Saturday, September 9, 2017

உயிரை வளர்க்கும் உயிர்க்காற்று


By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 09th September 2017 01:16 AM  | 
narayanan
Ads by Kiosked
உடம்பு வாழ உயிர் வேண்டும், உயிர் வாழ உணவு வேண்டும், உணவு வாழ உயிர்க்காற்று வேண்டும், உயிர்க்காற்று வாழ நீர் வேண்டும், நீர் வாழ நீரில் உயிரிகள் வாழ வேண்டும். இவ்வாறு நாம் பகுத்தாய்ந்து உண்மைகளைக் கண்டெடுக்க வேண்டும். முடிவில் நம் முன்னோர் கண்டெடுத்த பஞ்சபூதத் தத்துவத்தில் உண்மையின் பிறப்பைக் கண்டறியலாம். 
நீர், காற்று, தீ, வான், மண் என்ற ஐந்து சக்திகளில் உலகம் அடங்கியுள்ள உண்மையை ரிக் வேதம் கூறுகிறது. உணவு வாழ நீரும், உயிர்க்காற்றும் பற்றாது. விவசாயம் செய்ய வேண்டும். விதை வேண்டும். விதை ஊன்ற மண் வேண்டுமே! 
மண்ணில் ஊன்றிய விதை முளைத்து மரமாகிக் குடை விரிக்க வெளி வேண்டும். வெட்டவெளி என்பது ஆகாயம். உண்மையில் சூரியன் உட்பட அனைத்து கிரகங்களையும், கிரகச் சுழற்சிகளுக்கும் இடம் தரும் வெளிக்கும் எல்லையில்லாத வானத்திற்கும் நிறம் இல்லை. நீல நிறம் என்பதுகூட மாயத்தோற்றமே. 
அடுத்த கிரகம் பற்றி அறிவதைவிட இந்த பூமியையும் கடலையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோமா? படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றிய கதையை டார்வின் விளக்கினார். விதை வளர்ந்து மரமான கதை என்ன?
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளிலிருந்து உருவத்தில் பெரிதாயுள்ள யானை வரை வாழக்கூடிய இயற்கை அற்புதங்கள் பல, நம் அறிவுக்கு எட்டாமலேயே உள்ளன. எட்டியமட்டில், இந்த உலகம் எவ்வளவு தூரம் இயங்கும்? அழியும் காலம் நெருங்கிவிட்டதா? அணுகுண்டு போட்டு அழியப் போகிறதா? இயல்பு மீறிய வகையில் இயற்கைக்கு சேதம் விளைவித்து அழியப் போகிறதா? 'கடல் உள்ள வரை உலகு இயங்கும்' என்று எண்ணத் தோன்றுகிறது. 
ஏனெனில் எது இல்லாவிட்டாலும் 'ஆக்சிஜன்' உள்ளவரை உயிரியக்கம் இருக்கும். ஆக்சிஜன் தொழிற்சாலைகளையுள்ள கடலும், மரங்களும் எப்படி உலகை இயக்குகின்றன? ஆக்சிஜன் எப்படி உருவாகிறது? தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதுபோல் ஆக்சிஜ பகவானாயிருப்பவர் மகாவிஷ்ணுவே. 
ஆக்சிஜ பகவானின் அற்புதச் செயலை அறிவியலில் விளக்க முடியாமல், திருப்பாற்கடல் கடைந்தெடுக்கப்பட்டு கற்பக விருட்சமும், காமதேனுவும் வெளிப்பட்டதைப் புராணமாகக் கற்பித்தனரோ! திருப்பாற் கடலில் ஆதிசேஷன் என்ற பாம்புப் படுக்கையில் மகாவிஷ்ணு அனந்தசயனனாகப் பள்ளிகொண்டுள்ளார். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? என்று கேட்டால், 'இந்த உலகத்தைக் காப்பாற்றவே' என்று பதில் வரும். இது விஞ்ஞான உண்மை. 
நாமெல்லாம் பூமிக்கு வேண்டிய ஆக்சிஜனை மரங்கள் தருவதாக நினைக்கிறோம். மரங்கள் 30 சதவீதம் மட்டுமே தருகிறது. காடுகள் அழிக்கப்பட்டதால் 20 சதவீதம். மீதி நச்சுக்காற்றே. ஆனால், கடல் வழங்குவது 70 சதவீத உயிர்க்காற்று.
