Saturday, September 9, 2017

பல் மருத்துவம் படிக்க ஆசை : தடுக்கிறது ஏழ்மை நிலை

பதிவு செய்த நாள்
செப் 08,2017 21:42




சென்னை: 'நீட்' தேர்வின் பலனாக பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மையால், சென்னை மாணவி கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ் மகள் ரீனா. பிளஸ் 2 தேர்வில், 983 மதிப்பெண் பெற்றார். 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், தேர்ச்சி பெற்று, 121வது இடம் பெற்றார்.
அரசு நடத்திய கவுன்சிலிங்கில், திருவள்ளூரில் உள்ள, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கல்லுாரி கட்டணமாக, 4.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். குடும்ப ஏழ்மையால், கட்டணம் செலுத்த வழியின்றி, மாணவி திணறி வருகிறார். இதனால், அவரின் மருத்துவ கனவு, கனவாக முடிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாணவி ரீனா கூறியதாவது:

என் தந்தை, அரசு அலுவலக உதவியாளராக உள்ளார். அவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்தவோ, மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவோ போதுமானதாக இல்லை. பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் பெற்றாலும், 'நீட்' தேர்வால், பி.டி.எஸ்., படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றாலே, அதை, கட்டுவது பெரிய விஷயம். இப்போது, 4.25 லட்சம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.

ஏழ்மையால், கல்லுாரியில் சேர முடிய வில்லை. சேவை மனம் உள்ள யாராவது, உதவிக்கரம் நீட்ட முன் வந்தால், நான் மருத்துவத் துறையில் சாதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 98841 14742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025