுத்துகிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அடிப்படை உரிமையுண்டு. ஆனால், அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவோ அல்லது வன்முறையில் முடியவோ கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

காலையில் தடை: மாலையில் மாற்றம்

நீட் தேர்வுக்கு எதிரான எல்லா போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக நேற்று காலை விசாரணையின்போது நீதிபதிகள் முதலில் தெரிவித்தனர். பின்னர் வெளியிட்ட இறுதி உத்தரவில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான போராட்டங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது அடிப்படை உரிமை’ என்று நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025