Tuesday, September 12, 2017

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


By DIN  |   Published on : 12th September 2017 02:58 AM  | 
maduraicourt
Ads by Kiosked
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே தமிழகத்தில் ஜவாஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 ஆம் வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைப் பதிவு செய்த நீதிமன்றம், இந்த வாதத்தை நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதே போல, நவோதயா பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் தெரிவிக்கையில், ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தாற்காலிக கட்டடத்தில் பள்ளி இயங்கலாம் என விதி உள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு, பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.20 கோடிவழங்கும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இது தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை மீறும் வகையில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...