Tuesday, September 12, 2017

மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் இன்று துவக்கம்! : காவிரி தாய்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்
செப் 11,2017 22:59



மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், மகா புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. காவிரி துலா கட்டத்தில் நேற்று, காவிரி தாய் சிலைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரியில், 144 ஆண்டுகளுக்குப் பின், மகா புஷ்கரம் விழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது. சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள், துறவிகள், காவிரி ஆற்றில் புனித நீராட உள்ளனர். மாலை, வேதவியாசர், காவிரி தேவி படத்துடன், மயிலாடுதுறை துலா கட்டத்திலிருந்து ஊர்வலம் நடக்கிறது. இதில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் கலந்து கொள்கின்றனர். இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கும் புஷ்கர விழாவின் அனைத்து நாட்களிலும், வேத பாராயணம், ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, காவிரிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது.

பொறுப்பாளர் மாதாஜி ஞானேஸ்வரி தலைமையில், அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, 24ம் தேதி வரை, தினமும் ஆரத்தி மற்றும் சகஸ்ரநாம பாராயணம் செய்ய உள்ளனர். ஆரத்தி குழுவினர், காவிரி துலா கட்டத்தின் தென் கரையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய் சிலைக்கு, நேற்று காப்பு கட்டி, சகஸ்ரநாம அர்ச்சனை, ஆரத்தி எடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், பொறுப்பாளர்கள் மாதாஜி ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, பிரவீனா, புஷ்கரம் விழாக்குழு செயலர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச் செயலர் அப்பர் சுந்தரம், பா.ஜ., தேசியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புறநகர் பகுதியில், மூன்று தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

21 இடங்களில் நடக்கிறது : குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். 

இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில், கா விரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கபட்டணம், டி.நரசிபுரா, சிவசமுத்திரா, தலக்காடு, பன்னுார், கனகபுரா, சங்கமம் ஆகிய இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், பரமத்தி வேலுார், திருச்சி, சுவாமிமலை, திருவையாறு, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
பதிவு செய்த நாள்11செப்
2017
22:12

வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.

இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. 

இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.

கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
சேலம் - சென்னை விமானம் சேவை துவங்குவதில் தாமதம்

பதிவு செய்த நாள்11செப்
2017
21:58

சேலம்: சேலத்தில் இருந்து, சென்னைக்கு விமான சேவையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு, தமிழக அரசியல் சூழலே காரணம் என, கூறப்படுகிறது.

சேலம், கமலாபுரத்தில், 1993ல், விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, 6,000 அடி மட்டுமே ரன்வே உள்ளதால், சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் உள்ளது. இரு முறை தனியார் நிறுவனங்கள் மூலம், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்பட்டும், வரவேற்பு இல்லாததால், ஒருசில மாதங்களில் நிறுத்தப்பட்டது.சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், 'உதான்' திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு நகரங்களுக்கு இடையே, விமான போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் நஷ்டத்தை, மத்திய அரசு, 80 சதவீதம், மாநில அரசு, 20 சதவீதம் ஏற்க வழி செய்யப்பட்டது.இதன்படி, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, சென்னையில் இருந்து நெய்வேலிக்கும், சேலத்தில் இருந்து புதுச்சேரி வழியாக, சென்னைக்கும் விமானம் இயக்க, அனுமதி அளிக்கப்பட்டது. 

மாநில அரசுகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகள் முடிந்த பின், செப்., முதல் விமான சேவை துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.செப்., துவங்கி, இரு வாரங்களான நிலையில், விமான சேவை குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை. அதே சமயம், 'உதான்' திட்டத்தில் அனுமதி பெறப்பட்ட சேவைகள், வேறு மாநிலங்களில், செப்., 15 முதல் துவங்குகின்றன.ஏர் ஒடிசா நிறுவன அலுவலர் ஒருவர் கூறியதாவது:'உதான்' திட்டத்தில், அனுமதி பெறப்பட்ட ஏர் ஒடிசா நிறுவனம், தமிழகத்தில் விமான சேவை துவக்க தயாராகவே உள்ளது. ஆயினும், மாநில அரசின் அனுமதி உள்ளிட்ட, ஒருசில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசியல் சூழலும் இதற்கு காரணமாக இருக்கலாம். அக்., மாதத்தில், விமான சேவை துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் உதவி கமிஷனருக்கு ஜனாதிபதி விருது கிடைக்காததேன்?

பதிவு செய்த நாள்11செப்
2017
19:51

சேலம் : உதவி கமிஷனருக்கு அறிவிக்கப்பட்ட, மத்திய அரசின் ஜனாதிபதி விருது, வழக்கை காரணம் காட்டி ரத்தாக உள்ளது. வழக்கை மறைத்த, உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என, தெரிகிறது. சேலம், மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கண்ணன், 49. இவர், 2014ல், தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த, எஸ்.ஐ., ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால் இடையே மோதல் ஏற்பட்டது. இதை, சரியாக விசாரிக்கவில்லை என, உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி, கண்ணன் மீது, 2015ல், வழக்கு பதிவானது. இந்நிலையில், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்ற கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். போலீசில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான ஜனாதிபதி விருதை, கண்ணனுக்கு வழங்க, அப்போதைய கிருஷ்ணகிரி, எஸ்.பி., திருநாவுக்கரசு பரிந்துரைத்தார். கிருஷ்ணகிரி, சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், 'கண்ணன் மீது வழக்கு எதுவும் இல்லை' என, தெரிவித்து விட்டனர். கண்ணனுக்கு, 2016ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. அதை, ஆக., 15ல் பெற இருந்தார்.

