Wednesday, May 2, 2018

வேலூர், திருத்தணியில் வறுத்தெடுத்தது வெயில்

Added : மே 01, 2018 22:46



தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மற்றும் திருத்தணியில், நேற்று, 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இன்று, ஒன்பது மாவட்டங்களில், வெயில் வறுத்தெடுக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அனல் பறக்கிறது. சென்னை, கடலுார், புதுச்சேரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில், பகலில் வெயில் கொளுத்தினாலும், மாலையில் கடற்காற்று வீசுவதால், வெப்பம் ஓரளவு தணிகிறது. இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,

 'வேலுார், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலுார், மதுரை ஆகிய, ஒன்பது உள்மாவட்டங்களில், இன்று இயல்பைவிட, 4 டிகிரி அதிகமாகி, 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். அதேநேரத்தில், மாநிலத்தின் சில பகுதிகளில், வெப்ப சலன மழைக்கும் வாய்ப்புள்ளது' என்றனர். வேலுாரில் கொதிப்பு கோடை வெயில் நேற்றும் சுட்டெரித்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் அனல் பறந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மற்றும் திருத்தணியில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. கரூரில், 41.5; திருச்சி, 40.2; மதுரை, 40; சென்னை விமானநிலையம், 39.2; கடலுார், நாகை, 38; பரங்கிப்பேட்டை, 37 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. குறைந்தபட்சமாக, வால்பாறை, 28.5; ஊட்டி, 24.8; கொடைக்கானல், 21.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இடி முழங்கும் சென்னை : 'சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் பாதியளவு மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்சம், 28 டிகிரி; அதிகபட்சம், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும். மாலை மற்றும் இரவு நேரங்களில், இடி, மின்னலை ஏற்படுத்தும் அளவுக்கு, மேக கூட்டங்கள் உருவாகும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் மழை : கோடை வெயில் கொளுத்தும் நிலையில், நேற்று முன்தினம், கொங்கு மண்டலத்தில் மழை கொட்டியது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கோபிசெட்டி பாளையத்தில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. சேலம், 7; பவானி, 6; பெருந்துறை, திருப்பூர், உதகமண்டலம், கோவை அன்னுார், 5 செ.மீ., மழை பதிவானது. ஈரோடு உட்பட, மற்ற சில பகுதிகளில், 2 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...