Sunday, January 5, 2020

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்லி விழுந்த பாலை குடித்த தாய், மகள் மயக்கம்: உணவுப் பாதுகாப்புத் துறையினா் விசாரணை

By DIN | Published on : 04th January 2020 10:45 PM 

பால் வாங்கிய நெகிழிப் பையில் இறந்து கிடந்த பல்லி.

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாலகத்தில் வாங்கிய பாலில் பல்லி விழுந்து கிடந்ததை அறியாமல் குடித்த தாய், மகள் மயக்கமடைந்தனா். இதுதொடா்பாக பாலகத்தின் உரிமையாளரிடம் உணவுப் பாதுகாப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள நல்முக்கல் கீழ்சிவிரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மனைவி துா்காதேவி (25). இவரது மகள் ஹரிணி (2). குடும்ப நல அறுவைச் சிகிச்சைக்காக துா்காதேவி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

துா்காதேவியை அவரது தாய் பரமேஸ்வரி (42) உடனிருந்து கவனித்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தனியாரால் நடத்தப்படும் ஆவின் பாலகத்துக்குச் சென்று பரமேஸ்வரி பால் வாங்கினாா். அங்கு நெகிழிப் பையில் ஊற்றிக் கொடுத்த பாலை வாங்கிக்கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகள் துா்காதேவிக்கும், உடனிருந்த பேத்தி ஹரிணிக்கும் டம்ளரில் ஊற்றி கொடுத்தாா்.

இருவரும் குடித்த பிறகு, நெகிழிப் பையில் எஞ்சியிருந்த பாலை, பரமேஸ்வரி குடிக்க முயன்றாா். அப்போது, நெகிழிப் பையில் பல்லி இறந்து கிடந்தது கண்டு பரமேஸ்வரி அதிா்ச்சியடைந்தாா். இதனிடையே, பல்லி விழுந்த பாலை குடித்த துா்காதேவி, ஹரிணி இருவரும் மயக்கமடைந்தனா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த மருத்துவா்கள் விரைந்து வந்து, மயங்கி விழுந்த தாய், மகள் இருவருக்கும் தீவிர சிகிச்சையளித்தனா்.

இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சனிக்கிழமை காலை, மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலா் கதிா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், அந்த பாலகத்துக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் விசாரித்தனா். உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் வேணுகோபால் தலைமையிலான குழுவினரும் நேரில் வந்து ஆய்வு செய்தனா்.

மேலும், பால் மாதிரியை எடுத்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், அந்த கடைக்காரரை எச்சரித்ததுடன் கடையை சுகாதாரமாகப் பராமரிக்கவும், நெகிழிப் பையை பயன்படுத்தக் கூடாதெனவும் அறிவுறுத்திச் சென்றனா். பாலில் பல்லி விழுந்தது தொடா்பாக, உணவுப் பாதுகாப்புத் துறையினரும், விக்கிரவாண்டி காவல் நிலையத்தினருரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனு

By நமது நிருபர் | Published on : 05th January 2020 03:24 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு "ரிட்' மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தது.

நீட் தேர்வை கட்டாயமாக்கி, கடந்த 2017 மற்றும் 2018-இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை மத்திய அரசு 2016-இல் பிறப்பித்தது.

எனினும், தமிழகத்துக்கு அந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.

நிகழாண்டுக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடை   முறைகள் டங்கப்பட்டுள்ளன. இதற்கான கடைசி தேதி ஜனவரி 6 ஆகும்.இந்நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தமிழக சுகாதாரத் துறை சார்பில் புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 மற்றும் 2018-இல் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, மத்திய சுகாதார- குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்டவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் மனுவில், "நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டங்களில் முறையே 2017, 2018-ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. சமூகத்துக்கு மாநில அரசு செய்யும் கடமைகளைத் தடுக்கும் வகையில் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பள்ளித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நிலையிலும் நீட் தேர்வு காரணமாக அவர்களால் மருத்துவ சேர்க்கை பெற முடியவில்லை. இதனால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. ஆகவே, அந்த திருத்தங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனி மூட்டத்தால் விமானம் இறங்குவதில் சிக்கல்

