Wednesday, May 2, 2018

வெளிநாட்டு வேலை : ஏமாந்தவர்கள் புகார்

Added : மே 02, 2018 00:16

திருச்சி: வெளிநாட்டு வேலை ஆசையில் ஏமாந்த, 32 பேர், போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், எம்.ஜி., எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர்கள், முகமது சுல்தான்; முகமது கனி. இவர்கள், தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக விளம்பரம் செய்திருந்தனர்.இதை பார்த்து, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், டிரைவர், கார்பென்டர் வேலைக்கு செல்ல, ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்காக, ஒரு லட்சம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர்.அதில், 32 பேரை, நேற்று, தாய்லாந்துக்கு அனுப்பி வைப்பதாக, திருச்சி விமான நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர். திருச்சியில் இருந்து, காலை, 10:40 மணிக்கு பாங்காக் செல்வதற்காக, நேற்று அதிகாலையிலேயே டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டுடன் விமான நிலையத்துக்கு வந்தனர்.ஆனால், தனியார் நிறுவனத்தினர் யாரும் வரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, 32 பேரும், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் விபரத்தை கூறியுள்ளனர்.'விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள் நேற்று காலை, திருச்சி போலீஸ் ஐ.ஜி., மற்றும் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர்.'வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் கொடுத்தனர்.


வேலூர், திருத்தணியில் வறுத்தெடுத்தது வெயில்

Added : மே 01, 2018 22:46



தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மற்றும் திருத்தணியில், நேற்று, 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இன்று, ஒன்பது மாவட்டங்களில், வெயில் வறுத்தெடுக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அனல் பறக்கிறது. சென்னை, கடலுார், புதுச்சேரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில், பகலில் வெயில் கொளுத்தினாலும், மாலையில் கடற்காற்று வீசுவதால், வெப்பம் ஓரளவு தணிகிறது. இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,

 'வேலுார், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலுார், மதுரை ஆகிய, ஒன்பது உள்மாவட்டங்களில், இன்று இயல்பைவிட, 4 டிகிரி அதிகமாகி, 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். அதேநேரத்தில், மாநிலத்தின் சில பகுதிகளில், வெப்ப சலன மழைக்கும் வாய்ப்புள்ளது' என்றனர். வேலுாரில் கொதிப்பு கோடை வெயில் நேற்றும் சுட்டெரித்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் அனல் பறந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மற்றும் திருத்தணியில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. கரூரில், 41.5; திருச்சி, 40.2; மதுரை, 40; சென்னை விமானநிலையம், 39.2; கடலுார், நாகை, 38; பரங்கிப்பேட்டை, 37 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. குறைந்தபட்சமாக, வால்பாறை, 28.5; ஊட்டி, 24.8; கொடைக்கானல், 21.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இடி முழங்கும் சென்னை : 'சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் பாதியளவு மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்சம், 28 டிகிரி; அதிகபட்சம், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும். மாலை மற்றும் இரவு நேரங்களில், இடி, மின்னலை ஏற்படுத்தும் அளவுக்கு, மேக கூட்டங்கள் உருவாகும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் மழை : கோடை வெயில் கொளுத்தும் நிலையில், நேற்று முன்தினம், கொங்கு மண்டலத்தில் மழை கொட்டியது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கோபிசெட்டி பாளையத்தில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. சேலம், 7; பவானி, 6; பெருந்துறை, திருப்பூர், உதகமண்டலம், கோவை அன்னுார், 5 செ.மீ., மழை பதிவானது. ஈரோடு உட்பட, மற்ற சில பகுதிகளில், 2 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது.

- நமது நிருபர் -
ஓட்டுக்காக உங்களை தேடி வரவில்லை
கிராமத்தை தத்தெடுத்த கமல் பேச்சு 


02.05.2018

சென்னை,: ''ஓட்டுக்காக கிராமங்களை தேடி வரவில்லை,'' என, மக்கள் நீதி தலைவர் கமல் பேசினார்.



கிராம சபை கூட்டத்தை காணவும், தத்தெடுக்கப்பட்ட அதிகத்துார் கிராமத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்யவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், நேற்று அங்கு சென்றார்.

அதிகத்துார் கிராம மக்கள் மத்தியில், கமல் பேசியதாவது: இந்த கிராமத்தில் உள்ள, அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது, என் கடமை. அரசு செய்ய முடிந்ததை,

தனிக் கூட்டம் செய்ய முடியும் என்பதை காட்டப் போகிறோம். அதனால் தான், 12 ஆயிரத்து, 500 கிராமங்களையும் தத்தெடுக்கவில்லை; எட்டு கிராமங்களை மட்டுமே தத்தெடுத்துள்ளோம்.

உங்கள் உதவி இருந்தால், 12 ஆயிரத்து, 500 கிராமங்களிலும் பொறுப்பேற்கும் நாளும் வரும். நான், இங்கே உடனே செய்யக்கூடியதை மட்டும் சொல்கிறேன். பள்ளிக் கூடத்திற்காக, மூன்று அறைகள் கட்டித் தரப்படும். கல்விக்கு நிகரான ஆரோக்கியத்திற்காக, 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பமாகும். கிராமத்தை பசுமையாக்க, மரம் நடும் பணிகள் நடக்க உள்ளன. உங்கள் திறமைகளை வளர்க்க, குறுகிய கால பயிற்சி முகாம் நடத்தப்படும்.

