Saturday, September 9, 2017

ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்த சிங்கப்பூர் பெண்ணுக்கு விருது
பதிவு செய்த நாள்08செப்
2017
21:23




சிங்கப்பூர்: சிங்கப்பூரில், அனாதைக்குழந்தைகள் வளர்ப்பில், 32 ஆண்டுகள், சேவையாற்றிய பெண்ணுக்கு, 'சிறந்த சமூக சேவகர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள தீவு நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்தவர், இந்திராணி எலிசபெத் நாடிசன், 77. சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், சிங்கப்பூரில், இந்திய குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அம்புரோஸ் அந்தோணி என்பவரை, இந்திராணி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து மகன், ஒரு மகள் உள்ளனர்.

குழந்தை பிரியரான இந்திராணி, பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். இதற்காக, தனியாக அனாதை இல்லம் தொடங்கவில்லை.

தன் கணவர், ஆறு குழந்தைகளுடன் வசித்து வந்த நான்கு அறைகள் அடங்கிய சிறிய வீட்டிலேயே, மற்ற குழந்தைகளையும், இந்திராணி வளர்த்தார்.
குழந்தைகள், 2 வயதானதும், அவற்றை தத்து கொடுத்து விடுவார். கடந்த, 1976ல் தொடங்கி, 2008 வரையில், 43 அனாதைக் குழந்தைகளை இந்திராணி வளர்த்து ஆளாக்கினார்.

வளர்ப்புத் தாயாக, 32 ஆண்டுகள் இந்திராணி ஆற்றிய மனிதாபிமான சேவையை, சிங்கப்பூர் பிரதமர், லீ சுன் லுாங், தன் முகநுால் பதிவில் பாராட்டி, சமீபத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், இந்திராணிக்கு, சிங்கப்பூரின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

இந்திய வம்சாவளியினருக்காக நடத்தப்படும், 'தப்லா' பத்திரிகை, இந்த விருதை வழங்கியது. விருதுடன் வழங்கப்பட்ட, 4.8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, இரண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக, இந்திராணி வழங்கினார்.

இந்திராணி கூறியதாவது:

ஒவ்வொரு குழந்தையும், என்னை விட்டுச் செல்லும்போதும் வேதனைப்படுவேன். குழந்தைகளை வளர்க்க பொறுமையும், அன்பும் தேவை; என் கணவர், ஆறு குழந்தைகள் எனக்கு உதவியாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

உடல் நிலை மற்றும் முதுமை காரணமாக, குழந்தைகள் வளர்ப்பதை, 2008ல் இந்திராணி நிறுத்தி விட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025