Thursday, November 6, 2014

இந்த நாள் என்னுடைய நாள்...கண் கலங்கவைத்த கண்ணதாசன்!

ல்யாணம் ஆகி பத்துவருஷத்துல மனைவி உடம்பு சரியில்லாம தவறிட்டாள், ஒரு பெண் பிள்ளை, இரண்டு ஆண் குழந்தை. சொந்தக்காரங்க வற்புறுத்தலால பிள்ளைகளை பராமரிக்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  அவளுக்கும் ஒரு பெண் குழந்தை... அஞ்சாங் கிளாஸ் வரை நாமதான் படிக்காம இப்படி வயல்லகிடந்து கஷ்டப்படுறோம்.  பிள்ளைகளையாவது நல்லா படிக்க வைக்கணும்னு  கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களையெல்லாம் வித்து காலேஜ் சேர்த்தேன்.....ஆனா...?"-  ராஜாவின் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் துயரத்தோடு சரிந்துவிழுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான ராஜா தன்னுடைய மூத்த மகன் கண்ணதாசனை அவனது விருப்பபடியே டாக்டராக்கிவிட வேண்டுமென்று நினைத்த அற்புதமான அப்பா. அதிர்ஷ்டவசமாக அர்மோனியா நாட்டில் உள்ள எரேவன் மருத்துவக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.'மகன் டாக்டராகி ஸ்டெதஸ்கோப்போடு வருவான்!' என்று கனவுகளை நிரப்பி வைத்திருந்த ராஜா, மகன் சவப்பெட்டியில் வீடு வந்து சேர்ந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகவில்லை.

என்ன நடந்தது....? தொண்டையை செருமிக்கொண்டு பேசுகிறார் ராஜா. ‘‘பிள்ளைங்க எதிர்காலம் நம்மைப்போல இருக்கக்கூடாதுன்னு 4  பிள்ளைகளையும் தனியார் பள்ளியில சேர்த்தேன். அந்த செலவுகளை என்னால சமாளிக்க முடியாம கொஞ்ச கொஞ்சமா என் பெயரில் இருந்த நிலங்களை வித்துதான் படிக்கவச்சேன். மூத்த மகன் கண்ணதாசனுக்கு படிப்புனா உசுரு. தன்னோட அம்மா சின்ன வயசிலேயே உடம்பு சரியில்லாம இறந்ததால தான் டாக்டராகி ஏழைமக்களுக்கு இலவசமா சிகிச்சையளிக்கணும்னு அடிக்கடி சொல்வான்.
அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சான். ஆனாலும்  மார்க் குறைஞ்சதால தமிழ்நாட்ல மெடிக்கல் சீட் கிடைக்கல, அப்பதான் அர்மோனியா நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைச்சது. முடிந்தவரை செலவு செய்வோம். பத்தாததுக்கு கல்விக்கடன் வாங்கி சமாளிச்சிடலாம்னு  முடிவு செய்து அவனுடைய முதல் வருடம் கல்லூரி கட்டணம் மற்றும் விசா, தங்குவதற்கான செலவுகள்னு கிட்டத்தட்ட 7 லட்சரூபாயை  கடைசியாக இருந்த நிலங்களையும் விற்று செலவு செய்தேன்.
பையனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு போச்சம்பள்ளியில இருக்கிற இந்தியன் வங்கியில லோன் கேட்க போனா, அப்ளிகேஷன் கூட அவங்க தரலை. ரொம்ப இழுத்தடிச்சாங்க.  இதை அறிந்த நண்பர்கள் சிலர் “நீ இப்படியே அலைஞ்சுகிட்டு இருந்தா இவுங்கள்ட்ட லோன் வாங்க முடியாது நீதிமன்றத்துல ஒரு கேஸை போடு அப்பதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க.  சென்னை உயர் நீதி மன்றத்துல வழக்கு போட்டு 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கலாம்னு ஒரு தீர்ப்பும் வாங்கினேன். ஆனால் நான் கேஸ்போட்டதால வங்கி அதிகாரிகள் என் மேல கோபம் ஆகிட்டாங்க.

தீர்ப்புப்படி அப்ளிகேஷன் தரக்கூட ரொம்ப தாமதிச்சாங்க. அப்புறம் லோன் கிடைக்க இதெல்லாம் கொண்டுவாங்கனு ஒரு பட்டியல் கொடுத்தார் மேனேஜர். அதில் ரத்தசொந்தங்களில் சிலரிடமிருந்த  ஷ்யூரிட்டி தவிர மற்ற எல்லாவற்றையும் தயார் செய்தேன். பரவாயில்லைன்னு முதல்ல அப்ளிகேஷனை வாங்கின மேனேஜர், ஒருமாதம் கழித்து அதையே காரணம் காட்டி  திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