நீர் சேகரிக்க ஏதுவாக, சிறிய அணைகள், மடைகள் கட்டப்படும். குளம், ஏரி சீரமைக்கப்பட உள்ளது. இதுபோன்ற, 50க்கும் மேற்பட்ட விஷயங்கள் உள்ளன. எது முடியுமோ,

அதை நாங்கள் செய்வோம். செய்ய முடியாததை, உங்களுடன் கலந்தாலோசித்து செய்வோம். 'இதை செய்கிறோம்; ஓட்டு போடுங்கள்' என கேட்டு, நாங்கள் வரவில்லை. செய்யப் போகிறோம்; அவ்வளவு தான்.

இந்த மாதிரி, நிறைய கிராமங்களில் செய்ய ஆசை. மற்ற கிராமங்களுக்கு, எங்களை கொண்டு சேர்க்க வேண்டியது, உங்கள் கடமை. யாரோ ஒருவர் வருகிறார்; செய்து கொடுத்து விடுவார் என, நினைக்காதீர்கள். இதை நாம் செய்து, நாம் பாதுகாக்கிறோம். கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, நம் பொறுப்பு. இந்த விஷயத்தில், கவுரவம் பார்க்க வேண்டாம். கழிப்பறைகளை கட்டி முடித்ததும், நானே வந்து, சுத்தம் செய்வது எப்படி என, உங்களுக்கு சொல்லி தருவேன்.

நாம் அனைவரும், மனதிற்குள் கிராமத்தான் தான். வெளியே தான் நகரத்தார் போல் வேஷம் போடுவர். இது, நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். இங்கே நரிக்குறவர்கள், இருளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நீதி மையம் பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
 


அஞ்சலக மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட், 'மேளா'

Added : மே 01, 2018 23:16


சென்னை: விழுப்புரம், கடலுார், வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள, அஞ்சலக சேவை மையங்களில், வரும், 5ம் தேதி, சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது.இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம், கடலுார், வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில், வரும், 5ம் தேதி, சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும், அடிக்கடி பயணம் செய்வோர் கால நீட்டிப்பு செய்ய, சிரமமின்றி விண்ணப்பங்கள் அளிக்கவும், இந்த சிறப்பு மேளா நடத்தப்படுகிறது.இந்த மேளாவில் பங்குபெற, passportindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் வழியாக, விண்ணப்ப பதிவு எண் பெற்று, உரிய கட்டணத்தை செலுத்திய பின், சந்திப்புக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளலாம். புதிய மற்றும் மறு வெளியீட்டுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, சிறப்பு மேளாவில் ஏற்கப்படும். இவ்வாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிஎச்.டி., முடித்தவர்களுக்கே உதவி பேராசிரியர் வேலை

Added : மே 01, 2018 23:58

புதுடில்லி: கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., எனப்படும், ஆய்வுப் படிப்பு, 2021 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, 'நெட்' எனப்படும் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, முதுகலை பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.பிஎச்.டி., எனப்படும் ஆய்வுப் படிப்பு முடித்தவர்களுக்கு, 'நெட்' தேர்வு தேவையில்லை.ஆனால், உயர்கல்வி தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, உதவிப் பேராசிரியர் பணிக்கான, கல்வித் தகுதியையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஏழாவது ஊதியக்குழு தலைவர், வி.எஸ்.சவுகான்,'பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியாக, பிஎச்.டி.,யை நிர்ணயிக்கலாம்' என, தன் பரிந்துரையில் கூறியிருந்தார்.இதையடுத்து, 2021ம் ஆண்டு முதல், உதவிப் பேராசிரியர் பணிக்கு, எனப்படும் ஆய்வுப்படிப்பை, கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.
இனி, 'பறந்துகிட்டே' பேசலாம் : 'டிராய்' அமைப்பு பரிந்துரை

Added : மே 01, 2018 23:57

புதுடில்லி; 'டிராய்' எனப்படும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாடு ஆணையம், விமானத்தில் பறந்தபடி, இன்டர்நெட் பயன்படுத்தவும், போனில் பேசவும் அனுமதிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.தொலைதொடர்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய வான்வெளியில், விமானங்களில் பயணம் செய்வோர், விமானம், 3,000 மீட்டர் உயரத்தை எட்டியபின், இன்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம் என்றும், மொபைல் போனில் பேசலாம் என்றும், டிராய் பரிந்துரைத்துள்ளது.இந்த பரிந்துரைகளுக்கு, தொலைதொடர்பு கமிஷன், நேற்று ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, விமான பயணத்தின்போது, இன்டர்நெட், போன் சேவை பயன்படுத்த அனுமதிக்கும் திட்டம், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில், அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமானம் புறப்பட்டு, ஐந்து நிமிடங்களில், 3,000 மீட்டர் உயரத்தை எட்டும். எனவே, விமான பயணியர், விமானம் புறப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு பின், இன்டர்நெட், போன் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் எனத் தெரிகிறது. இதற்கு தேவையான சட்ட திருத்தங்களை இயற்ற, தொலைதொடர்புத் துறை நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, May 1, 2018

கடலைப் பொட்டலம்- இனி சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இல்லை
 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தமது பயணிகளுக்குக் கடலைகளைச் சிற்றுண்டியாக வழங்கும் நடைமுறையை நிறுத்திக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த குழந்தை ஒன்றுக்கு, கடலையால் ஒவ்வாமைப் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக, அந்தக் குழந்தை வாந்தி எடுக்கத் தொடங்கியதாகவும், அதன் கண்கள் வீங்கியதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதனையடுத்து, அந்தச் சம்பவம் குறித்துப் பரிசீலித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளுக்குக் கடலைகளை சிற்றுண்டியாக வழங்கும் நடைமுறையை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தது.

NEWS TODAY 19.04.2026