உலகில் நமது உயிர் இயக்கமே உயிர்க்காற்று சூழற்சியினால்தான். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்க்காற்றை உள்ளே வழங்கி வெளிவந்த கார்பன் காற்று மீண்டும் மரங்களால் சுத்தமாகிய உயிர்க்காற்று மனிதர்களாலும், விலங்குகளாலும் மாசாகிக் கடலுக்குள் வாழும் ஜீவராசிகளுக்கு உயிர்தந்து, கடல் நீர் உதவியால் உயிர்க்காற்றாகிக் கடலையும் பூமியையும் காப்பாற்றுகிறது. 
கடலில் எப்படி உயிர்க்காற்று உருவாகிறது? கடலில் உள்ள தாவரங்களுக்கும் மீன்களுக்கும் உணவாயுள்ள பாசிகளில் கண்ணுக்குப் புலப்படாத பிளாங்க்டன் (PLA NKTON) கார்பனை உட்கொண்டு உயிர்க்காற்றை உற்பத்தி செய்கிறது. 
பிளாங்க்டன் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க் கூட்டம். கடல் பாசிகளிலும், வேறு பல்லாயிரக்கணக்கான கடல்தாவரங்களிலும் பின்னிப் படர்ந்துள்ள இந்த நுண்ணுயிரிக் கூட்டம் கடல் தாவரங்களுக்கு வேண்டிய உயிர்க்காற்றை நீரிலிருந்து பிரித்து வழங்குகிறது. 
நாம் மண்ணைப் படித்திருக்கிறோம், மரங்களைப் படித்திருக்கிறோம், பயிர்களைப் படித்திருக்கிறோம், ஆனால் கடலைப் படிக்கவில்லை! பூவுலகில் இருப்பதுபோல் பாதாள உலகிலும் பல அற்புதங்கள் உள்ளன. பூமியின் கீழ்மட்டம் ஆழி. ஆகவே, 'ஆழி சூழ் உலகு' என்று கூறுகிறோம். மழை பெய்கிறது. வெள்ளம் ஏற்படுகிறது. கரை புரண்டோடும் வெள்ளம் கடலில் சேர்கிறது. 
அவ்வாறே புவிமீது வளர்ந்த மரங்கள், மண்ணுக்கு அடியில் உள்ள உலோகங்களிலிருந்து சத்தைப் பெற்று விண்ணில் உயர்ந்து பச்சைக்குடைகளை விரித்தவண்ணம் உள்ளன. இந்தப் பச்சை நிறம் எப்படி வந்தது? இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறார்கள். 
ஆங்கிலத்தில் Photo Synthesis  என்ற சொல்லுக்கு ஏற்ப இணையான தமிழ்ச்சொல் இல்லை. ஒளிச்சேர்க்கையில் என்ன சேர்கிறது? மரம் தனக்குத் தேவையான உணவைத் தயார் செய்துகொள்ள உயிரிகளும் ரசாயனங்களும் சேர்கின்றன. மண்ணிலிருந்து மரங்களின் வேர் வழியே செல்லும் கார்பன், ஒளியின் உதவியால் மரம் உணவைப் பெற்றுக்கொண்டு மூன்று பங்கு உயிர்க்காற்றை வெளியேற்றுகிறது. 
அதாவது தண்ணீர் எச்2ஓ உடன் உட்கொள்ளப்பட்ட கார்பன் சிஓ2-வும் சேர்ந்து ஓ3. அதாவது ஒளிச்சேர்க்கை மூலம் (ஓ2-வில் உள்ள 2 பங்கு ஆக்சிஜனும், எச்2ஓ-வில் உள்ள ஒரு பங்கு ஆக்சிஜனும் வெளியேறுவதால் நம்மால் உயிர்வாழ முடிகிறது! 
இதே நிகழ்ச்சி கடலிலும் நிகழ்கிறது. மரங்கள் வழங்கும் உயிர்க்காற்றைவிட கடல் வழங்கும் உயிர்க்காற்று இரண்டு மடங்கு அதிகம்.
மண்ணில் நாம் காணும் இயற்கையின் அற்புதங்கள் கடலிலும் நிகழ்கின்றன. ஆழ்கடலில் காணக்கூடிய அற்புதங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கடலுக்குள் பவழப்பாறைகள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் போல் உயர்ந்தும் நீண்டும் குகைகளை உருவாக்கியும் உறைந்துள்ளன. 
பூமியின் அடியில் உள்ள உலோகச் சத்துக்களை மரம் ஏற்பதுபோல கடல் அடியில் உள்ள பாறைகளில் உள்ள உலோகச்சத்தைக் கரைத்து உணவாக மாற்றிக்கொள்ளும் கடல்தாவர இனங்களால்தான் மீன்களின் வாழ்வு மட்டும் அல்ல, மனிதனுக்கும் உயிர்வாழ்வு கிட்டுகிறது. யானையைவிடப் பெரிய பெரிய திமிங்கலங்கள் வாழ்கின்றன. சிங்கம், புலி போன்ற கொடிய சுறாமீன்களும் உண்டு.