இதற்கிடையில் என் மகன் முதல்வருடத்தை முடிச்சிட்டான்.  இரண்டாவது ஆண்டிற்கான கட்டணம் கட்ட வேண்டிய சூழல், என்னால் முடியவில்லை.  அவனது சூழலை புரிந்துகொண்டு அவனது சக நண்பர்கள் சேர்ந்து கட்டணம் முழுவதையும் கட்டிவிட்டார்கள். மற்ற செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என் சம்பாத்யத்திலிருந்து அனுப்பினேன். இதற்கிடையில் ரத்த சொந்தத்தில் ஷ்யூரிட்டி கொடுக்க ஆள் இல்லை என்பதால் என் நண்பர் ஒருவர் தருவதை மேனேஜரிடம் சொன்ன போது முதலில் சம்மதித்தார்.  எனது வீடு, என் நண்பரது சொத்து என  ஷ்யூரிட்டி கொடுத்தோம்.  இதோ.. அதோ.. என இழுத்தடித்தார்களே தவிர லோன் கிடைக்கவில்லை. அதற்குள் பழைய மேனேஜர் அனந்தராமன் என்பவர் மாற்றலாகி,  புதியதாக சீனிவாசன் என்பவர் பொறுப்பேற்றார். மீண்டும் பழைய பல்லவி.

இதற்கிடையில் மூன்றாவது ஆண்டு தொடங்கியும் பணம் கட்ட முடியவில்லை, வங்கியிலிருந்து கடன் பெற முடியாது என்பதை உணர ஆரம்பித்தேன்.  இடையில் இதையெல்லாம் சிந்தித்து கண்ணதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. கடைசியில் பணம் கிடைக்கவில்லையென்ற தகவலை அவனிடம் சொன்னபோது நான் இந்தியா திரும்பி வந்துடுறேம்ப்பானு சொன்னான், நானும் என்னென்னவோ முயற்சி பண்ணியும் முடியலை, கூடிய சீக்கிரம் லோன் வந்துடும்னு அவுங்க சொல்றதுக்கே மூன்று வருஷம் ஆகிடுச்சி.

எப்படியும் பணம் புரட்டிடலாம்னு நம்பிக்கையா இருந்த ஒரு நாள் ராத்திரி  “உங்க பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான்” னு போன்ல தகவல் வந்துடுச்சி. என கண்ணீரை துடைத்தபடி பேசினார். வங்கிக்கடன் தருவதா சொல்லி, தேவையில்லாம அதை இழுத்தடிச்சி ,அநியாயமா என மகன் உயிரை பறிச்சிடுச்சி அந்த வங்கி.  எப்படியோ என் பையன் தியாகியா இருந்துட்டு போறான். ஆனா இது மாதிரி இன்னொரு மாணவன் பாதிக்கப்படக்கூடாது" என்று அழுத்தமாக சொல்கிறார் ராஜா.
சொந்த ஊருக்கு வந்த கண்ணதாசனின் உடலுக்கு ஊர் மக்கள் அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள். தனது மகனின் படிப்புக்காக இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டார் ராஜா.  வங்கிக்கடன் கிடைக்காததால் உயிரையும் விட்டுவிட்டார் கண்ணதாசன். வங்கி தரப்பில் அவர் நாங்கள் கேட்டத்தொகைக்கு ஷ்யூரிட்டி தரவில்லையென்று காரணம் சொல்லப்படுகிறது. எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என கோஷமிடும் இந்தியாவில் அதன் கீழ் இயங்கும் ஒரு வங்கி ஒரு இளைஞனுக்கு தன் கோர முகத்தை காட்டி கொன்றிருக்கிறது.

“படிப்பதற்கு உனக்கு உரிமை இல்லை’ என்று ஒருநாள் தனது டைரியில் எழுதிய கண்ணதாசன், இன்னொரு நாள் ஏதோ ஒரு நம்பிக்கையில் “இந்த நாள் என்னுடைய நாள். இந்த யுனிவர்சிட்டியிலிருந்து செல்லும்போது டாக்டர் பட்டத்துடன்தான் செல்வேன்“ என்று எழுதியிருக்கிறார். கடைசி வரை வங்கியின் மீது நம்பிக்கை வைத்து கடைசியில் அந்த நம்பிக்கைக்கு தன் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார் கண்ணதாசன்.

லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் நம்பி இருக்கும் கல்விக்கடனை விதிமுறைகளை சொல்லி மறுப்பது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும். சொத்தை அளவிட்டு கல்விக் கடன் வழங்காமல் மாணவனின் திறனை அளவிட்டு கல்விக்கடன் தரப்பட வேண்டும் என்பதை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் கண்ணதாசன். அதற்கு அவன் கொடுத்த விலை அவனது உயிர்.

எம்.புண்ணியமூர்த்தி
படங்கள் : வி.சதீஸ்குமார்

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...