Sunday, September 10, 2017

ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு
பதிவு செய்த நாள்
செப் 09,2017 21:59



புதுடில்லி: ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டீ ஆக்டிவேட் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண சலுகையால் மெட்ரோ பயணம் அதிகரிப்பு
பதிவு செய்த நாள்10செப்
2017
00:39




சென்னை: மெட்ரோ ரயிலில், கட்டண சலுகை வழங்கப்படுவதால், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, அவ்வப்போது, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பண்டிகை காலத்தையொட்டி, ஆக., 25ல் இருந்து, அக்., 31 வரை, 20 சதவீதம், கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது.

மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:மெட்ரோ ரயிலில், தினமும், 22 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்தனர். பண்டிகை காலத்தையொட்டி, பயணியருக்கு, அக்., 31 வரை, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயிலில், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த கட்டண சலுகையை, 2018 ஜன., வரை நீட்டிப்பது குறித்து, உயரதிகாரிகள் தரப்பில், ஆலோசிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மருத்துவகல்லூரிகளுக்கு அபராதம் வசூலித்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு

பதிவு செய்த நாள்10செப்
2017
02:56




சென்னை,: மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்யாத, மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, இழப்பீடு தொகையை பெற்று, மாணவர்களுக்கு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி, புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலை உள்ளிட்ட சில கல்லுாரிகளில், மருத்துவப் படிப்பு மற்றும் முதுகலை வகுப்புகளை முடித்த, மாணவர்களின் சான்றிதழ்களை, பதிவு செய்ய, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களின் சான்றிதழ்களை பதிவு செய்யும்படி, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மருத்துவ கவுன்சில், மேல்முறையீடு செய்தது. மாணவர்கள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, மருத்துவ கல்லுாரிகள் சரி செய்யாததால், அதில் படித்தவர்களின் பட்டங்களை பதிவு செய்ய முடியாது' என, இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. மருத்துவ கவுன்சில் அனுமதி கடிதம் வழங்கிய பின் தான், அந்த கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்திய தேர்விலும், தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்லுாரிகளில் குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை என்பதற்காக, மாணவர்கள் பெற்ற பட்டங்களை பதிவு செய்வதை, இந்திய மருத்துவ கவுன்சில் தடுக்க முடியாது.

பல்கலை வழங்கிய தேர்ச்சி சான்றிதழில், எந்த குறைபாடும் இல்லை. குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல், படிப்பை பூர்த்தி செய்ய மாணவர்களை அனுமதிக்கும் கல்லுாரிகளுக்கு, இழப்பீட்டு தொகை விதிக்கப்பட வேண்டும். அப்போது தான், பணம் போகிறதே என பயந்து, மருத்துவ கவுன்சிலின் நிபந்தனைகளை நிறைவேற்றுவர்.

எம்.பி.பி.எஸ்., மாணவர் ஒவ்வொருவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்; முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, கல்லுாரிகளுக்கு இழப்பீட்டு தொகை விதிக்கப்படுகிறது.

மருத்துவ கல்வி இயக்குனர், இழப்பீட்டு தொகையை வசூலித்து, ஒவ்வொரு மாணவருக்கும் வழங்க வேண்டும்.இழப்பீட்டு தொகையில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௧௦ ஆயிரம் ரூபாய்; முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௨௫ ஆயிரம் ரூபாயை, பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதை, அரசு மருத்துவ கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிட வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
மாவட்ட செய்திகள்

சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்று கொட்டுமழையில் போராட்டம் நடத்தினர்.

செப்டம்பர் 10, 2017, 04:45 AM

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவம், பல் மருத்துவத்தில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த பல்கலைக்கழகம் மருத்துவ கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் (முதலாம் ஆண்டு தவிர்த்து) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து முதுநிலை பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் காலமுறையற்ற விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவர்களை விடுதிகளில் இருந்து காலி செய்யும் படியும் வலியுறுத்தியது. ஆனால் மாணவ- மாணவிகள் விடுதிகளை காலி செய்யாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களது விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து , அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென மழை பெய்தது. இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கொட்டும் மழையையும் பொருட்படுத் தாமல் கையில் குடைபிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

செப்டம்பர் 10, 2017, 04:00 AM

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்கெட் அருகே மல்லுக தெருவில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் குளத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மகாமக விழாவின் போது ரூ.21 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 50 மீட்டர் அளவில் சுவர் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து அறநிலையத்துறையினர் அந்த பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ‘இனிப்பு’ச் செய்தி!



தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 09, 2017, 12:43 PM

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி.

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செலுத்திப் பார்த்ததில், உடல் பருமனையும் நீரிழிவையும் கட்டுப்படுத்தியதாம்.

மனிதர்களிடமும் இச்சோதனை வெற்றியடையும் என்றும், விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும் டானாபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி புரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளார்.
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்



தெற்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 10, 2017, 04:15 AM

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் தெற்கு கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்திருக்கிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 32 செ.மீ. வரை மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று வரை சராசரியாக 24 செ.மீ. மழை பெய்யும். ஆனால் 35 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 48 சதவீதம் அதிகமாகும். சென்னையில் இயல்பைவிட 13 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பாம்பனில் 11 செ.மீ., கொடைக்கானலில் 10 செ.மீ., அவினாசி, மதுரையில் தலா 9 செ.மீ., அரவக்குறிச்சி, சின்னக்கல்லார், பொன்னேரியில் தலா 7 செ.மீ., திருமங்கலம், பெரியகுளம், மணியாச்சி, ஓசூர், பரமத்திவேலூர், திருப்பூரில் தலா 6 செ.மீ., கொடுமுடி, மேட்டுப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம், வால்பாறை, நாமக்கல், சூளகிரி, பெருந்துரை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் மற்றும் பல இடங்களில் லேசான மழையும் பதிவாகி இருக்கிறது.

NEWS TODAY 15.07.2026