Wednesday, May 2, 2018

ஓட்டுக்காக உங்களை தேடி வரவில்லை
கிராமத்தை தத்தெடுத்த கமல் பேச்சு 


02.05.2018

சென்னை,: ''ஓட்டுக்காக கிராமங்களை தேடி வரவில்லை,'' என, மக்கள் நீதி தலைவர் கமல் பேசினார்.



கிராம சபை கூட்டத்தை காணவும், தத்தெடுக்கப்பட்ட அதிகத்துார் கிராமத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்யவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், நேற்று அங்கு சென்றார்.

அதிகத்துார் கிராம மக்கள் மத்தியில், கமல் பேசியதாவது: இந்த கிராமத்தில் உள்ள, அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது, என் கடமை. அரசு செய்ய முடிந்ததை,

தனிக் கூட்டம் செய்ய முடியும் என்பதை காட்டப் போகிறோம். அதனால் தான், 12 ஆயிரத்து, 500 கிராமங்களையும் தத்தெடுக்கவில்லை; எட்டு கிராமங்களை மட்டுமே தத்தெடுத்துள்ளோம்.

உங்கள் உதவி இருந்தால், 12 ஆயிரத்து, 500 கிராமங்களிலும் பொறுப்பேற்கும் நாளும் வரும். நான், இங்கே உடனே செய்யக்கூடியதை மட்டும் சொல்கிறேன். பள்ளிக் கூடத்திற்காக, மூன்று அறைகள் கட்டித் தரப்படும். கல்விக்கு நிகரான ஆரோக்கியத்திற்காக, 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பமாகும். கிராமத்தை பசுமையாக்க, மரம் நடும் பணிகள் நடக்க உள்ளன. உங்கள் திறமைகளை வளர்க்க, குறுகிய கால பயிற்சி முகாம் நடத்தப்படும்.

நீர் சேகரிக்க ஏதுவாக, சிறிய அணைகள், மடைகள் கட்டப்படும். குளம், ஏரி சீரமைக்கப்பட உள்ளது. இதுபோன்ற, 50க்கும் மேற்பட்ட விஷயங்கள் உள்ளன. எது முடியுமோ,

அதை நாங்கள் செய்வோம். செய்ய முடியாததை, உங்களுடன் கலந்தாலோசித்து செய்வோம். 'இதை செய்கிறோம்; ஓட்டு போடுங்கள்' என கேட்டு, நாங்கள் வரவில்லை. செய்யப் போகிறோம்; அவ்வளவு தான்.

இந்த மாதிரி, நிறைய கிராமங்களில் செய்ய ஆசை. மற்ற கிராமங்களுக்கு, எங்களை கொண்டு சேர்க்க வேண்டியது, உங்கள் கடமை. யாரோ ஒருவர் வருகிறார்; செய்து கொடுத்து விடுவார் என, நினைக்காதீர்கள். இதை நாம் செய்து, நாம் பாதுகாக்கிறோம். கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, நம் பொறுப்பு. இந்த விஷயத்தில், கவுரவம் பார்க்க வேண்டாம். கழிப்பறைகளை கட்டி முடித்ததும், நானே வந்து, சுத்தம் செய்வது எப்படி என, உங்களுக்கு சொல்லி தருவேன்.

நாம் அனைவரும், மனதிற்குள் கிராமத்தான் தான். வெளியே தான் நகரத்தார் போல் வேஷம் போடுவர். இது, நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். இங்கே நரிக்குறவர்கள், இருளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நீதி மையம் பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
 


No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...