Sunday, September 10, 2017

மருத்துவகல்லூரிகளுக்கு அபராதம் வசூலித்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு

பதிவு செய்த நாள்10செப்
2017
02:56




சென்னை,: மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்யாத, மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, இழப்பீடு தொகையை பெற்று, மாணவர்களுக்கு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி, புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலை உள்ளிட்ட சில கல்லுாரிகளில், மருத்துவப் படிப்பு மற்றும் முதுகலை வகுப்புகளை முடித்த, மாணவர்களின் சான்றிதழ்களை, பதிவு செய்ய, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களின் சான்றிதழ்களை பதிவு செய்யும்படி, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மருத்துவ கவுன்சில், மேல்முறையீடு செய்தது. மாணவர்கள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, மருத்துவ கல்லுாரிகள் சரி செய்யாததால், அதில் படித்தவர்களின் பட்டங்களை பதிவு செய்ய முடியாது' என, இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. மருத்துவ கவுன்சில் அனுமதி கடிதம் வழங்கிய பின் தான், அந்த கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்திய தேர்விலும், தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்லுாரிகளில் குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை என்பதற்காக, மாணவர்கள் பெற்ற பட்டங்களை பதிவு செய்வதை, இந்திய மருத்துவ கவுன்சில் தடுக்க முடியாது.

பல்கலை வழங்கிய தேர்ச்சி சான்றிதழில், எந்த குறைபாடும் இல்லை. குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல், படிப்பை பூர்த்தி செய்ய மாணவர்களை அனுமதிக்கும் கல்லுாரிகளுக்கு, இழப்பீட்டு தொகை விதிக்கப்பட வேண்டும். அப்போது தான், பணம் போகிறதே என பயந்து, மருத்துவ கவுன்சிலின் நிபந்தனைகளை நிறைவேற்றுவர்.

எம்.பி.பி.எஸ்., மாணவர் ஒவ்வொருவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்; முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, கல்லுாரிகளுக்கு இழப்பீட்டு தொகை விதிக்கப்படுகிறது.

மருத்துவ கல்வி இயக்குனர், இழப்பீட்டு தொகையை வசூலித்து, ஒவ்வொரு மாணவருக்கும் வழங்க வேண்டும்.இழப்பீட்டு தொகையில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௧௦ ஆயிரம் ரூபாய்; முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௨௫ ஆயிரம் ரூபாயை, பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதை, அரசு மருத்துவ கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிட வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...