Friday, October 27, 2017

தவறாக அறுவை சிகிச்சை : டீன் ஆஜராக உத்தரவு


மதுரை, அக். 27-
திருச்சி அரசு மருத்துவமனையில், பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான வழக்கில், மருத்துவ ரீதியாக விபரங்களை தெளிவுபடுத்தும் வகையில், மதுரை அரசு மருத்துவமனை டீன் ஆஜராக, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிரைவர்
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, 35 வயது பெண் தாக்கல் செய்த மனு:என் கணவர் டிரைவராக இருந்து, விபத்தில் பலியானார். எனக்கு மாதவிடாய் கோளாறு ஏற்பட்டது. 
திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றேன். ஆக., 26ல், என் கர்ப்பப் பையை அகற்றினர்; உடலில் வலி தொடர்ந்தது.
தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில், என் கர்ப்பப் பையுடன், சிறுநீர் செல்லும் குழாயை தவறாக இணைத்தது தெரிந்தது. 
இதனால், சிறுநீர் தடையின்றி வெளியேறுகிறது. இதை சரி செய்ய, தனியார் மருத்துவமனையில், நான்கு லட்சம் ரூபாய் செலவாகும்.
திருச்சி அரசு மருத்துவமனையில், கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுந்த இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனு செய்திருந்தார்.
ஆஜர்
நீதிபதி ஆர்.மகாதேவன், ''மனுதாரரின் பிரச்னை தொடர்பாக, மருத்துவ ரீதியாக சில விபரங்களை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 
''இவ்விவகாரத்தில், இந்நீதிமன்றத்திற்கு உதவ மற்றும் விளக்கம் அளிக்கும் வகையில், மதுரை அரசு மருத்துவமனை டீன் 31ல் ஆஜராக வேண்டும். அன்று மனுதாரரும் ஆஜராக வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026