உயிர்க்காற்று இல்லாமல் கடலில் அவை வாழ்வது எப்படி? கடல்வாழ்ப் பிராணிகளுக்கெல்லாம் வாழ்வு தருவதே கடல் தாவரங்கள்தாம். இக்கடல்வாழ் தாவரங்களில் உள்ள பிளாங்க்டன் நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கைக்குக் காரணமாயுள்ளன. 
கடல் தாவரங்கள் பல வகைப்படும். அவை இலை வடிவில் அடர்ந்து படர்ந்து கடலில் வியாபித்துள்ளன. விஷப்பாசிகளும் உண்டு. நல்ல பாசிகளும் உண்டு. அட்லாண்டிக் சமுத்திரத்தில் மனிதன் உண்ணத்தக்க கடல்பாசி - தாவரங்களை விசைப்படகுகள் மூலம் சென்று கடலில் குதித்து அறுவடை செய்து திரும்பும் ஸ்காண்டிநேவிய மக்களைப் பற்றிய தகவல்கள் உண்டு.
ஆண்டுகள் செல்லச் செல்ல பூமியில் விளைவிக்கப்படும் உணவுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இப்போதே கடலில் மீன்பிடித்துக் கரை சேர்த்து அப்படியே விற்பனைக்கு வருகின்றன. மிகுந்தவை உப்புக்
கருவாடு. 
பலவகை கடல் பாசிகளும் உணவுச் சங்கிலியில் இடம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள (ரூபாய் சுமார் 2.5 லட்சம் கோடி) கடல் வாணிபப் பொருள்கள் உலகப் பொருளாதாரத்தில் பங்கு பெற்றுள்ளன. இவ்வளவு நிகழ்ந்தும் இன்னமும் ஆழ்கடல் மர்மம் புரியாத புதிராயுள்ளது. 
கடலில் இயங்கும் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியே தொடக்க நிலையில் உள்ளபோது, மக்கள் கடலை மாசுகளின் சங்கமமாக மாற்றிவிட்டனர்.
உணவுச் சங்கிலி என்று சாதாரணமாகப் பலரும் பேசுகிறோம். மண்ணில் விளைந்த பொருள், உங்கள் உணவு மேஜைக்கு ஒரு சாப்பாடாக வரும் வரையில் உள்ள பின்னலமைப்பு இது. ஒரு பக்கம் ஜங்க் ஃபுட், மறுபக்கம் விளைபொருள்களில் எஞ்சியுள்ள நச்சு. 
கத்தரிக்காய் விஷம், தக்காளி விஷம், ஆப்பிள் விஷம், திராட்சை விஷம், பீட்ரூட் படுவிஷம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வயிற்றுக்குள் தள்ளி உயிர் வாழ்கிறோம். இயற்கையாகக் கடலில் விளையும் இவை நஞ்சில்லாதது என்று கடல்பாசி விற்பவரும், மீன் விற்பவரும் சொல்லலாம். அது உண்மையா? கடலில் எவ்வளவு மாசுகளைக் கொட்டுகிறோம்? அவை பற்றிய கணக்கைக் கேட்டால் மீனையும் கடல்பாசிகளையும் கையில் தொடமாட்டோம். 
நாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக், மின்சாதனங்கள், துணிகள், பல்வேறு சாயம், கச்சா எண்ணெய்.... எல்லாம் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாகச் சிதைத்து, ஏறத்தாழ 51 டிரில்லியன் (ரூபாய் சுமார் 51 லட்சம் கோடி) துகள்கள் பிளாங்க்டனுடன் கலந்து மீன்களையும், கடல் தாவரங்களையும் நச்சாக்குகின்றனவாம். 
MILKYWAY என்று சொல்லப்படும் பால்வளி மண்டலத்தில் காணப்படும் நட்சத்திரங்களைப்போல் ஐந்து மடங்கு பிளாஸ்டிக் துகள்கள் கடலில் மின்னுகின்றனவாம். அப்படியானால் மண்ணைவிட கடல் இன்னமும் அதிக மாசாகி வருகிறது. 
கடலையும் மண்ணையும் காப்பாற்ற மனிதனால் ஆவது ஒன்றுமில்லை. நாம் உயிர்வாழ, உயிர்க்காற்றுப் பெற, உணவு பெற, ஊன் பெற, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளே துணை.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025