Friday, January 24, 2020

தொழில்நுட்ப கோளாறு சேலம் விமான சேவை ரத்து

Added : ஜன 23, 2020 22:59

ஓமலுார், மூன்றாவது நாளாக விமான சேவை ரத்தானதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.சேலம் விமான நிலையத்தில் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் சேலம்-சென்னை சென்னை-சேலம் பயணிகள் விமான சேவையை ட்ரூ ஜெட் நிறுவனம் இயக்கி வருகிறது. தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பலர் அதிகமாக விமானத்தில் பயணிக்கின்றனர். கடந்த 21ல் சென்னையில் தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை ரத்தானது.இதனால் சேலத்தில் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோளாறு சரியாகாததால் நேற்று மூன்றாவது நாளாக விமான சேவை ரத்தானது. விமானத்தின் உதிரி பாகம் வெளிநாடுகளிலிருந்து வரப்பெற்று சரி செய்யும் பணி நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.வரும் 26ல் குடியரசு தினம் என்பதால் பாதுகாப்பு காரணமாக சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ஜன.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்தானதால் விமான நிலையம் வெறிச்சோடிக்கிடக்கிறது.
'சிம் கார்டு' கடைகளில் போலீசார் சோதனை

Added : ஜன 24, 2020 00:52

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொபைல் போன், 'சிம் கார்டு' முறையாக ஆவணங்கள் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா என, கடைகளில், போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.காஞ்சிபுரத்தில், கடந்த மாதம், பச்சையப்பன் என்பவரிடம், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், சிம் கார்டு வாங்கி சென்றார். அவர், உரிய ஆவணங்கள் இல்லாமல், அதை பிறருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாக, 'கியூ' பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, சிம் கார்டு விற்பனை செய்யும் கடைகளை, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் சிம் கார்டு விற்பனை செய்யும் கடைகளில், போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.'உரிய ஆவணங்கள் இன்றி சிம் கார்டுகள் விற்பனை செய்யக் கூடாது' என, கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இரண்டு மாதத்தில் 2,000 புதிய பஸ்கள்

Added : ஜன 24, 2020 01:11

சென்னை :'தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 2,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 5,000 புதிய பஸ்கள் வாங்கும் வகையில், 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் நடந்தன. ஓராண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு, 3,000 பஸ்கள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள, 2,000 பஸ்களை, மார்ச் மாதத்துக்குள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் வகையில், கூண்டு கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும், இந்த ஆண்டுக்குள், 525 மின்சார பஸ்களை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
***
500 மருத்துவமனைகளுக்கு ஓரிரு வாரத்தில் பதிவு உரிமம்

Added : ஜன 23, 2020 21:40


சென்னை, 'சென்னையில், முதற்கட்டமாக, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு, ஓரிரு வாரங்களில் பதிவு உரிமம் வழங்கப்படும்' என, மருத்துவ சேவை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும், பதிவு உரிமம் பெறுவது கட்டாயம்.

அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பதிவை புதுப்பிக்க வேண்டும். இதுவரை பதிவு உரிமம் கோரி, 36 ஆயிரத்து, 598 மருத்துவமனைகள் விண்ணப்பித்துள்ளன.சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விண்ணப்பித்துள்ளன. அந்த மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை, சுகாதார சேவைகள் இயக்குனரகஅதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

'சென்னையில், முதற்கட்டமாக, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு, ஓரிரு வாரங்களில் பதிவு உரிமம் வழங்கப்படும்.மேலும், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்படும்' என, மருத்துவ சேவைகள் இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று தை அமாவாசை : புனித நீராட குவியும் பக்தர்கள்

Updated : ஜன 24, 2020 08:05 | Added : ஜன 24, 2020 08:04

புதுடில்லி : இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஈரோடு பவானி கூடுதுறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கும் தர்பணம் அளித்து, வழிபட்டு வருகின்றனர்.

உ.பி.,யில் புகழ்பெற்ற வாரணாசியில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடி, வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ரூ.1.5 கோடி அபராதம் வசூல்; டிக்கெட் பரிசோதகர் சாதனை

Updated : ஜன 24, 2020 03:17 | Added : ஜன 24, 2020 03:16




மும்பை: கடந்த, 2019ம் ஆண்டில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலித்துள்ளார்.

மத்திய ரயில்வேயின், பறக்கும் படையில் வேலை பார்க்கும், டிக்கெட் பரிசோதகர், எஸ்.பி.கலாண்டே என்பவர், 2019ம் ஆண்டில், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 22 ஆயிரத்து 680 பயணியரிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்திருக்கிறார். அவருடன், மேலும், மூன்று டிக்கெட் பரிசோதகர்களும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், அபராதம் வசூலித்துள்ளனர்.




எம்.எம்.ஷிண்டே, 1.07 கோடி ரூபாயும், டி.குமார், 1.02 கோடி ரூபாயும், ரவிகுமார், 1.45 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பை பாராட்டி, ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 2019ல், டிக்கெட்இல்லாமல், பயணம் செய்தவர்களிடம், 192.51 கோடி ரூபாயை, மத்திய ரயில்வே, அபராதமாக வசூலித்துள்ளது.

1,000 போலி வக்கீல்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி முதல்வர் கைது

Updated : ஜன 24, 2020 02:44 | Added : ஜன 24, 2020 02:36

சென்னை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாக காரணமாக இருந்த, ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லுாரி முதல்வரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சங்கத்தின் செயலர் ராஜா குமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: வில்லிவாக்கம், ராஜாஜி நகர் வேகவதி தெருவைச் சேர்ந்தவர் விபின், 59; ரயில்வே ஊழியர். இவர், ரயில்வே துறையில் பணிபுரிந்தபடி, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரியில், 2015 - 18ம் ஆண்டு வரை, எல்.எல்.பி., படித்துள்ளார்.

சட்டக் கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு, குறைந்தபட்சம், 70 சதவீதம் வருகை பதிவேடு கட்டாயம். விபின் ரயில்வே துறையில் பணியாற்றி வந்ததால், கல்லுாரிக்கு செல்ல முடியவில்லை.ஆனால், கல்லுாரிக்கு சென்றது போல், போலியாக வருகை பதிவேடு சான்றிதழ் பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார்.இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தார்; அதை நிராகரித்து விட்டோம்.

இதனால், விபின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோருக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். 2017ல், ரயில்வே துறையில் இருந்து விருப்ப ஓய்வும் பெற்றுள்ளார். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரித்து, விபின் மற்றும் உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

பின், இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி குறித்து, கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார், 54, என்பவர், கல்லுாரிக்கே வராத, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, 80 சதவீதம் கல்லுாரிக்கு வருகை தந்தது போல பதிவேடு தயார் செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.

இவர் வழங்கிய சான்றிதழ் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹிமவந்த குமாரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், போலி சான்றிதழ்கள் வாயிலாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

NEWS TODAY 29.01.2026