Saturday, August 26, 2017

பதவி விலகுவதால் ஆயிற்றா?

By ஆசிரியர்  |   Published on : 26th August 2017 01:17 AM  |    
ஒரு வாரத்திற்கு முன்பு தடம் புரண்ட புரியிலிருந்து ஹரித்வார் செல்லும் உத்கல் விரைவு ரயிலைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த முறை விபத்துக்குள்ளானது கைஃபியாத் விரைவு ரயில். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் ஆஸம்கர் நகரிலிருந்து தில்லி நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது அச்சல்டா ரயில் நிலையத்தில் விபத்து நேர்ந்தது. 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 100 பயணிகள் காயமடைந்தனர். 
ரயில்வே கட்டுமானப் பொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து நின்றிருக்கிறது. இது நிச்சயமாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது. அப்படியிருந்தும் அவர்கள் கவனக்குறைவாக கைஃபியாத் விரைவு ரயில் கடந்து செல்வதற்கு அனுமதித்தார்கள் என்று சொன்னால், அதை விபத்து என்று எப்படிக் கூறுவது?
தொடர்ந்து நடைபெற்ற இரண்டு விபத்துகளின் விளைவாக ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் பதவி விலகியிருக்கிறார். ரயில்வே நிர்வாகத்தில் அடிமட்டத்திலிருந்து தனது கடின உழைப்பால் முன்னேறி ரயில்வே வாரியத்தின் தலைவரானவர் ஏ.கே. மிட்டல். இவருக்குப் பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அடிமட்ட ஊழியர்களின் தவறுக்காக ஏ.கே. மிட்டல் அதிரடியாக பதவி விலகியிருக்க வேண்டாம். 
நீதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா பதவி விலகியதைப் போல அல்ல, மிட்டலின் பதவி விலகல். ரயில்வே என்பது தொழில்நுட்பமும் நிர்வாகத் திறமையும் ஒருசேர தேவைப்படும் துறை. தொழில்நுட்பத்துடன் அதிநவீன ரயில்கள் இயக்கப்பட்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாக இயக்குவதற்குத் தேவையான மனிதவளமும் வேண்டும். அதனால் அடிமட்டத்திலிருந்து தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கும் மிட்டல் போன்ற அனுபவசாலிகள் ரயில் விபத்துக்காக தார்மிகப் பொறுப்பேற்று விலகியிருப்பது அர்த்தமற்றது என்றுதான் தோன்றுகிறது.
ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் மட்டுமல்ல, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் தனது பதவி விலகல் கடிதத்தைப் பிரதமரிடம் அளித்திருக்கிறார். பிரதமர் இன்னும் அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, அமைச்சர் சுரேஷ் பிரபுவின் பதவி விலகலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதுதான் உண்மை.
அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் தனது பதவியைத் துறந்த முதல் மத்திய அமைச்சர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவருக்குப் பிறகு மாதவ ராவ் சிந்தியா, நிதீஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோரும்கூட அவர்கள் ரயில்வே துறையின் அமைச்சர்களாக இருந்தபோது நடந்த ரயில் விபத்துகளின் பின்னணியில் பதவி விலக முன்வந்தனர். ஆனால் அன்றைய பிரதமர்கள் அவர்களது பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. 
ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபுவின் செயல்பாடு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்திய ரயில்வே நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டியவர் அவர். 
ஓரளவுக்கு ரயில்களின் பராமரிப்பிலும் பயணிகள் ரயிலின் சுத்தத்திலும் அவர் அக்கறை காட்டியதை மறுக்க முடியாது. அவரது ரயில் கட்டணக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றாலும்கூட, ரயில் முன்பதிவு குறித்து செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் நிச்சயமாக வரவேற்புக்குரியவை.
இந்திய ரயில்வே மிகவும் சோதனையான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே துறையின் நவீனமயமாக்கலுக்கு ஏற்றாற்போல ரயில் ஊழியர்களின் பொறுப்புணர்வு அதிகரித்திருப்பதாகத் தெரியவில்லை. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை 28 பெரிய ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன. 259 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 973 பேர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் 2016-17 நிதியாண்டில்தான் ரயில் தடம் புரண்டதால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த புள்ளிவிவரம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11, 2017-இல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 
பதவி வகிக்கும் ஒவ்வொரு ரயில்வே துறை அமைச்சரும் பயணிகளின் பாதுகாப்புதான் தங்களது முதல் குறிக்கோள் என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழங்கி வருகிறார்களே தவிர, செயல்பாடு என்னவோ அதற்கு நேர் எதிர்மாறாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை.
ரயில் மோதல் தடுப்புக் கருவிகள் அமைப்பது என்கின்ற நீண்டகால தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் இன்னும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. பழைய ரயில் இன்ஜின்கள், பயணிகள் செல்லும் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் ஆகியவை மாற்றப்படாமல் இருக்கின்றன. வழிகாட்டுதல் கருவிகள் (சிக்னல்கள்) இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை. இந்தியாவிலுள்ள 40% தண்டவாளங்கள் மிகவும் பழைமையானவை. சில 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. இவை உடனடியாக மாற்றப்பட்டாக வேண்டும், அல்லது செப்பனிடப்பட வேண்டும். அதற்கெல்லாம் மிகப்பெரிய நிதியாதாரம் தேவைப்படுகிறது.
இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது அமைச்சரும் வாரியத் தலைவரும் பதவி விலகுவதால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 590 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...