தமிழகத்தில் அதிகமாகும் திரையரங்குகள்: உலக அளவில் மலைக்க வைக்கும் 'விவேகம்' வியாபாரம்
‘விவேகம்’ படத்தில் அஜித்
தமிழகத்தில் 700-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது 'விவேகம்'. அதே போன்று உலக அளவில் படத்தின் வியாபாரம் மலைக்க வைப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 24) வெளியாகும் படம் 'விவேகம்'. இப்படத்துக்கு திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முதல் வாரத்துக்கான டிக்கெட்களில் சுமார் 80% வரை விற்றுத் தீர்ந்துவிட்டன.
சென்னையில் முக்கியமான திரையரங்கமான மாயாஜால் திரையரங்கில் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 330 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக டிக்கெட் முன்பதிவில் 75% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அனைத்துக் காட்சிகளின் டிக்கெட் விற்பனையும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 2 முதல் 3 திரையரங்குகள் வரை 'விவேகம்' திரையிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் முதலில் 700 வரை திரையரங்குகள் ஒப்பந்தமிருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. தற்போது 720 திரையரங்குகளைத் தாண்டி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித் நடிப்பில் தயாரான படங்களில், பெரும் பொருட்செலவில் 'விவேகம்' தயாராகி இருப்பதால் திரையரங்குகள் ஒப்பந்தம் மற்றும் டிக்கெட் முன்பதிவால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது.
உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அனைத்தையும் சேர்ந்து சுமார் 2,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில் உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் 'விவேகம்' என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது.
மேலும், படத்தின் பொருட்செலவிற்கு தகுந்தாற் போன்று தயாரிப்பு நிறுவனமும் வியாரம் செய்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி உரிமை, இசை உரிமை, தமிழக விநியோக உரிமை, கேரள உரிமை, கர்நாடக உரிமை, தெலுங்கு உரிமை மற்றும் உலக நாடுகளின் உரிமை ஆகியவற்றின் மூலம் சுமார் 120 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக திரையுலகினர் தெரிவித்தார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்தின் குடும்பத்தினர், தயாரிப்பாளர் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் மட்டும் சென்னையில் உள்ள NFDC திரையரங்கில் 'விவேகம்' படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்தவுடன் இயக்குநர் சிவாவை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment