Thursday, October 26, 2017


மின் மீட்டர்களில் பழுது ஏற்பட காரணம் என்ன?


வீடுகளில், மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்காக, மின் வாரியம் பொருத்தும் மீட்டர்களில், வெகு சீக்கிரத்தில் பழுது ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: தமிழக மின் வாரியம், தற்போது, 'ஸ்டேடிக்' என்ற மீட்டர் பொருத்தி வருகிறது. ஒரு முனை மற்றும் மும்முனை என, இரண்டு பிரிவுகளில், ஆண்டுக்கு சராசரியாக, 30 லட்சம் மீட்டர்கள் வாங்கப்படுகின்றன. 

டெண்டர் : இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. மீட்டர் கொள்முதல், டெண்டரில், 12 நிறுவனங்கள் வரை பங்கேற்கின்றன. அப்போது, ஒவ்வொரு நிறுவனமும், 8 மீட்டர்களை, சோதனை மாதிரிக்காக வழங்கும். 

சோதனை : அதில், 6 மீட்டரை, பெங்களூரில் உள்ள, மத்திய ஆய்வு கூடத்திற்கும், 2 மீட்டர், சென்னை, நந்தனத்தில் உள்ள, மின் வாரிய ஆய்வகத்திற்கும் அனுப்பப்படும். அங்கு, மீட்டரின் எடை, தரம், மென்பொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்படும்.

அதன் அடிப்படையில், மீட்டர் சப்ளை செய்ய, 'ஆர்டர்' தரப்படும். ஆர்டர் பெற்ற நிறுவனங்கள், மின் வாரிய கிடங்குகளுக்கு, மீட்டரை சப்ளை செய்யும். அதில், எப்போது வேண்டுமானாலும், எந்த பெட்டியில் இருந்தும், 6 மீட்டரை எடுத்து, பெங்களூரு ஆய்வு கூடத்திற்கு, மறு சோதனைக்கு அனுப்ப வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும், சோதனைக்கு தரமான மீட்டர் தருகின்றன. ஆனால், சப்ளையின்போது, தரமில்லாத மீட்டர்களை அனுப்புகின்றன. அதை, கிடங்கில் உள்ளவர்கள், முறையாக ஆய்வு செய்வதில்லை. 

கிடங்கு, பிரிவு அலுவலகங்களில், மீட்டரை முறையாக அடுக்கி வைப்பதில்லை. இஷ்டத்திற்கு துாக்கி போடுகின்றனர். இது போன்ற காரணங்களால், மீட்டரை, வீடுகளில் பொருத்தும்போது, எளிதில் பழுது ஏற்பட்டு, தவறாக ஓடுகிறது.

ஆதரவு : மின் வாரியம், ஒரு முனை மீட்டரை, 450 ரூபாய்க்கும், மும்முனை மீட்டரை, 1,200 ரூபாய்க்கும் வாங்குகிறது. மத்திய ஆய்வு கூடத்திற்கு இணையாக, மின் வாரிய பொறியாளர்கள், மீட்டரின் தரத்தை சோதிக்காமல் இருப்பதுடன், அவர்கள், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

MCC moves to lower qualifying percentile

 MCC moves to lower qualifying percentile  PG MEDICAL INTAKE HALTED  TIMES NEWS NETWORK  11.01.2026 Ahmedabad : Round 3 of PG medical counse...