Saturday, September 9, 2017


தற்கொலை தவிர்ப்போம்

By ஆர். வேல்முருகன்  |   Published on : 09th September 2017 01:13 AM  |
DINAMANI
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர், முதுநிலை மருத்துவம் படிக்கும்போது பேராசிரியர் திட்டியதால் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார். 
கேரளத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவி கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டார். பிளஸ் 2 தேர்வுகளின் போது எதிர்பார்த்ததை விடக் குறைந்த மதிப்பெண் பெறும்போது பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மாணவரும் பெற்றோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்புவதற்குப் பழகவும் பழக்கவும் வேண்டும். விரும்பியபடி வாழ்க்கை என்பது இந்த உலகில் சிலருக்கு வேண்டுமானால் அமைந்திருக்கலாம். 
மீதியுள்ளவர்கள் அனைவருமே கிடைத்த வாழ்க்கைக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்தான். இந்தப் படிப்பு இல்லாவிட்டால் மற்றொன்று. இந்த உலகில் வாழ்வதற்கும் படிப்பதற்கும் ஆயிரம் மாற்று வழிகள் இருக்கின்றன. 
இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. அதற்கெல்லாம் தற்கொலைதான் தீர்வென்றால் இங்கு வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். 
அந்தத் திறமையை வைத்து ஒவ்வொருவரும் முன்னேற வேண்டுமே தவிர எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணமே வரக்கூடாது. இதற்குச் சிறு வயதில் இருந்தே மன நல நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும். 
தற்கொலை கூடாது என்ற அளவில் பாடத்திட்டங்களுடன் வாழ்வியல் நடைமுறையையும் கற்றுத் தர வேண்டும்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்றாலும் அவர் மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை. அவர் இறந்த சோகம் பிறரை விட அந்தக் குடும்பத்துக்குத்தான் அதிக நாள் நீடிக்கும். 
கட்சி வித்தியாசமில்லாமல்அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தக் குடும்பத்தை நோக்கிச் சென்றனர், நிதி அறிவிக்கப்பட்டது. தேவையான உதவிகளைச் செய்ய அரசு காத்திருக்கிறது. 
ஆனால் இதுவெல்லாம் உயிரிழந்த மாணவி அனிதாவின் தற்கொலையை நியாயப்படுத்துமா?
இப்போது வருத்தம் தெரிவிப்பவர்கள் சிறப்பு ஒதுக்கீடாக அம்மாணவிக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்திருக்க முடியும். 
மதிப்பெண் குறைந்த அரசியல்வாதிகளின் மகளுக்கு முதல்வரின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கித் தர முடியும்போது ஏன் அனிதாவுக்குத் தரப் போராடியிருக்கக் கூடாது? அனிதாவைப் போல பல நூறு மாணவியர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசு கொள்கை முடிவுகள் எடுக்கும்போது மாணவர்கள் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகள் வாங்கும் நன்கொடையை நேரடியாகத் தடுத்திருக்கலாம். ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொள்வதை இன்று வரை அரசால் உறுதி செய்ய முடியவில்லையே. 
கட்டணம் ரூ.4 லட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகிறார்களே. இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
இப்போது சமத்துவம் குறித்துப் பேசும் அரசியல் கட்சிகள் தமிழக மாணவர்களிடையே பாகுபாடு காட்டுகின்றன என்பரை மறுக்க முடியாது. அரசின் நலத்திட்ட உதவிகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே. 
தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி. அரசுப் பள்ளிகளிலும் சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட சலுகைகள் தரப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகள் எப்படியோ ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நினைப்பிலும் ஆளுங்கட்சி எப்படியோ தங்கள் ஆட்சி தொடர்ந்தால் போதும் என்ற நினைப்பிலும்தான் உள்ளனவே தவிர தங்கள்பெயர் சொல்லும்படி ஆட்சியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு சிறிது கூடக்கிடையாது. 
தமிழகப் பிரச்னைகளில் அரசியல் செய்யட்டும், ஆனால் நீட் போன்ற பொதுப் பிரச்னைகளிலாவது தமிழக மாணவர்களின் நலன் கருதி ஒன்றிணையலாமே. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றார். மருத்துவமனையில் இருந்து மறைந்தார். அவருடைய சாவு மர்மமாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 
அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் போராட்டத்தில், நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வரப்படாது என்ற முழங்கியதால் மாணவர்கள் இப்போது ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர். 
எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தச் சமுதாயத்தில் மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டுமே தவிர தற்கொலை குறித்து சிந்திக்கக் கூடாது. 

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை நோக்கி மட்டுமே முன்னேற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே சிறக்கும்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025