Added : ஜன 04, 2020 21:51

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், 168 பயணியருடன் வந்த விமானம், திருச்சியில் தரையிறங்கியது.ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான, மடகாஸ்காவில் இருந்து புறப்பட்ட, 'ஏர் ஆஸ்ட்ரல்' விமானம், நேற்று அதிகாலையில், 168 பயணியருடன், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது.சென்னையில், கடும் பனிமூட்டம் நிலவியதால், அந்த விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிகளுடன் தொடர்பு கொண்டு, கடும் பனிமூட்டமாக இருப்பதால், திருச்சி விமான நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, அந்த விமானம், நேற்று காலை, 6:53 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.சென்னையில் பனிமூட்டம் விலகியதாக தகவல் கிடைத்தபின், காலை, 9:20 மணிக்கு, பயணியருடன் விமானம், சென்னைக்கு புறப்பட்டு வந்
மனநல வகுப்பில் மாணவர் சேர்க்கை அரசுக்கு ஐகோர்ட், 'நோட்டீஸ்'

Added : ஜன 04, 2020 23:41

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரி களில், மனநல மற்றும் உளவியல் வகுப்புகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் ரங்கநாயகி, தாக்கல் செய்த மனு:தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில், ஒரு லட்சம் பேருக்கு, ஒருவர் வீதம், மனநல சிகிச்சை நிபுணர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மனநல துறையில், நிபுணர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இந்த துறையில், அதிக நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.மருத்துவ கல்லுாரிகளில், மனநல கல்வியில் போதிய இடங்கள் இல்லை. குறைந்த எண்ணிக்கையில் தான், மாணவர்களை சேர்க்கின்றனர். சென்னை மருத்துவ கல்லுாரி தவிர்த்து, மற்ற கல்லுாரிகளில், இரண்டு முதல் நான்கு என்ற அளவில் தான் மாணவர்களை சேர்க்கின்றனர். சில மருத்துவ கல்லுாரிகளில், இந்தப் பாடமே இல்லை.மன அழுத்தம், மன உளைச்சலால், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு உள்ளது. குழந்தைகள், இளைஞர்களுக்கு, மனநல ஆரோக்கியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில், யோகா சேர்க்கப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், மனநல மற்றும் உளவியல் வகுப்புகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௬க்கு தள்ளி வைத்தனர்.
பிரசவத்தில் தாய், குழந்தை பலி அரசு டாக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஜன 05, 2020 00:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், குழந்தை பலியான சம்பவத்தில் பெண் டாக்டர் மணிமொழி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர் முருகேசன். வெளி நாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி கீர்த்திகா 22. இவர் டிச.27 இரவு பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 10:00 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது. அதன் பின், சில மணி நேரத்தில் கீர்த்திகாவும் இறந்தார்.கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கடாச்சலம் ஆகியோர் விசாரித்தனர். இதையடுத்து அப்போது பணியில் இருந்த டாக்டர் மணிமொழி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்

Added : ஜன 04, 2020 23:21

சென்னை: 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, வரும், 10ம் தேதி, விடுமுறை நாளாக இருந்தாலும், அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்' என, உணவு துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றுக்கு, மாதத்தின், முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்று கிழமை, வேலை நாள். அதற்கு மாற்றாக, அந்த வார வெள்ளி கிழமைகளில் விடுமுறை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, வரும், 10ம் தேதி, ெவள்ளிகிழமை, ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்தாலும், செயல்பட உள்ளன. இது குறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கும் பணி, வரும், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த கடைகளுக்கு, வரும், 10ம் தேதி, இரண்டாவது வெள்ளி என்பதால், வார விடுமுறை நாளாகும்.பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால், 10ம் தேதி, கடைகளுக்கு வேலை நாளாகவும்; அதற்கு பதில், இம்மாதம், 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
குறைந்த தூர, 'ஏசி' பஸ் அறிமுகம்

Added : ஜன 04, 2020 23:20

சென்னை: விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும், குறைந்த துார, 'ஏசி' பஸ்களுக்கு, முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல, புதுச்சேரி, திருப்பதி, காளஹஸ்தி, நெல்லுார், பெங்களூரு ஆகிய, பிற மாநில நகரங்களுக்கும், குறைந்த கட்டணத்தில், 52 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையிலிருந்து, சிதம்பரம், தர்மபுரி, ஓசூர், கும்பகோணம், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு, இந்த குறைந்த கட்டண, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களில், முக்கியமான, 266 வழித்தடங்களுக்கு மட்டும், முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. www.tnstc.in என்ற, அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளத்தின் வழியாகவும், முக்கிய தனியார் இணையதளங்களின் வழியாகவும் முன்பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

NEWS TODAY 26.01.2026