Wednesday, August 23, 2017

வீட்டின் விலை வெறும் 'ரூ.36 ஆயிரம்'
பதிவு செய்த நாள்23ஆக
2017
00:11

கோவை : 'புது வீடு தேவைப்படுவோர், 36 ஆயிரம் ரூபாய், ஆவணங்களுடன் வரவும்' என்று குடிசைமாற்று வாரியம் சார்பில் வெளியான அறிவிப்பால், கோவை சி.எம்.சி.,காலனி மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

கோவை வெரைட்டிஹால் ரோட்டில் இருக்கிறது சி.எம்.சி., காலனி. இங்குள்ள, 412 அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் வீடு கிடைக்காத சுமார், நுாற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள சிட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து, குடிசைகள் அமைத்து குடும்பத்துடன் வசிக்கின்றனர்.நீர்வழியோரங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும், குடிசைகளில் வசிப்போருக்கும், அம்மன்குளம், கணபதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தந்துள்ள மாநகராட்சி, சி.எம்.சி., காலனி மக்களுக்கும், வெள்ளலுாரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளது.இந்நிலையில், 'தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, வரும்24ம் தேதி (நாளை) காலை 10:00 மணிக்கு, குலுக்கல் நடைபெறப் போவதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும், 36 ஆயிரம் ரூபாய் சகிதம், செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு வருமாறும்', சாதாரண காகிதத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குடிசை மாற்று வாரியம்.

சாதாரண தாளில் எழுதி, ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, யாரோ ஒரு சிறுவன் வாயிலாக வினியோகிக்கப்பட்ட இந்த அறிவிப்பை, இந்த பகுதி மக்கள் நம்பத்தயாராக இல்லை. அதே நேரம் வாய்ப்பை விடவும் மனதில்லை.இது குறித்து விசாரித்து, உண்மையை கண்டறிய கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ''வெள்ளலுார் பகுதி பள்ளிகளில் குழந்தைகளை மாற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இவர்களில் சிலர் மட்டுமே துப்புரவு பணியாளர்கள். தினமும் அதிகாலையில், இவர்களை பணிக்கு அழைத்து செல்ல, மாநகராட்சி வாகன வசதி செய்து தர வேண்டும். நியாயமான இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, ''குடிசை மாற்று வாரியம் சார்பில், அப்படி எந்தவொரு அறிவிப்பும் சாதாரண தாளில் அனுப்பவில்லை. ஏதோ அரசியல்கட்சியினர் போலியாக அனுப்பி ஏமாற்றியுள்ளனர்.தொகுதி எம்.எல்.ஏ.,வும் மறுத்துள்ளார். 

எப்படியிருந்தாலும், இப்போது ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துள்ள அப்பகுதி மக்களில், 60 பேர் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு, வெள்ளலுாரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளில் குடியமர்த்தப்படுவர்,'' என்றார்.ஸ்மார்ட் சிட்டி ஆக, அடுத்த சில ஆண்டுகளில் கோவை மாறும்போது, வெள்ளை வேட்டியில் கரும்புள்ளியாக, அழகிய நகரின் நடுவே காட்சியளிக்கப் போகிறது அசிங்கமான சி.எம்.சி., காலனி. ஆகவே, புது வீட்டில் குடியேற மறுக்கும் இப்பகுதிவாசிகளின், சிறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒன்றே, இப்போதைக்கு மாநகராட்சி எடுக்கும் 'ஸ்மார்ட்' ஆன முடிவாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...