Wednesday, August 9, 2017

தலையங்கம்
வரதட்சணை வழக்கில் தீவிர விசாரணை




ஆகஸ்ட் 09 2017, 03:00 AM

சமுதாயத்தில் களையப்படவேண்டிய ஒன்று ‘வரதட்சணை கொடுமை’ என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆண்டாண்டு காலமாக பல சமுதாய சீர்திருத்த தலைவர்கள் இந்த கருத்தைத்தான் வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். தந்தை பெரியார் இதில் மிகத்தீவிரமாக இருந்தார். எவ்வளவோ தலைவர்கள் இதற்காக முயற்சி எடுத்தும் வரதட்சணை என்ற களையை இன்னமும் முழுமையாக அகற்றமுடியவில்லை. எவ்வளவுதான் நற்குணங்கள் இருந்தாலும், படித்திருந்தாலும் திருமணம் என்று வந்துவிட்டால், மாப்பிள்ளை வீட்டார் உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகைகள் போடுகிறீர்கள், எவ்வளவு ரொக்கம் தருவீர்கள், என்ன சொத்து எழுதிவைப்பீர்கள் என்பதுபோன்ற பல பேரங்களை பேசுவது சமுதாயத்தில் ஏழை முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து மட்டங்களிலும் இன்னும் நிலவிவருகிறது. திருமணம் முடிந்தபிறகு கேட்ட வரதட்சணையை தரவில்லை என்ற ஆத்திரத்தில் பல மணப்பெண்கள் அடித்து விரட்டப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகிறார்கள், தற்கொலை செய்யும் அளவுக்கும் தூண்டப்படுகின்றனர். இத்தகைய கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.

ஆனால், இப்போதெல்லாம் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டால், உடனடியாக இந்திய தண்டணைச் சட்டம் 498ஏ–ஐ பயன்படுத்தி, அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியார், கணவனுடன் உடன் பிறந்தோர், ஏன் சில நேரங்களில் தாத்தா, பாட்டி மற்றும் மைனர் குழந்தைகள் எல்லோரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமை இருக்கிறது. எல்லோருமே தவறு செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒருசில நேரங்களில் இந்த வரதட்சணைக் கொடுமை என்ற ஆயுதத்தை தவறாக பயன்படுத்துவதால், ஒருசில பெண்கள் தங்கள் கணவனையும், மாமனாரையும், மாமியாரையும், வேறு சில குடும்ப பிரச்சினைகளுக்காக பழிவாங்கவேண்டும் என்ற நோக்கில் தவறாக புகார் கொடுத்துவிடுவதால், அப்பாவிகளான கணவனின் குடும்பத்தினரும் சிறையில் வாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவரையில், போலீஸ் நிலையத்தின் வாசலுக்குச் சென்றிருக்காதவர்கள், ஜெயில்வாசல் என்னவென்றே தெரியாதவர்கள், இந்த புகாரில் ஜெயிலில் அடைக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சலும், சொல்லொணத் துயரத்தையும் அடைகின்றனர். தொடர்ந்து நீண்டநெடுங்காலமாக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறி இறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற ஒரு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர், இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு சிறையில் அடைப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்கள், அதிகாரிகளின் மனைவிகள், சட்டப்பூர்வமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பநல குழுவை மாவட்ட சட்டபணி ஆணைக்குழு அமைக்க வேண்டும். ஏதாவது வரதட்சணை புகார்கள் வந்தால் ஒருமாதத்திற்குள் இந்தக்குழு விசாரித்து, அந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா?, இல்லையா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்யக்கூடாது. அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால்தான் போலீஸ் அதிகாரிகள் புலன் விசாரணை செய்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். உண்மையிலேயே இந்த தீர்ப்பு வரவேற்கத்தகுந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய குடும்பநல குழுக்களை தமிழக அரசு அமைத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வரதட்சணை கொடுமை புகார் செய்யப்பட்டால், உடனடியாக இந்த குழுவுக்கு அனுப்புவதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்கவேண்டும். நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படவேண்டும். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...