Tuesday, September 5, 2017

'ப்ளூ வேல்' விளையாட்டை பரப்பினால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
பதிவு செய்த நாள்05செப்
2017
01:09


மதுரை: 'ப்ளூ வேல் விளையாட்டை, பிறருக்கு பகிர்வோர் மற்றும் உதவி செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக உள்துறை முதன்மை செயலர் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில், 'ப்ளூ வேல்' விளையாட்டால், கல்லுாரி மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்தார். 

இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:

மதுரையில் மாணவர் விக்னேஷ், அலைபேசியில், ப்ளூ வேல் விளையாடியதால் தற்கொலை செய்ததாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

கண்காணிப்பு அவசியம்

ரஷ்யாவில் துவங்கிய இந்த விளையாட்டில், 50 ஆபத்தான கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். இறுதியாக தற்கொலை செய்ய வேண்டும் என்பதில் முடிகிறது.

ப்ளூ வேல் நிர்வாகி, அந்த விளையாட்டை விளையாடுபவர்களை மன ரீதியாக கட்டுப்படுத்துவதால், தற்கொலையில் முடிவடைகிறது.
புற்றுநோய் போல் வளரும் இத்தகைய விளையாட்டை தடுக்க, சரியான நேரம் வந்துவிட்டது. பெற்றோர், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார்.

பொது நலன் கருதி நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தானாக முன்வந்து நேற்று விசாரணைக்கு ஏற்றது.
மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல ஆஜராகி, 'ப்ளூ வேல் விளையாட்டை இனி யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்ததை, பிறருக்கு பகிர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

மதுரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செந்தில் இளந்திரையன் ஆஜராகி, 'விக்னேஷ் மரணம் தொடர்பாக தனிப்படை விசாரணை நடக்கிறது' என்றார்.
இதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சென்னை, ஐ.ஐ.டி., இயக்குனர், மாநில மனநல பாதுகாப்பு அமைப்பு, தற்கொலை தடுப்பிற்கான சென்னை, 'சினேகா' தொண்டு நிறுவன இயக்குனரை இவ்வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிமன்றம் தானாக முன்வந்து இணைத்துக் கொள்கிறது.

அவர்களும், டி.ஜி.பி., மற்றும் சென்னை, சி.பி.சி.ஐ.டி., - சைபர் கிரைம் போலீஸ் கமிஷனர் தகுந்த ஆலோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடும் நடவடிக்கை
இவ்வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில், நடுநிலை அறிவுரையாளராக வழக்கறிஞர் பழனிவேல்ராஜனை, நீதிமன்றம் நியமிக்கிறது. அவருடன் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், திருப்பதி செல்லசாமி கருத்துக்களை வழங்கலாம்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது பற்றி, பள்ளிக்கல்வித் துறை மற்றும் கல்லுாரிக் கல்வி இயக்குனர்கள், ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
ப்ளூ வேல் விளையாட்டுக்கு, 'லிங்க்' கொடுப்போர், பிறருக்கு பகிர்வோர் மற்றும் அதற்கு உதவி செய்வோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக உள்துறை முதன்மைச் செயலர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இணையதள சேவை வழங்கும் சமூக வலைத் தளங்களிலிருந்து, ப்ளூ வேல் விளையாட்டை நீக்குவதற்குரிய தொழில் நுட்ப வழிமுறைகளை, மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை, சி.ஐ.டி., சிறப்பு பிரிவு, எஸ்.பி., - அரவிந்தன், சி.பி.சி.ஐ.டி.,- ஏ.டி.எஸ்.பி., - லாவண்யா செப்., 7ல், நீதிமன்றத்தில் ஆஜராகி, தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025