கண்ணன் மீது வழக்கு உள்ள நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால், முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு புகார் அனுப்பினார். இதனால், விருது வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விருதை ரத்து செய்வது குறித்து, மத்திய உள்துறை பரிசீலிக்கிறது. வழக்கு விபரங்களை மறைத்த, அப்போதைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

உதவி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடரப்பட்டது. அது, குற்ற வழக்கு அல்ல. அதே நேரம், வழக்கை விசாரிக்க வேண்டிய கூடுதல், எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்தது. இதனால், விசாரணை முடிவில் தாமதம் ஏற்பட்டது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், விசாரணைக்கு பின் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?

பதிவு செய்த நாள்11செப்
2017
19:39


கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பிளஸ் ௨ முடித்ததும், அவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கப்படுகிறது. அனைத்து வகை, 'சாப்ட்வேர்'களையும் உள்ளீடு செய்து, இதை உடனடியாக பயன்படுத்த முடியும். இந்நிலையில், லேப் - டாப் வாங்கும் மாணவர்கள் பலர், 'வீடியோ கேம்' விளையாடுவதும், இணைய தளங்களில் பொழுதை போக்குவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டால், சில மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது, இலவச லேப் - டாப் பெறும் மாணவர்கள், இணையதள விளையாட்டில், நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் லேப் - டாப்களில், 'கேம் அப்ளிகேஷனை' நீக்கவும், அது போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப தடை ஏற்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

- நமது நிருபர் -
நீங்க விரும்புற எல்லாமே இருக்கு: சிங்கப்பூர் சுற்றுலா துறை அழைப்பு

பதிவு செய்த நாள்11செப்
2017
19:41



சென்னை: 'நிச்சயம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நாடாக, சிங்கப்பூர் இருக்கும். இந்திய சுற்றுலா பயணியர் அதிகம் வர வேண்டும்' என, சிங்கப்பூர் சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும், பொருளாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ஆர்வம் நிறைவேறும்' என்ற தலைப்பில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கான குழுவினர், நேற்று சென்னை வந்தனர்.

இது குறித்து, சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர், ஸ்ரீதர் கூறியதாவது:

சிங்கப்பூர், 50 ஆண்டுகளாக, உலக சுற்றுலா தலமாகவும், வர்த்தக மையமாகவும் அடையாளப் படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் சுற்றுலா, முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்துஉள்ளது. சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாக, இந்தியர்கள், சிங்கப்பூருக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி, 2016ல், 11 லட்சம் இந்தியர்கள், சிங்கப்பூருக்கு பயணித்து உள்ளனர். இது, 2015ஐ காட்டிலும், 8 சதவீதம் உயர்வு. இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, 6.6 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இது, 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இயற்கை அழகை ரசிப்போர், வித்தியாசமான பொருட்களை வாங்க விரும்புவோர், உணவு பிரியர்கள், கலை ஆர்வம் உள்ளோர், தொழில் துவங்குவோர் என, அனைத்து தரப்பினரையும், சிங்கப்பூர் நிச்சயம் திருப்திப்படுத்தும். இந்த பிரசாரத்தில், சிங்கப்பூரின் தனித்தன்மை குறித்து விவரிக்கிறோம். இதன் பயனாக, வரும் காலங்களில், இந்தியர்களின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வங்கியில், 'டிபாசிட்' அதிகரிப்பு  வருமான வரி துறை கண்காணிப்பு

வங்கியில், ஜூலைக்கு பின், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்பு தொகை வைத்த வாடிக்கையாளர்களை, வருமான வரித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.





பண பரிமாற்ற அறிவிப்புக்கு பின், வரி வருவாயை பெருக்க, வங்கி மற்றும் வருமான வரித் துறை மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக, கறுப்பு பணத்தை வெளி கொண்டு வரும் நோக்கில், ஜூலைக்கு பின்,

வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களில், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், இருப்பு வைத்துள்ளோரின் வருமான விபரம் கண்காணிக்கப்படுகிறது.
வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைக்கு, 6 முதல், 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால், வாடிக்கையாளர் வருமான வரி செலுத்த தேவையில்லை; அதற்கு மேல் இருந்தால், 'பான்' எண் உள்ளோர்,

வரித் துறையினர் குறி

10 சதவீதம்,இல்லாதோர், 20 சதவீத வரி செலுத்த வேண்டும்.வங்கி மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின், வங்கியில் நிரந்தர வைப்பு தொகை அதிகரித்துள்ளது. இந்த வாடிக்கையாளர் மீது வருமான வரித் துறையினர் குறி வைத்துள்ளனர்.

மேலும், வைப்பு தொகைக்கான வட்டிக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. வங்கி வாடிக்கையாளர் விபரம், ஆன்- - லைன் மூலம் வருமான வரித் துறைக்கு சென்றுவிடும். அதன்படி வருமான வரி வசூலிப்பர். இந்த நெருக்கடியால், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --

NEWS TODAY 15.07.2026